குடியுரிமைச் சட்டப் பிரச்சினையை திசை திருப்புகிறார் ரஜினி- சுப.வீ சுளீர் பேட்டி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தமிழகத்தில் உள்ள வலதுசாரிகளின் வாய்களுக்கு எட்டிக்காய் போன்றவர் சுப.வீ. ஒரு காலத்தில் தீவிரத் தமிழ் தேசியராக இருந்து இன்று திராவிட இயக்கத்தின் போர்வாளாக வலம் வரும் சுப.வீ, திராவிட இயக்கம் தொடர்பான விமர்சனங்களுக்கு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் உடனுக்குடன் பதில் தருபவர். பெரியார் குறித்த பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியிருப்பதற்குச் சூடான எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கும் தருணத்தில், சுப.வீயுடன் ஒரு பேட்டி:

பெரியார் பற்றிய பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியும்கூட, மன்னிப்பு கேட்க முடியாது என்கிறாரே ரஜினி?

ரஜினி வழக்கம்போல செய்திகளைச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் போகிறபோக்கில் பேசியிருக்கிறாரோ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் இன்றைக்கு மேலும் மேலும் அது பற்றிய செய்திகளை அவர் வெளியிட்டிருப்பதைப் பார்க்கும்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டப் பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக ஆர்எஸ்எஸ் அவரைப் பயன்படுத்துகிறதோ என்ற எண்ணம் வருகிறது. இப்போதும் ‘அவுட்லுக்’ என்கிற பத்திரிகை ‘இந்து’ குரூப் என்கிறார். அதற்கு நாம் விளக்கம் சொல்வோம். பிறகு அதற்கு அவர் ஒரு விளக்கம் சொல்வார். இதுதான் அவர்களது திட்டம். இன்னொரு புறம் ரஜினியின் கருத்தை எச்.ராஜாவும், சுப்பிரமணியன் சுவாமியும், குருமூர்த்தியும் ஆதரிக்கிறார்கள். ரஜினி யாராக இருக்கிறார் எனும் சந்தேகங்கள் மிக அழுத்தமாக எழுகின்றன.

x