போர்முனை டு தெருமுனை 24: அழைக்கிறது டி.ஆர்.டி.ஓ.


‘இன்று இளம் ராணுவ விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்திருக்கிறீர்கள். படிப்படியாகப் பதவி உயர்வு கிடைக்கும். இந்தியக் குடியரசுத் தலைவர் வரை பதவி உயர்வு உண்டு’ என நான் பணியில் சேர்ந்த முதல் நாள், ராணுவ விஞ்ஞானிகளுக்கான பயிற்சி வகுப்பில் 
வேடிக்கையாகக் குறிப்பிட்டனர்.

டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் தலைவராக இருந்த ஏ.பி.ஜெ அப்துல் கலாமைக் குறிப்பால் உணர்த்தும் வரிகளாக இருந்தாலும், பல தொழில்நுட்பத் தலைவர் களையும் அறிவியல் ஆளுமைகளையும் நாட்டுக்கு அளித்த நிறுவனம் டி.ஆர்.டி.ஓ.

டி.ஆர்.டி.ஓ நிறுவனம்

1958–ல் தொடங்கப்பட்ட டி.ஆர்.டி.ஓ நிறுவனம், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்களைக் கொண்டது. போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், ராணுவ பீரங்கிகள், போர்க்கப்பல் - நீர்மூழ்கித் தொழில்நுட்பங்கள், உலோகத் தொழில்நுட்பங்கள், மீத்திறன் கணினி (Super Computer), உயர் அறிவியல் தொழில்நுட்பங்கள், மின்னணுத் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, அடிப்படை அறிவியல் எனப் பரந்துபட்ட துறைகளில் களமாடி வருகிறது டி.ஆர்.டி.ஓ.
1980-களில் ‘ஒருங்கிணைந்த வழிகாட்டப்பெற்ற ஏவுகணை மேம்பாட்டு நிரல்’ (Integrated Guided Missile Development Program) மூலமாக ப்ரித்வி, ஆகாஷ், த்ரிஷூல், நாக் ஆகிய ஏவுகணைகளை உருவாக்கி வரலாறு படைத்தது டி.ஆர்.டி.ஓ. அக்னி ஏவுகணையும் பிரமோஸ் ஏவுகணையும் இந்நிறுவனத்தின் படைப்புகளே.

உயரம் தொட்ட விஞ்ஞானிகள்

டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பதவி, தலைவர் (Chairman, DRDO) என்றழைக்கப்படுகிறது. முன்பு இந்தப் பதவியில் இருந்த எம்.ஜி.கே மேனன், ராஜா ராமண்ணா ஆகியோருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. முதலாமவர் இந்திய அறிவியல் தொழில்நுட்ப இணை அமைச்சராகவும், இரண்டாமவர் இந்தியப் பாதுகாப்பு இணை அமைச்சராகவும் பின்னாளில் பதவி வகித்தவர்கள்.

உலகின் அதிவேகச் சீரியங்கு ஏவுகணை (Cruise Missile), பிரமோஸ். இந்த ஏவுகணையை உருவாக்கிய இந்திய-ரஷ்யக் கூட்டு நிறுவனமான ‘பிரமோஸ்’ விண்வெளி நிறுவனத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாகச் சேவையாற்றியவர் ராணுவ விஞ்ஞானி ஆ.சிவதாணுபிள்ளை. (ஏன் ‘பிரமோஸ்’ எனப் பெயரிடப்பட்டது தெரியுமா? இந்தியாவின் பிரம்மபுத்ரா, ரஷ்யாவின் மோஸ்க்வா (Moskva) நதிகளின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்ட பெயர்தான் பிரமோஸ் –BrahMos!).

ராணுவ விஞ்ஞானிகளின் தேச சேவையைப் பாராட்டி அவர்களுக்குப் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுவதும் வழக்கம்.

போர்த் தொழில் பெண்கள்

ராணுவ ஆராய்ச்சித் துறையிலுள்ள ஏழு முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் இரண்டு துறைகளின் தற்போதைய தலைவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிற ஆய்வு நிறுவனங்களை ஒப்பிடும்போது பொது இயக்குநர் (Director General) மற்றும் இயக்குநர் (Director) பதவிகளில் அதிகம்  பெண் விஞ்ஞானிகளை அமர்த்தி அழகு பார்க்கும் நிறுவனம் டி.ஆர்.டி.ஓ.
அக்னி புத்ரி, ஏவுகணைப் பெண் என ஊடகங்களால் கொண்டாடப்படும் டெஸ்ஸி தாமஸ் உள்ளிட்ட ராணுவப் பெண் விஞ்ஞானிகள், போர்த் தொழில்நுட்பங்களில் சரித்திர சாதனைகளைப் படைத்துவருகிறார்கள்.

டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானியாகலாம்

டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பல வழிகள் உண்டு.

முதல் வழி: டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அமைப்பான ஆர்.ஏ.சி (Recruitment and Assessment Centre-RAC), விஞ்ஞானிப் பணிக்கான தேர்வுகளை நடத்துகிறது. பொறியியல் பட்டதாரிகள், அறிவியல் முதுநிலைப் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கேட் (GATE) தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

(மேலும் விவரங்களுக்கு, பார்க்கவும் https://rac.gov.in)

இரண்டாம் வழி: ஐ.ஐ.டி, என்.ஐ.டி உள்ளிட்ட சில கல்வி நிலையங்களில் வளாகத் தேர்வின் (Campus Interview) மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விஞ்ஞானிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதுண்டு.

மூன்றாம் வழி: டி.ஆர்.டி.ஓ  மாணவ உதவித்தொகைத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகையோடு படிப்பை முடித்தபிறகு விஞ்ஞானி வேலையும் வழங்கப்படுகிறது. டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் விமானவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியம் (Aeronaurical Research and Development Board-AR&DB) தேர்வுசெய்யப்பட்ட பொறியியல் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகையை வழங்கிவருகிறது. படிப்பை முடித்த பிறகு விஞ்ஞானித் தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள் பணி நியமனம் பெறுவார்கள். சென்னை எம்.ஐ.டி (Madras Institute of Technology) உள்ளிட்ட சில நிறுவனங்களில் விமானவியல் துறையில் பட்டம் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நான்காம் வழி: பொறியியல் – அறிவியல் முதுநிலைப் பட்டதாரிகள். முனைவர் பட்டம் பெற்றவர்கள் மூத்த விஞ்ஞானிகளாகப் பக்கவாட்டு நுழைவு (Lateral Entry) மூலம் விஞ்ஞானியாகச் சேரலாம். பொறியியல் பட்டதாரிகளுக்கும் இப்படிப்பட்ட வாய்ப்புகள் வருவதுண்டு.

ஐந்தாம் வழி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று சிறப்பு வேலைவாய்ப்புகள் உண்டு. அறிவியல்-தொழில்நுட்பத் துறைகளில் கல்வித் தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகும்.

இவை தவிர இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship), முதுநிலை ஆராய்ச்சியாளர் (Senior Research Fellowship), இணை ஆராய்ச்சியாளர் (Research Associate) உள்ளிட்ட தற்காலிக ஆராய்ச்சி வாய்ப்புகளும் உண்டு.

எந்தெந்தப் பாடப்பிரிவுகள்?

இயந்திரப் பொறியியல், மின்னியல், கட்டிடவியல், கருவியியல், மின்னணு-தொடர்பியல், கணினி அறிவியல், உலோகவியல், விமானப் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களும் இயற்பியல், வேதியல், கணிதம் ஆகிய அறிவியல் துறைகளில் முதுநிலை அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களும் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் விஞ்ஞானியாக விண்ணப்பிக்கலாம். பிற பாடப்பிரிவுகளுக்கும் தேவைக்கேற்ப அவ்வப்போது பணி வாய்ப்புகள் வருவதுண்டு.

பொறியியல் பட்டயப்படிப்பு (Diploma), ஐ.டி.ஐ படித்தவர்களுக்கும் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உண்டு. இது தவிர கணக்கியல், நிர்வாகம் உள்ளிட்ட பிற துறைகளில் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் உண்டு.

