1932 அக்டோபர் 15-ம் தேதி, இந்திய வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் துளிர்த்தது. அன்றுதான் மூன்று இருக்கைகளைக் கொண்ட ஒற்றை இன்ஜின் விமானம் ஒன்று கராச்சியிலிருந்து புறப்பட்டு, அகமதாபாத் வழியாக மும்பையின் ஜுஹு விமான நிலையத்தை வந்தடைந்தது. ரேடியோ வசதி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் ஏதுமின்றி, ஒரு அல்டிமீட்டர் மற்றும் ஒரு ஸ்பீடாமீட்டரின் உதவியுடன் மணிக்கு 90 மைல் தூர வேகத்தில் அந்த விமானத்தை ஓட்டிவந்தார் 26 வயதான இந்திய இளைஞர். அந்த இளைஞர்தான் இந்தியாவின் முதல் விமான பைலட்டான ஜே.ஆர்.டி.டாடா.
பறக்கும் கனவு
நண்பர்களால் ‘ஜே’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஜே.ஆர்.டி.டாடா, 1904-ல் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் பிறந்தார். அவரது தந்தை ரத்தன்ஜி தாதாபாய் டாடா, இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தார். ஜே.ஆர்.டி.டாடாவின் தாயார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், சிறுவயதில் பிரான்ஸிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார். அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில்தான் லூயிஸ் பிளேரியாட் என்ற விமானி வசித்துவந்தார். 1909-ல் ஆங்கிலக் கால்வாய் மீது விமானத்தை ஓட்டிச் சென்ற முதல் விமானியாகப் பெயரெடுத்தவர் லூயிஸ். சிறுவயதில் தனது ஓய்வு நேரத்தை லூயிஸுடன் கழித்ததால், டாடாவுக்கும் விமானியாகும் ஆசை வந்தது.
1925-ல் இந்தியாவுக்கு வந்த ஜே.ஆர்.டி.டாடா, முதலில் சில காலம் தங்கள் சொந்த நிறுவனமான டாடா குழுமத்தில் அப்ரன்டீஸாக வேலை பார்த்தார். அந்தக் காலகட்டத்திலும், பைலட் ஆகும் கனவு அவரை விடாமல் துரத்தியது. இதைத் தொடர்ந்து மும்பையில் அப்போது தொடங்கப்பட்ட ‘ஃபிளையிங் கிளப்’பில் உறுப்பினராகச் சேர்ந்தார். அங்கு விமானம் ஓட்டும் பயிற்சி பெற்ற அவர், 1929-ல் விமானங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸைப் பெற்றார். இதன்மூலம் பைலட் லைசன்ஸ் பெற்ற முதல் இந்தியர் என்ற புகழைப் பெற்றார்.
குடிசையில் தொடங்கிய வரலாறு
இதையடுத்து அவரது கனவுகள் மேலும் விரியத் தொடங்கின. இந்தியாவில் சொந்தமாக வர்த்தக விமானப் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதுகுறித்து டாடா குழுமத்தின் அப்போதைய தலைவரான தனது மாமா சர் தொராப்ஜி டாடாவிடம் (Sir Dorabji Tata) பேசியுள்ளார். ஆனால், தொராப்ஜிக்கு முதலில் அதில் விருப்பம் இல்லை. நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு விமானப் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க தனது மாமாவைச் சம்மதிக்க
வைத்துள்ளார் டாடா. இதைத் தொடர்ந்து 1932-ல் டாடா ஏர் சர்வீசஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். மும்பையின் ஜுஹூ
பகுதியில் உள்ள ஒரு சிறிய குடிசையில் இதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டது. பெரிய ஆடம்பரங்கள் ஏதுமின்றி, மிக எளிமையாகத் தனது பணியைத் தொடங்கியது ‘டாடா ஏர் சர்வீசஸ்’.
1932-ல் கராச்சியிலிருந்து மும்பை ஜுஹூ பகுதிக்கு டாடா ஓட்டிவந்த விமானம்தான் ‘டாடா ஏர் சர்வீசஸ்’ நிறுவனத்தின் முதல் விமானம். நாலணா மதிப்புள்ள 25 கிலோ ஏர்மைல் கடிதங்களை இந்த முதல் விமானப் பயணத்தில் டாடா எடுத்துவந்தார். அடுத்த சில நாட்களிலேயே 6 இருக்கைகளைக் கொண்ட பயணிகள் விமானத்தையும் டாடா ஏர் சர்வீசஸ் அறிமுகப்படுத்தியது. இந்த விமானங்கள் மும்பையிலிருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்பட்டன. பின்னாளில் இந்த நிறுவனத்தின் பெயர் டாடா ஏர்லைன்ஸ் என்று மாற்றப்பட்டது.
வானை அளந்த விமானங்கள்
விமான சேவையைத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே டாடா ஏர்லைன்ஸ் விமானங்கள் 2,57,295 கிலோமீட்டர் தூரம் பறந்தன. ஆரம்பத்தில் மும்பையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்ட டாடாவின் விமானங்கள், பின்னர் மும்பையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் சென்னையிலிருந்து மும்பை செல்வதற்கான விமானக் கட்டணம் ரூ.256-ஆக இருந்தது.
டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த விமான நிறுவனத்தின் பெயர் 1946-ல் ‘ஏர் இந்தியா’ என்று மாற்றப்பட்டது. மேலும் உள்ளூரில் மட்டுமே விமானங்களை இயக்கிவந்த இந்நிறுவனம், 1948 முதல் சர்வதேச விமான சேவைகளைத் தொடங்கியது. அந்த வகையில் முதன்முதலாக மும்பையிலிருந்து லண்டனுக்கு 40 இருக்கைகளைக் கொண்ட ‘மலபார் பிரின்சஸ்’ என்ற விமானத்தை ஏர் இந்தியா இயக்கியது. இந்த விமானத்தில் பயணிப்பதற்காக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1,720 வசூலிக்கப்பட்டது.
நாட்டுடைமையானது
1953-ல், ஏர் இந்தியாவை நாட்டுடைமையாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இருப்பினும் இந்த நிறுவனத்துக்கு ஜே.ஆர்.டி.டாடா செய்த சேவைகளைக் கவுரவிக்கும் வகையில் அவரையே இந்நிறுவனத்தின் தலைவராக மத்திய அரசு நியமித்தது. டாடாவின் தலைமையின் கீழ் உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியா உருவெடுத்தது. 1977 வரை ஏர் இந்தியாவின் தலைவராக டாடா இருந்தார்.
தற்போது தினமும் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா இயக்கிவருகிறது. இந்நிறுவனத்தை மீண்டும் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதை வாங்க பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுவருகின்றன. இந்த நிறுவனத்தை யார் வாங்கினாலும், அதற்கு பிள்ளையார் சுழி போட்ட டாடாவை மறக்க முடியாது.
வாழ்க்கைப் பாதை
இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவராய் விளங்கிய ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய்
டாடா (ஜே.ஆர்.டி.டாடா) 1904-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிறந்தார். 1938-ல் டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற ஜே.ஆர்.டி.டாடா, 1991 வரை அப்பதவியில் இருந்து, டாடா குழுமத்தின் முன்னேற்றத்துக்காகக் கடுமையாக உழைத்தார். ஜவாஹர்லால் நேரு உள்ளிட்ட தேசிய பல்வேறு தலைவர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். இந்தியத் தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக ‘பாரத் ரத்னா’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். இந்தியாவின் தொழில் துறையை முன்னேற்றியவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் ஜே.ஆர்.டி.டாடா 1993 நவம்பர் 29-ல் காலமானார்.