ஒவ்வொரு நாடும் வரலாற்றில் ஏதோ ஒரு துயரமான தருணத்தில் மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, ‘கறுப்பு செவ்வாய்’ என்று இன்றளவும் நினைவுகூரப்படும் தினம் அந்நாட்டின் பொருளாதாரத்தைப் புரட்டிப்போட்டு, அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்த நாள். ஆம், 1929 அக்டோபர் 24-ம் தேதி, அந்நாட்டில் ‘மாபெரும் பொருளாதார மந்த நிலை’ (Great Depression) ஏற்பட்டது. அன்று முதல் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டில் பங்குகளின் மதிப்பு கிடுகிடுவெனச் சரியத் தொடங்கியதால் அமெரிக்காவின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது, தொழிலதிபர்கள் திவாலானார்கள், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது. கொஞ்சம் கொஞ்சமாக அதன் பாதிப்பு உலகம் முழுக்கப் பரவியது.
1929 முதல் 1933 வரை நீடித்த இந்த அவல நிலையிலிருந்து அமெரிக்க மக்கள் நம்பிக்கையுடன் மீண்டுவர, அவர்களுக்குத் தெம்பூட்டிய காரணிகளில் ஒரு குதிரையும் அடக்கம். அமெரிக்கக் குதிரைப் பந்தய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த அந்தக் குதிரையின் பெயர் ‘ஸீபிஸ்கட்’(SeaBiscuit). வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் குதிரையின் வாழ்க்கைக் கதையை, உண்மைக்கு நெருக்கமாகப் பதிவு செய்த படம்தான் ‘ஸீபிஸ்கட்’(2003). லாரா ஹில்லன் பிராண்ட் எழுதிய ‘ஸீபிஸ்கட்: அன் அமெரிக்கன் லெஜண்ட்’ என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை, ‘தி ஹங்கர் கேம்ஸ்’ (2012), ‘ஓஷன்ஸ் 8’(2018) போன்ற படங்களை இயக்கிய கேரி ரோஸ் இயக்கினார்.
தோல்விக் குதிரை
அமெரிக்கச் சாலைகளை கார்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்த 1900-களில் மிதிவண்டி தயாரித்து விற்பனையை ஆரம்பித்து படிப்படியாகக் கார் வியாபாரியாகி புகழின் உச்சத்தைத் தொட்டவர் சார்லஸ் ஹாவர்ட். கார் விபத்தில் அவரது மகன் இறந்துவிட, அவரது மனைவியும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவாள். மனமுடைந்துபோகும் ஹாவர்ட், மெக்சிகோ சென்று அங்கே குதிரைப் பந்தயத்திலும், காளைச் சண்டையிலும் நேரத்தைச் செலவிடுவார். அங்கே மார்செல்லா என்ற பெண்ணைச் சந்தித்து மணமுடித்துக்கொள்வார்.
மார்செல்லாவின் ஆலோசனைப்படி பந்தயக் குதிரைகளை வாங்கி, குதிரைப் பந்தயத்தில் முதலீடு செய்யத் தொடங்குவார். நல்ல குதிரையைத் தேர்ந்தெடுத்து வாங்கும் திறமை கொண்ட ஒரு குதிரைப் பயிற்சியாளரைத் தேடும் முயற்சியிலும் இறங்குவார். இறுதியாக, நாடோடியாகத் திரியும் கௌபாயான டாம் ஸ்மித்தைக் கண்டெடுப்பார். டாம்தான் ஸீபிஸ்கட் என்ற குதிரையைத் தேர்வுசெய்வார். இத்தனைக்கும் முந்தைய பயிற்சியாளர்களால் தேறாது என்று கைவிடப்பட்ட குதிரை அது. எனினும், குதிரை வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த டாம், அந்தக் குதிரை பல பந்தயங்களில் வெல்லப் போகிறது என்று கணித்திருப்பார். அவர் கணிப்பு பொய்க்காது!
புறக்கணிக்கப்பட்டவர்களின் கூட்டணி
உருவத்தில் சிறியதான ஸீபிஸ்கட், மற்ற குதிரைகள் பயிற்சி பெறும்போது அவற்றுடன் ஓடி தோற்பதற்காகவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கும். மற்ற குதிரைகளுக்குப் பந்தயத் தடத்தில் நம்பிக்கை ஊட்டுவதற்காக இந்த ஏற்பாடு. இது போன்ற இழிவால் எப்போதும் ஒருவித கோபத்துடனே இருக்கும் ஸீபிஸ்கட்.
