வனமே உன்னை வணங்குகிறேன்..! 14 - சிலிர்ப்பூட்டும் சின்னாறு


சூழல் இணக்கச் சுற்றுலாவுக்கு நீங்கள் திட்டமிடும்போது பலரும் பல்வேறு இடங்களைப் பரிந்துரைக்கலாம். கூகுள் தேடலும் ஒரு பட்டியலை அடுக்கலாம். ஆனால், புத்தம் புதிதாக அறிவிக்கப்பட்ட ஒரு சூழல் இணக்கச் சுற்றுலா மையத்தை நோக்கியதாக உங்கள் முதல் பயணம் அமைந்துவிட்டால், அது நிச்சயமாக மறக்க முடியாத அனுபவமாக இருக்குமல்லவா?

அத்தகைய இன்ப நினைவைச் சுமக்க, சின்னாறு பயணப்படுங்கள். வழிகாட்ட நாங்கள் வருகிறோம்.

எங்கிருக்கிறது, எப்படிச் செல்வது?

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் சரியாக 36-வது கிலோமீட்டரில் உள்ளது சின்னாறு. கடந்த ஆண்டுதான் இந்த இடம் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னாறு, அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்டது. இது கேரளத்தில் உள்ள ஓர் ஆற்றின் பெயர். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வற்றாத ஆறுகளில் ஒன்று. இந்த ஆற்றின் ஒரு கரை கேரளத்தையும் மறுகரை தமிழகத்தையும் தொட்டுச் செல்கின்றன. கேரளக் கரையில் சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. அது ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் அடங்குகிறது. ஆற்றின் இந்தப் புறம் அமைந்துள்ள சூழல் இணக்கச் சுற்றுலா மையம்தான் நாம் தற்போது பயணப்படும் சின்னாறு.
அதிகம் அறியப்படாத சின்னாறு சூழல் இணக்கச் சுற்றுலா மையம் குறித்து, அமராவதி வனச் சரகத்தின் உதவி வனப் பாதுகாவலர் கணேஷ் ராம் நம்மிடம் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“2019 டிசம்பரில்தான் சின்னாறு, சூழல் இணக்கச் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டது. உடுமலை, அமராவதி வனச்சரகத்தின் இயற்கை எழிலை மக்கள் அறியவும், இங்குள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வனத் துறை சார்பில் இது தொடங்கப்பட்டது.

அமராவதி அணையை ஒட்டி தளிஞ்சி, கோடாந்தூர் என இரண்டு பழங்குடியின கிராமங்கள் அமைந்துள்ளன. புளையர், இருளர், முதுவர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் இங்கு வசிக்கின்றனர். இயல்பாகவே தன்னிறைவுடன் வாழும் பழங்குடியின மக்கள் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கிவிடாமல் இருக்கவே அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம்.

சின்னாறு சூழல் இணக்கச் சுற்றுலா மூலம் வரும் நிதியை அந்த மக்களே, மேலாண்மை செய்யும் வகையில் வங்கிக் கணக்கு தொடங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வரும் வருமானத்தை வைத்து இந்தச் சூழல் இணக்கச் சுற்றுலாத் திட்டத்தில் வேலை செய்யும் 20 பேருக்கும் சம்பளம் கொடுத்துவிடுகிறோம்” என்றார்.

சின்னாறின் சிறப்பு என்ன?

சின்னாறின் பிரதான சிறப்பம்சம் என்றால் ட்ரெக்கிங்கும், பரிசல் பயணமும்தான் என்கிறது வனத் துறை. சின்னாறு செல்லும் வழியைப் பற்றி நீங்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இது உங்களின் பயண எதிர்பார்ப்பைக் கூட்டும்.
உடுமலைப்பேட்டை பிரதானப் பகுதியைக் கடந்து சின்னாறு நோக்கிச் செல்லும் 16 கிலோமீட்டர் தூரப் பாதை, இயற்கை எழில் மிக்கது. வளைவு நெளிவுகள் இல்லாமல் நேராகச் செல்லும் அந்தப் பாதையின் இடதுபுறம் அமராவதி நீர்த்தேக்கம் உள்ளது. ஓங்கி உயர்ந்த மரங்களோ, முட்புதர்களோ மண்டிக் கிடக்காததால் சமவெளிப் பகுதியைத் தெளிவாகக் காணலாம். யானைகள், காட்டெருமைகள், சாம்பார் மான்கள், சாம்பல் அணில்கள் என கண்ணில் ஏதேனும் ஒரு கானுயிராவது பட்டுவிடும் தருணம், உங்கள் சுற்றுலா தொடங்கிவிட்டதை உணர்த்தும்.

பொறுப்புடன் செல்லுங்கள்

இந்தப் பயணம் முடிவதற்குள் நீங்கள் இரண்டு சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருக்கும். வெளியிலிருந்து எந்த ஒரு உணவுப் பொருளையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி ஏதேனும் வைத்திருந்தீர்கள் என்றால் சோதனைச் சாவடி அதை வடிகட்டிவிடும்.

சிகரெட், பீடி, மதுபாட்டில்கள் இருந்தாலும் பறிமுதல் செய்யப்படும். யாரேனும் மது அருந்தியிருப்பதாக சந்தேகம் எழுந்தால் உடனே அவர்களைப் பரிசோதனை செய்து தடுத்து நிறுத்திவிடுகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு பொறுப்பாகப் பயணப்படுங்கள். இந்தச் சின்ன மெனக்கிடல்கள்தான் சுற்றுலாவுக்கும் சூழல் இணக்கச் சுற்றுலாவுக்குமான வித்தியாசம்.

