மஹா பெரியவா 49: அருளே ஆனந்தம்


பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

எப்படி வாழ்ந்தால் வாழ்க்கையில் சந்தோஷம் நீடித்திருக்கும்?

இதுபற்றி அழகாக, எளிமையாகச் சொல்வார் மகா பெரியவா!

“அதிக வசதிகளை விரும்பாமல், நாடாமல் இருந்தாலே போதும். சவுகரியங்களை எந்த ஒரு நாளிலும் தேடிப் போகக் கூடாது’’ என்பார்.

‘இந்தக் காலத்தில் இது எப்படி சாத்தியம் ... வசதிகள் இல்லாமல் எப்படி வாழ்வது?’ என்று நினைக்கக் கூடாது.
சாத்தியமாகாத விஷயம் என்று எதுவுமே கிடையாது. எல்லாவற்றையும் சாத்தியம் ஆக்கலாம். அதற்கு மனம் நம்முடன் ஒத்துழைக்க வேண்டும்.

இதுகுறித்து மகான் சொன்னதைப் பார்ப்போம்.

“எல்லோரும் ஆசைப்படுகிறபடி வசதி, அதற்கேற்ற சவுகரியங்களைப் பண்ணித் தருவது என்று ஆரம்பித்துவிட்டால், அதற்கு முடிவே கிடையாது. காரணம், ஒரு வசதி கிடைத்துவிட்டால் அதோடு மனம் திருப்தி அடையாது. அடுத்தடுத்த வசதிகளை நினைத்து மனதில் ஆசைகள் பெருகிக்கொண்டே போகும்.

அமெரிக்காவில் வசிக்கிற எல்லோரும் கார், பங்களா, ரேடியோ, டெலிபோன் என்று பலதையும் வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் அங்கே வாழ்கிற ஜனங்கள் திருப்தி அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தமா?

இல்லை! அங்கேதான் நம்மைவிட அதிக அளவில் அதிருப்தி நிலவிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் கொலை, தற்கொலை, மயக்க மருந்து சாப்பிட்டுவிட்டுத் தன்னை மறந்து கிடப்பது என்றெல்லாம் அங்கே நடந்துகொண்டிருக்கின்றன.

எல்லோருக்கும் கார் தேவை என்றாலும், இன்றைக்கு இருக்கிற கார் நாளைக்கு இல்லை. புதுப்புது ‘மாடல்’கள் இன்னும் ஜாஸ்தி சவுகரியங்களோடு வந்தபடியே இருக்கின்றன. எனவே, இப்போது சேர்ந்துள்ள ‘டாலர்’ பணம் போதவில்லை. அந்தப் புது ‘மாடல்’ கார் வாங்குவதற்கு இன்னும் சம்பாதிக்க வேண்டும். அப்புறம் அதைவிட விலை ஜாஸ்தியாக, இன்னும் ஜாஸ்தி சவுகரியங்களோடு இன்னொரு ‘மாடல்’ வரும். அப்புறம் வீட்டுக்கு வீடு பறப்பதற்குக்கூட ‘பிளேன்’கள் வந்தாலும் வரும்.”

பெரியவா சொன்னது இன்றைக்குக் கிட்டத்தட்ட அமெரிக்காவில் வந்துவிட்டது என்றே சொல்லலாம். சாலைப் போக்குவரத்தில் இருக்கிற நெருக்கடி காரணமாக விமானங்களில் ‘ஆபீஸ்’ செல்கிறார்கள் என்றெல்லாம் செய்திகளைப் படிக்கிறோம்.
மனிதர்களுடைய ஆசைக்கும் வசதிகளைப் பெருக்கிக்கொள்வதற்கும் எல்லை கிடையாது. ஏனென்றால், தான் வாழ்ந்து வருகிற வாழ்க்கையில் எதுவரை சம்பாதித்தால் போதும் என்பது மனிதனுக்குப் புரியவில்லை.

