மருத்துவம் வியாபாரமாகிவரும் சூழலில், சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைதான் இறுதி நம்பிக்கை. நோயின் வேதனையில் சிக்கி, மரணத்தின் கடைசி மணித்துளிகளில் இருக்கும் ஏழை நோயாளிகளுக்கு, அரசு மருத்துவர்
தான் கடவுள். எனினும், அரசு மருத்துவர்கள் நோயாளிகளை நடத்தும் விதம் குறித்த விமர்சனங்களும் உண்டு. இவை அனைத்
தையும் தாண்டி, மருத்துவத்தை சேவையாக பாவித்துச் செயல்படும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களைப் பற்றிய படம்தான் ‘ரெட் பியர்ட்’ (Red Beard). அகிரா குரோசாவாவின் இயக்கத்தில் வெளிவந்து ஜப்பான் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது ‘ரெட் பியர்ட்’.
செந்தாடி மருத்துவர்
1800-களில் நடக்கும் கதை இது. டச்சு மருத்துவப் படிப்பைப் படித்துவிட்டு ஓர் ஆண்டு பயிற்சிக்காக டோக்கியோவின் கொஷிகாவா என்ற கிராமத்தின் அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்படுகிறான் நொபுரொ யஸுமொட்டொ. ஜப்பானிய ராஜ பரம்பரையான ஷோகன் குடும்பங்களுக்கான மருத்துவராகப் பண்புரியும் கனவுடன் இருப்பவன் யஸுமொட்டொ. மருத்துவரான தனது தந்தையும், தன் வருங்கால மாமனாரும் தங்களுடைய செல்வாக்கால் ஒரு பெரிய மருத்துவமனையில் தனக்குப் பயிற்சி ஏற்பாடு செய்திருப்பார்கள் என்ற கனவுடன் வரும் யஸுமொட்டொவுக்குப் பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சும்.
முழுக்க முழுக்க ஏழைகளுக்கான சிறிய மருத்துவமனை அது. க்யோஜோ நீடே என்ற திறமையான மருத்துவரின் தலைமையில் அந்த மருத்துவமனை இயங்கிக்கொண்டிருக்கும். க்யோஜோ நீடேவின் தாடி செந்நிறத்தில் இருப்பதால் அவரை அனைவரும் ரெட் பியர்ட் என்றழைப்பார்கள். கரடுமுரடான தோற்றமும் நடத்தையும் கொண்ட ரெட் பியர்ட், உள்ளத்தால் மென்மையானவர். நோயாளிகளின் மேல் எல்லையற்ற கருணை கொண்டவர். கதியற்ற ஏழைகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர்.
மாறுதல் அடையும் மனம்
ஆரம்பத்தில் வேண்டாவெறுப்பாக, ரெட் பியர்டின் கட்டாயத்தின் பேரில் அங்கே இருக்க சம்மதிப்பான் யஸுமொட்டொ. ஆனால், தன்னுடைய பணிகளை வேண்டுமென்றே சரியாகச் செய்ய மாட்டான். போகப்போக அங்கே இருக்கும் நோயாளிகள் சிலரின் கதைகளைக் கேட்ட பிறகு, வாழ்க்கை மீதான அவனது புரிதல் மாறிப்போகும். அவன் உடலளவில் குணப்படுத்த வேண்டிய நோயாளிகள் மூலம், பிழைகள் நிறைந்த தன்னுடைய மனம் குணப்படுத்தப்படுவதை உணர ஆரம்பிப்பான்.
பெரும் சோகத்தை தன்னுள் புதைத்து அதை யாருக்கும் சொல்லாமல், புற்றுநோய் நுரையீரலை அரித்து, உருக்குலைக்கும் வேதனையைக்கூட வாய் திறந்து அழுது ஆற்றாமல் மவுனமாக மரணிக்கும் ஒருவன்; ஏழ்மை நிலையில் இறந்துபோன தன் மனைவியை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டு ஊருக்காக ஓடி ஓடி உழைத்து, அந்த உழைப்பால் தன் உடலை உருக்குலைத்துக்கொண்டு மரணத்தை முத்தமிட்டவன் என்று அவன் பார்க்கும் மனிதர்கள் அவன் மனதில் அமைதிப்படுத்தவியலாத சலனத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.