தேநீருடன் வரவேற்பு…

பொறுப்பான சூழல் இணக்கச் சுற்றுலாப் பயணியாக சின்னாறில் அடியெடுத்து வைக்கும் உங்களை, பழங்குடியின மக்கள் மணம் கமழும் தேநீருடன் வரவேற்பார்கள். அடுத்த சில நிமிடங்களில் ட்ரெக்கிங் அழைத்துச் செல்லப்படுவீர்கள். 5 கிலோமீட்டர் தூரம் ட்ரெக்கிங். அதன் முடிவில் பரிசல் பயணம் மேற்கொள்ளலாம். பரிசல் பயணத்தின்போது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டுவிடும்.

ட்ரெக்கிங்கின்போது பயணிகளுடன் வரும் வழிகாட்டிகளும், பரிசலை இயக்குபவர்களும் பழங்குடி மக்களே. காடு அவர்களின் கூடு என்பதால் எல்லா இடங்களும் அவர்களுக்கு அத்துபடியாக இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலைக்கான பறவையினங்களைப் பெயர் சொல்லி சுட்டிக்காட்டிவிடுவார்கள். வண்ணத்துப்பூச்சிகளையும், வழியில் தென்படும் மூலிகைகளையும் அடையாளம் காட்டுவார்கள். இப்படி ஒரு மரத்தைப் பார்த்ததில்லையே என்று வியந்து நின்றீர்கள் என்றால் அதன் பெயர் சொல்லி, பலனை விவரிப்பார்கள்.

உங்களுக்கு பைனாகுலர்களும் கிடைக்கும். அதன் வழியே வனத்தை ரசித்துக்கொண்டிருக்க வயிறு, பசி மணியை அடித்துவிடும். அப்போது தினை மாவு, கிழங்கு, பயறு வகைகள், பிரண்டை இன்னும் பிற மூலிகைகளோடு பழங்குடிகளின் கைப்பக்குவத்தில் சுவையான உணவு தயாராக இருக்கும். நவீனம் தொட்டுவிடாமல் இயற்கையோடு இயைந்து நிற்கும் உணவு அரங்கத்தில் அமர்ந்து உணவை ருசிக்கலாம்.

குடும்பத்துடன் செல்கிறோமே கழிவறை வசதி, குடிதண்ணீர் வசதி இருக்குமா என்றெல்லாம் சந்தேகப்பட வேண்டாம். எல்லா வசதிகளும் சிறப்பாகவே செய்து வைக்கப்பட்டிருக்கின்றன. உணவுக்குப் பின்னர் சிறிது நேரம் அங்கேயே விளையாடி மகிழ்ந்தால் மதியம் 3 மணி ஆகிவிடும். 3 மணிக்கு மேல் அங்கு யாரும் இருக்க அனுமதியில்லை. பொறுப்புடன் வனம் சென்ற நீங்கள் புதிய அனுபவத்தோடும் புரிதலோடும் வெளியே வருவீர்கள்.

முன்பதிவு முக்கியம்

சனி, ஞாயிற்றுக் கிழமைகள், விடுமுறை நாட்கள் மட்டுமே சின்னாறில் சுற்றுலாவுக்கு அனுமதி. இயற்கைக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதால் ஒரு நாளைக்கு வெறும் 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஆகையால் சின்னாறு செல்ல முன்பதிவு செய்வது முக்கியம். www.chinnarnaturetrail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அமராவதி வனச்சரகம், 04252 - 232523 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

சுற்றுலாக் கட்டணமாகப் பெரியவர்களுக்கு 500 ரூபாயும் குழந்தைகளுக்கு 200 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பரிசல் பயணம், உணவு என எல்லாமே அடக்கம். கடும் மழை வந்தாலோ, பயணத்துக்கான சூழல் அமையவில்லை என்றாலோ முன்கூட்டியே இணையத்தில் தெரிவித்துவிடுவார்கள்.

வனத்துக்கு உண்மையானவர்கள்

சின்னாறில் வாழும் பழங்குடியின மக்களைப் பற்றிப் பேசிய கணேஷ்ராம், “அவர்கள் வனத்துக்கும், வனத் துறைக்கும் உண்மையானவர்கள். எங்களின் முழு நம்பிக்கைக்குரியவர்கள். சின்னாறு இரு மாநில எல்லைப் பகுதியில் இருப்பதால் சந்தேகத்துக்குரியவர் களின் நடமாட்டம் இருந்தால் உடனே எங்களுக்குத் தெரிவித்துவிடுவார்கள். சந்தனமரக் கடத்தல்காரர்களோ,
வனவிலங்கு வேட்டைக்காரர்களோ, கஞ்சா பயிர் செய்யும் சமூக விரோதிகளோ அவர்களின் கண்களிலிருந்து தப்ப முடியாது” என்றார் பெருமிதத்துடன்!

சின்னாறு சென்று, இயற்கையுடன் இயற்கைக் காவலர்களையும் சந்தித்துவிட்டு வாருங்கள். அடுத்த வாரம் புதிய இடம் நோக்கிப் புறப்படுவோம்!

(பயணம் தொடரும்...)

x