எதிர்காலத்தின் தேவையைப் புரிந்தோ, புரியாமலோ அதையும் தாண்டி சம்பாதித்துக்கொண்டே இருக்கிறான். தான் சம்பாதித்த பணத்தைத் தன் காலத்துக்குள் அவன் அனுபவித்துவிடுகிறானா என்றால், பல சந்தர்ப்பங்களில் அதுவும் இல்லை. அத்தனை சொத்து சுகம் இருந்தும் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு பலவற்றையும் அனுபவிக்காமலே இறந்துபோகிறான். கடைசியில், இவன் சம்பாதித்துவைத்ததை யாரோ அனுபவிக்கிறார்கள்.

நடுத்தர வர்க்க நிலைக்குக் கீழே உள்ளவர்கள், இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்துவிடுகிறார்கள். எல்லாவற்றிலும் ‘காம்ப்ரமைஸ்’ ஆகிவிடுகிறார்கள். ஆனால், அதற்கும் மேலே உள்ளவர்கள்தான் ‘இன்னும் உயரே போக வேண்டும்’ என்று இல்லாத சிறகுகளை விரிக்கிறார்கள். சிலர் சாதிக்கிறார்கள். பலர் வறட்டு கவுரவத்துக்காகப் போராடுகிறார்கள்.”
 மகா பெரியவா சொல்வதை இன்னும் பார்க்கலாம். எத்தனை தெளிவாக விவரித்திருக்கிறார், படியுங்கள்!
“முதலில் வெறும் குடிசைதான். அப்புறம் ஓடு போட்டோம். அப்புறம் ‘சிமென்ட்’ சுவர். ஒட்டுக் கட்டிடம். அதற்கப்புறம் ‘சிமென்டி’லேயே ‘நைஸ்’ ரகங்கள். சாணி போட்டு மெழுகின தரை காரையானது. அப்புறம் ‘சிமென்ட்’ தரை. பிறகு ‘மொசைக்’. இப்போது இன்னும் வழுவழுப்பான ரகம் என்று மாறிக்கொண்டே போகிறது. இதற்கு முடிவு என்பதே இல்லை.
துணியை எடுத்துக்கொண்டாலும் நாளுக்கு நாள் புதுப்புது தினுசுகள். எல்லாவற்றையும் வாங்கியாக வேண்டும் என்று ஆசை. இப்போது இருப்பதே சவுகரியமாக இருந்தாலும் நம்முடைய புத்தி சாதுரியத்தால், இதைவிட சவுகரியமான சாதனங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே போகிறோம். விளைவு என்ன தெரியுமா? எப்போதும் நாம் இருப்பது அசவுகரியம்தான் என்று ஆக்கிக்கொண்டு, அதைவிட சவுகரியத்துக்காகத் தவித்தபடி இருப்போம். திருப்தியும் நிம்மதியும் இல்லாமல் மேலே மேலே சம்பாதித்துக்கொண்டேதான் போவோம்.

பற்றி எரிகிற நெருப்பைப் பெட்ரோல் ஊற்றி அணைத்துவிடலாம் என்று நினைக்கிற மாதிரிதான், புதுப்புது சாதனங்களைக் கண்டுபிடித்து ஆசைகளைப் பூர்த்தி செய்துவிடலாம் என்று நினைப்பதும்.

மனிதர்களுக்கு இப்போது வருகிற இதுபோன்ற சுபாவங்கள், நம் முன்னோர்களான மகரிஷிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் மனிதன் தன் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதைத் தவிர, அதைத் தாண்டிப் போகவே கூடாது என்று ‘அட்வைஸ்’ பண்ணி வைத்தார்கள்.”

 வசதிகளைப் பெருக்கிக்கொண்டு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறவன் என்ன செய்கிறான்? வருகிற சம்பளம் அவனுக்குப் போதவில்லை. அவசியமே இல்லாத தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குக் கடன் வாங்குகிறான். கடனை அடைக்கக் கடன் வாங்குகிறான். கஷ்டப்பட்டுத் தான் சேர்த்துவைத்த ஒவ்வொன்றையும் இழக்கிறான்.

கடன் இல்லாமல் எப்படி வாழ்வது? இன்றைக்குப் பலரது கேள்வியும் இதுதான்.

மகா பெரியவா தொடர்பான ஒரு அனுபவத்தின் மூலம் இதைப் பார்க்கலாம்.