இப்படிப்பட்ட பின்னணி கொண்ட குதிரைக்குப் பொருத்தமான நல்ல ஜாக்கியைத் தேடுவார் டாம். அப்பொழுது ஸீபிஸ்கட் போலவே பலராலும் ஓரம்கட்டப்பட்டு தணியாத ஆத்திரத்துடன் இருக்கும் ஜான் ரெட் பொலார்டைக் கண்டெடுப்பார். கனடாவின் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பொலார்ட் குதிரையேற்றத்தில் திறமை வாய்ந்தவன். பொருளாதார மந்தநிலையில் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிட, அவனது தந்தை அவனை ஒரு குதிரைப் பந்தய ஏற்பாட்டாளரிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிடுவார். பொதுவாக ஜாக்கிகள் இருக்க வேண்டிய குட்டையான உருவம் இல்லாமல் வளர்த்தியாக இருக்கும் பொலார்ட், எந்த வாய்ப்பும் கிடைக்காமல் விரக்தியில் இருப்பான். இந்தச் சூழலில் இணையும் ஸீபிஸ்கட் – பொலார்ட் ஜோடி தோல்விகளை மறந்து புத்துணர்ச்சி பெறும்.
அமெரிக்காவைக் கலக்கிக்கொண்டிருக்கும் ‘வார் அட்மிரல்’ என்ற பந்தயக் குதிரையை ஒற்றைக்கு ஒற்றை மோதி வெற்றிபெறும் ஸீபிஸ்கட். இதையடுத்து இருவரும் புகழ்பெறுவார்கள்.
ஒருநாள் பொலார்டுக்கு ஒரு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டுவிடும். அதைத் தொடர்ந்து ஒரு பந்தயத்தில் ஸீபிஸ்கட்டுக்கும் முன்னங்கால் சவ்வில் பிரச்சினை வரும். பொலார்டின் கடும் முயற்சியால் காயத்திலிருந்து இருவரும் மீண்டு, பந்தயத்தில் வெற்றிபெறுவார்கள். அந்த வெற்றியின் மூலம், ‘இனி இவர்கள் நடக்கவே முடியாது, பந்தயத்தில் கலந்துகொள்ள முடியாது’ என்று பேசியவர்களின் முகத்தில் கரியைப் பூசுவார்கள்.
தோற்றம் எப்படி இருந்தாலும், தொடர் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், கடுமையாக உழைத்தால் நிச்சயம் வெற்றியை அடைய முடியும் என்பதை அமெரிக்க மக்கள் மனதில் பதியவைத்து பெரும் நம்பிக்கைச் சின்னமானவர்கள் ஸீபிஸ்கட்டும், பொலார்டும். அந்த ஊக்கத்தில் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார்கள் அமெரிக்கர்கள்.
வரலாற்றின் அசல் நகல்
உண்மைச் சம்பவங்களைத் திரைப்படங்களாக எடுக்கும்போது சுவாரசியத்திற்காகச் சில மாற்றங்களைச் செய்வது வழக்கம், ஆனால், ‘ஸீபிஸ்கட்’ படத்தில் இயக்குநர் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. மக்களின் மனதில் நம்பிக்கை விதையை விதைத்த தீரம் செறிந்த புரவிக்குச் செயற்கைப் புனைவுகள் தேவைப்படவேயில்லை. ஆனால், நிஜ வாழ்க்கையில், பொலார்ட் விபத்துக்குப் பிறகு மீண்டு வர அவரது மனைவி ஆக்னஸ் பெரும் உதவியாக இருந்தாராம். ஆனால், படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தை இயக்குநர் வைக்கவில்லை. இத்திரைப்படம் ஸீபிஸ்கட்டை மையமாகக் கொண்டது என்பதால் கிளைக் கதைகள் வேண்டாம் என்று திரைக்கதைக் குழு முடிவெடுத்ததின் விளைவாகவே இந்த மாற்றம் நிகழ்ந்தது.
இந்தப் படம் எட்டு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், அமெரிக்காவின் வரலாற்றில் ஆதிக்கம் செலுத்திய குதிரைப் பந்தய உலகை நம் கண்முன் அசலாக நிகழ்த்திக் காட்டிய இத்திரைப்படம், வராலாற்றுப் படங்களுக்குச் சிறந்த உதாரணம்.
மருத்துவர்களையும் அவர்களது கடமையையும் பற்றி ஆன்ம விசாரணை மேற்கொண்ட ஜப்பானியத் திரைப்படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.