கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in
வாயில் சேலையை கஞ்சியில் நனைத்து துவைத்து விறைப்பாக மடிப்பு கலையாத இஸ்திரி மணம் மாறாமல் மிக நேர்த்தியாக கட்டிக்கொண்டு இரண்டு பாதங்களில் எடுத்துவைக்கும் அடியில் இரண்டு பூமியை விலைக்குக் கேட்கும் ஆனந்தியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீங்கள் பார்த்திருக்கலாம். கறுப்பும் அல்லாத வெள்ளையும் அல்லாத மாநிறம். ஒல்லியான உடல்வாகு. இருக்கும் சொற்ப முடிகளை ஒற்றை சடையாய் பின்னித் தொங்கவிட்டு வேக வேகமாய் நடந்துபோகும் ஆனந்திக்கு ஆண் நண்பர்கள் அதிகம். ஆனாலும் உள்ளங்கையில் வெள்ளை நிற கர்ச்சீப்பை வைத்துக்கொண்டு துளி கூட மூச்சிரைக்காமல் அதி வேகமாய் நடக்கும் ஆனந்தியின் வசவுச் சொற்கள் எல்லாமே ஆண்களைக் குறித்துதான். கேட்கவே செவி கூசும் கொடூரமான கெட்ட வார்த்தைகளால் உலகின் ஒட்டுமொத்த ஆண்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் ஆனந்திக்கு அப்படி என்னதான் பிரச்சினை? பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள கற்பகம் டீ ஸ்டால் வாசலில் நான்கு நண்பர்களுடன் நின்றபடி டீ குடித்துக்கொண்டிருக்கும் ஆனந்தி டிகிரி முடித்தவர். பால்வாடி ஆசிரியையாகப் பணி புரிந்தவர். அவரின் குழப்பமான மன நிலையைக் கண்டு நிர்வாகமே அவரைப் பணியிலிருந்து விலக்கியது.
“அவங்க அம்மா ஓடிப்போனதிலேர்ந்து இப்படித்தான்’’ “அவங்கப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அந்த சித்தி பண்ணுன கொடுமையிலதான் இப்படி ஆச்சு’’ “ஆனந்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இதோட திமிரு தாங்க முடியாம ஆனந்தி புருசன் ஓடிட்டாரு. அதுலேர்ந்து இப்படித்தான்’’ ‘‘ஆனந்தியோட அப்பாவே ஆனந்திய... அதுல பைத்தியமானதுதான் இந்தப் புள்ள’’ எவ்வித பதிலும் எதிர்பாராத இவ்வுலகம் ஆனந்தி குறித்து எழுப்பிய கேள்விகளும் கதைகளும் ஆனந்தியின் காதிலும் விழுந்திருக்கும். ஆனந்தியின் உலகம் கேள்விகள் இல்லாதது. ஆனந்தியின் வாழ்வில் சற்றே பின்னோக்கிச் சென்று பார்த்தால் ஏன் அவர் இப்படி ஆனாரென்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும். அதன் பின் ஆனந்தி குறித்த சுவாரசியங்களுக்கு எந்த உத்தரவாதமும் தர இயலாது என்பதாலே சில ரகசியங்களை ரகசியங்களாகவே பாதுகாத்து வருகிறார்கள் வேடிக்கை மனிதர்கள்.
ஆனந்திக்கு வீடுண்டு. அவரை நேசிக்கும் அல்லது அவர் நேசிக்கும் யாருமற்றவர்கள் நிறைந்த வீடு. காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் அவர் எத்தனை கிலோமீட்டர் தூரம் என்றாலும் நடந்து கடப்பவர். பசி மறக்க அவ்வப்போது சில நண்பர்களின் தேநீர் விசாரிப்பு உண்டு. டீக்கடை வாசலில் மிக மென்மையான குரலில் பேசிக்கொண்டிருக்கும் ஆனந்தியின் வார்த்தைகளில் இந்தியாவின் பொருளாதாரமும் தேர்தல் அரசியலும் குடிமக்கள் பிரச்சினையும் சர்வ சாதாரணமாக வந்து விழும். அப்படியென்றால் ஆனந்தி நடிக்கிறாரா... நடிக்கிறார் என்றால் எதற்காக நடிக்க வேண்டும்? இப்படி மட்ட மதியச் சாலையில் எல்லோர் காதிலும் விழும்படியாய் அசிங்கமான வார்த்தைகளால் அனைவரையும் திட்டிக்கொண்டு நடை போடும் ஆனந்திக்குத் தெரியாதா இது எவ்வளவு பெரிய அவமானமென்று..? எதனாலோ இந்த உலகம் அவரின் அலட்சியப் புள்ளியில் தேங்கியதன் விளைவு எவரையும் மதிக்காது தனக்கான கூட்டுக்குள் தன்னைச் சுருக்கிக்கொண்ட அவலம்.