வடசென்னைப் பகுதியில் எண்ணூர் என்று ஒரு பகுதி. கடற்கரைப் பகுதி. அங்கே படகில் பயணித்து அந்த இடத்தை அடைய முடியும். இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம் போல் பார்ப்பவர்கள் கண்களை அந்த இடம் கவரும். அத்தகைய இடத்தில் ஒருமுறை மகா பெரியவா முகாமிட்டிருந்தார்.

அது நவராத்திரி காலம். இந்த நாட்களில் மகா பெரியவா நடத்துகிற பூஜையைத் தரிசிக்க திரளான பக்தர்கள் குவிவார்கள். அந்த வகையில் எண்ணூருக்கு அருகே மகான் முகாமிட்டிருந்த இடத்தையும் மிகுந்த சிரமத்துடன் அடைந்தார்கள். மகா பெரியவாளை அடைந்த பின் சிரமத்தை மறந்தார்கள்.

பொதுவாக, பெரியவா மவுனத்தை அதிகம் கடைப்பிடிப்பது வழக்கம். அதுவும் நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் மவுனம்தான். சைகையால்கூட எந்த உத்தரவும் கொடுக்க மாட்டார். தனிப்பட்ட முறையில் ஆசிகள் யாருக்கும் கிடையாது. அது மட்டுமல்ல, ஆகாரமும் எடுத்துக்கொள்ள மாட்டார்.

அதே வேளையில் நவராத்திரி ஒன்பது நாட்களும் முடிந்த பின், அடுத்த நாள் விஜயதசமி. அன்றைய தினம் காலை பூஜையை முடித்துக்கொண்டு மவுனம் கலைப்பார். அன்றைக்கு அங்கே கூடி இருக்கின்ற பக்தர்கள் மத்தியில் ஆசிர்வாத உரை வழங்குவார்.
நவராத்திரி முதல் நாள் வந்த பக்தர்கள் எவரும் அங்கிருந்து நகர மாட்டார்கள். ஒன்பது நாட்களும் உடன் இருந்து மகான் நடத்துகிற பூஜைகளைத் தரிசித்து பத்தாம் நாள் அவர் நிகழ்த்துகிற ஆன்மிகப் பேச்சைக் கேட்டுவிட்டுத்தான் கிளம்புவார்கள்.

நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் மவுனத்துடன் இருந்த மகான் விஜயதசமியன்று பேசப்போகிற ஆன்மிக உரையைக் கேட்க வேண்டும் என்ற பரவசத்தில் பக்தர்கள் மகா பெரியவாளுக்கு முன் அமர்ந்திருந்தார்கள்.

விஜயதசமி பூஜை முடிந்த பின் ஒரு மரத்தடியில் அமர்ந்து மகா பெரியவா பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருக்கு முன்னால் ஒரு மைக்கும் வைக்கப்பட்டிருந்தது. கீழே தரையில் பக்தர்கள் பேரானந்தத்துடன் காணப்பட்டார்கள்.
மகானுக்கு வெகு அருகே ராமமூர்த்தி சர்மா என்பவர் அமர்ந்திருந்தார். ராமமூர்த்தி சர்மாவுக்கு அருகே அவரது நண்பரான வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் காணப்பட்டார். இருவரும் சேர்ந்தே வந்திருக்கிறார்கள்.

ராமமூர்த்தி சர்மாவுக்குப் பிரதானம்… வைதீகப் பணி.

தனக்கு முன்னால் அமர்ந்திருந்த பக்தர்களைப் பார்வையால் அளைந்தவாறே இடமும் வலமும் தலையைத் திருப்பிக்கொண்டே வந்தார் பெரியவா.

சட்டென்று ராமமூர்த்தி சர்மாவின் மீது மகானின் பார்வை பதிந்தது.

ஒன்பது நாட்கள் மவுனத்தைப் பூர்த்திசெய்யும் விதமாக ஒரு வைதீகர் மீது மகானின் நிலைத்த பார்வை!

ராமமூர்த்தி சர்மா பிரமித்துப் போனார். மனம் ஆர்ப்பரித்தது. மகானின் பார்வை முழுக்கத் தன் மீதுதான் என்பதை உணர்ந்தவர் மெல்ல நெளிந்தார்.

(ஆனந்தம் தொடரும்...)

x