என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழர்கள் மனம் மகிழும் வகையிலான முக்கிய அறிவிப்பு இடம்பிடித்திருக்கிறது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்த அறிவிப்புதான் அது!
முடங்கிக்கிடந்த அகழாய்வு
கீழடிக்கும் முந்தைய ஆதிச்சநல்லூர், பல ஆச்சரியங்களைக் கொண்டிருக்கும் வரலாற்று பூமி. அதனால்தான் தமிழகத்தின் தொல்லியல் ஆர்வலர்கள் ஆதிச்சநல்லூரை ‘உலக நாகரிகத்தின் தொட்டில்’ என பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தின் வைகுண்டம் அருகில் இருக்கும் ஆதிச்சநல்லூரில், 1876-ல், முதன்முதலில் அகழாய்வு தொடங்கியது. 1902-ல், தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்தியாவுக்கு வந்த அலெக்சாண்டர் ரீ, ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணியை மேற்கொண்டார். அதன் பிறகு, 110 ஆண்டுகளுக்கும் மேலாக அகழாய்வில் எவ்வித முன்னேற்றமும் இன்றித் தேங்கிப்போய்விட்டது.