மாணவிகளுக்கு உதவித்தொகை

டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் விமானவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியம், பொறியியல் பட்டம் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவிகளுக்காகச் சிறப்பு உதவித்தொகைத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. விண்வெளி, விமானவியல், ராக்கெட் தொழில்நுட்பம், விமானப் பொறியியல் படிக்கும் முதலாண்டு மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஜே.ஈ.ஈ-முதன்மைத் தேர்வு (JEE-Mains), கேட் (GATE) தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவிகள் 
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். (பார்க்க https://rac.gov.in)

இளைஞர்களுக்கு ஊக்கம் 

பொறியியல் முதுகலைப் பட்டம், இளநிலைப் பட்டம் மற்றும் பட்டயக் கல்வி பெறும் மாணவர்கள் தொழிற்பயிற்சிக்காகவும், படிப்புக்கான திட்ட வேலை (Project Work) செய்யவும் டி.ஆர்.டி.ஓ நிறுவனங்களில் வாய்ப்புகள் உண்டு.

புதுமையான யோசனைகளோடு தொழில்முனைவில் ஈடுபடும் ஸ்டார்ட்-அப் இளைஞர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகளோடு நிதி உதவியும் செய்கிறது டி.ஆர்.டி.ஓ. இதற்காகத் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (Technology Development Fund) உருவாக்கப்பட்டுள்ளது. (மேலும் விவரங்களுக்கு https://tdf.drdo.gov.in)

ராணுவப் பல்கலைக்கழகம்

டி.ஆர்.டி.ஓ நிறுவனம் ராணுவத் தொழில்நுட்பங்களைப் போதிக்க பல்கலைக்கழகத்தை நடத்திவருவது பலருக்குத் தெரியாது. புணே நகரிலுள்ள ‘ராணுவ உயர்தொழில்நுட்ப நிறுவனம்’ (Defence Institute of Advanced Technology) என்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகம், ஆசியாவின் குறிப்பிடத்தக்க ராணுவத் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும்.

முதுநிலைப் பொறியியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் இங்கு உண்டு. விருப்பமுள்ள மாணவர்கள் இதில் சேரலாம்.
ராணுவ நுட்பங்களை நோக்கராணுவ விஞ்ஞானிகளின் சுவாரசியமான படைப்புகளையும் தொழில்நுட்பங்களையும் பொதுமக்கள் நேரில் பார்ப்பது எப்படி? இந்திய அறிவியல் மாநாடு, இந்தியத் தொழில்நுட்ப மாநாடு, பாதுகாப்புக் கண்காட்சி, விமானக் கண்காட்சி உள்ளிட்ட தொழில்நுட்பக் கண்காட்சிகளில்  டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் படைப்புகளும், தொழில்நுட்பங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் இந்தக் காட்சிகளைப் பார்வையிடலாம். பள்ளிக்கூடங்கள் மாணவ, மாணவி
களை இக்காட்சிகளுக்கு அழைத்துச் செல்லலாம். ராணுவ விஞ்ஞானிகளோடு கலந்துரையாட இது நல்ல வாய்ப்பாக அமையும்.
அறிவியல் மாநாடுகளில் நான் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ராணுவத் தொழில்நுட்பங்களை விளக்கி அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளேன். இது தவிர சில சிறப்பு ராணுவத் தொழில்நுட்பக் கண்காட்சிகளும் ராணுவ விஞ்ஞானிகளால் நடத்தப்படுவதுண்டு. இவை பற்றிய தகவல்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியிடப்படும். இவற்றிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம்.

இந்தியா ஜெயிக்கும்!

பொதுவாக ராணுவத் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் பொதுவெளியில் எழுதப்படுவதில்லை. அதிலும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் பதிவுகள் அறவே இல்லை. ஆயுதம் ஏந்தி மக்களுக்காக எல்லையில் உழைக்கிற சீருடை 
வீரர்களைப் போல, கண்ணுக்குத் தெரியாத ஆய்வுக்கூடங்களில் அறிவாயுதம் ஏந்தி எல்லையில்லாமல் உழைக்கிற ராணுவ விஞ்ஞானிகளையும், அவர்தம் பங்களிப்பையும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு ‘போர்முனை டு தெருமுனை’ எழுதப்பட்டது.

இந்திய மொழிகளில் இது முதல் முயற்சி. இந்த முயற்சியின் மூலம் பெரியவர்களுக்கு அறிவியலின் ஆச்சரியங்களும், இளையோருக்கு நம்பிக்கை நாற்றுகளும், சிறுவர் சிறுமியர்களுக்கு வெளிச்ச விதைகளும் ஊன்றப்பட்டிருக்கின்றன என நம்புகிறேன்.

அவை வளரும். இந்தியா நிச்சயம் ஜெயிக்கும்!

(நிறைவடைந்தது)

x