ஹாட் லீக்ஸ்- காளை பிடித்தவர்களுக்கு கார்த்தி அண்டா!


கணக்கு முடிக்கும் கார்த்தியின் உதவியாளர்!

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தேர்தலில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தர்ம.தங்கவேலுவின் மனைவி உமாமகேஸ்வரி அதிமுகவுடன் கைகோத்ததால் தான் திமுக வசம் வந்திருக்க வேண்டிய தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. இதையடுத்து, தர்ம.தங்கவேலுவைப் பதவியை விட்டு தூக்க வேண்டும் என அவரது எதிர்ப்பாளர்கள் காரைக்குடிக்கு திரண்டு வந்து கார்த்தி சிதம்பரத்திடம் முறையிட்டார்கள். இதன் பின்னணியில் கார்த்தியின் உதவியாளர் ராஜனின் கைவண்ணம் இருக்கிறதாம். பெரும்பாலும் ராஜன் சொல்வதைத்தான் கார்த்தி கேட்கிறார். அதை தனக்குச் சாதமாக்கிக் கொண்டு, தன்னைக் கண்டுகொள்ளாத கட்சிக்காரர்களை கார்த்தியை அண்டவிடாமல் பார்த்துக் கொள்கிறாராம் ராஜன். இவரால் அப்படி பாதிக்கப்பட்ட தர்ம.தங்கவேலு, ராஜனுக்கு எதிராக பகிரங்கமாகவே கருத்துகளை உதிர்த்திருக்கிறார். இதை சிலர் ராஜனின் காதில் அவ்வப்போது ஓதியிருக்கிறார்கள். இதையடுத்து, தங்கவேலுவைப் பதம் பார்க்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த ராஜன், இப்போது அவரது எதிர்ப்பாளர்களை எல்லாம் ஓரணியில் திரட்டி புகார் கொடுக்க வைத்துவிட்டாராம்.

உதயகுமாரின் புது அவதாரம்!

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார் தேர்தல் சமயத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் சார்பில் குமரியில் போட்டியிட்டஅவருக்கு தொகுதி மக்கள் டெபாசிட்டைக்கூட திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் ஆம் ஆத்மியிலிருந்து விலகி, ‘பச்சைத் தமிழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த நிலையில் தற்போது, ‘பூஞ்சோலை’ என்னும் இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கியிருக்கிறார் உதயகுமார். ஜனவரி 29-ல், பூஞ்சோலையின் முதல் கூட்டம் நாகர்கோவிலில் கூடுகிறது. இதில் ‘சூல்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற சோ. தர்மனை பாராட்டி கவுரவிக்கிறது பூஞ்சோலை.

x