மருத்துவச் சேவை எவ்வளவு புனிதமானது என்ற புரிதல் யஸுமொட்டொவுக்கு வரும். அவன் இத்தனை நாள் வெறுத்த ரெட் பியர்டின் மேல் எல்லையற்ற மரியாதை உருவாகும். இறுதியாக, ரெட் பியர்டும், யஸுமொட்டொவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி ஒட்டோயோவை மீட்டெடுப்பார்கள். உடலாலும் மனதாலும் சிதைவுக்குள்ளாகி இருக்கும் அந்தச் சிறுமியைக் குணப்படுத்தச் சொல்லி யஸுமொட்டொவுக்குக் கட்டளையிடுவார். அவள்தான் அவனது முதல் நோயாளி.
படத்தின் இரண்டாவது பாதி முழுக்க, யஸுமொட்டொ எப்படி ஒட்டோயோவைக் குணப்படுத்தினான், முறிந்துபோன அவனது திருமணம் என்னவானது, பயிற்சிக் காலம் முடிந்து அவனது ஆசைப்படி அவன் ஷோகன் பரம்பரைக்கு மருத்துவர் ஆனானா என்பதைக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் குரோசாவா.
கறுப்பு வெள்ளைக் கவிதை
1965-ல் வெளிவந்த இப்படம் அக்காலகட்டத்தில் உலகளவில் வெளிவந்துகொண்டிருந்த படங்களைவிட, தொழில்நுட்ப ரீதியாகப் பன்மடங்கு மேம்பட்ட படைப்பாக இருந்தது. கறுப்பு வெள்ளை நிறத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வெளிச்சத்தையும், நிழலையும் பின்னிப் பிணைந்து படைக்கப்பட்ட காட்சிகள் இன்றும் இயக்குநர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் பாடமாக இருக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்குப் பின்னணி இசையே இருக்காது.
இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் மிகவும் சன்னமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். காட்சியே கவித்துவமாக இருப்பதால் அங்கே இசை அவசியம் என்றே பார்ப்பவர்களுக்குத் தோன்றாது. மருத்துவமனையின் ஒளி மங்கிய அறைகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் குரோசாவா என்ற சினிமா மேதையின் திறமைக்கு இன்றும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
இத்திரைப்படம் பழம்பெரும் ஜப்பானிய எழுத்தாளர் ஷுகோரோ யமாமொட்டோவின் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது. பாலியல் விடுதியிலிருந்து மீட்கப்படும் ஒட்டோயோவின் கதை, ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி எழுதிய ‘ஹுமிலியேட்டட் அண்ட் இன்ஸல்டட்’ என்ற நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டது.
முடிவுக்கு வந்த நட்பு
இத்திரைப்படத்தில் ரெட் பியர்டாக நடித்திருக்கும் டொஷிரோ மிஃவ்யூன், குரோசாவாவுடன் பணியாற்றிய கடைசிப் படம் இதுதான். இதற்கு முன்பு குரோசாவா இயக்கிய பதினாறு படங்களிலும் மிஃவ்யூன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குரோசாவா படங்களின் ஆதர்ச நாயகன் என்றே மிஃவ்யூனைச் சொல்லலாம். ‘ரெட் பியர்ட்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர்களின் கூட்டணி முறிந்தது.
1960-களில் புராணக் கதைகளும், துப்பாக்கிகளுடன் அதகளம் செய்யும் கௌபாய் கதைகளும் சூழ்ந்திருந்த உலக சினிமாவில், ஏழை மக்களின் ஜீவமரணப் போராட்டத்தின் வேதனையையும், வலியையும் யதார்த்தமாகப் பதிவுசெய்த ‘ரெட் பியர்ட்’ திரைப்படம், எஞ்சி நிற்கும் மனிதத்தின் மீது நம்பிக்கைகொள்ளச் செய்யும் அழகான படைப்பு.
ஏழைப் பங்காளனான மருத்துவரைப் பற்றிய படத்தை இந்த வாரம் பார்த்தோம். ஒரு மருத்துவர், ஒரு நாட்டின் சர்வாதிகாரியுடன் மோத நேர்ந்தால் என்னவாகும்? அடுத்த வாரம் பார்ப்போம்.