போர்முனை டு தெருமுனை 23: மின்னணு யுத்தம்


“கத்தியைத் தீட்டாதே... உந்தன் புத்தியை தீட்டு” என்றார் பழம்பெரும் பாடலாசிரியர் ஆலங்குடி சோமு. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ தற்போதைய போர்த்தளபதிகளுக்கு மிகப் பொருந்தும். போர்விமானங்கள் ஏவுகணைகளைத் தாண்டி புத்திக்கூர்மையை சோதிப்பதாகவே தற்காலப் போர்முறை வடிவெடுத்துள்ளது. போர், மனித மனத்தில் நிகழ்கிறது என்பது புதுமொழி.

புத்திமான் பலவான்

எதிராளியை விட அதிகம் சிந்திக்கத் தெரிந்த படை, போரில் வெற்றியைத் தட்டிப்பறிக்கும். போரின் வெற்றி, போரிடுகிற படைகளின் நம்பிக்கைக்கும் பயத்துக்கும் இடையில்தான் இருக்கிறது. இதனால்தான், எதிரி நாட்டில் பயத்தைக் கிளப்ப, பொய்த்தகவல்களை துண்டுப் பிரசுரங்களாக வீசிய நாடுகள் உண்டு. அதிநவீன வளர்ச்சியாக அரசு அல்லது ராணுவ இணைய தளத்தை முடக்குவது போன்ற பொதுபுத்தியில் பயத்தை விதைக்கும் இணைய தாக்குதல்கள் அரங்கேறுகின்றன. இது போரின் இன்னொரு பரிமாணத்தை சொல்லிப் போகிறது. என்ன அது?

பீரங்கி, போர்க்கப்பல் போன்ற ரத்தமும் சதையுமான ராணுவ தளவாடங்களைத் தாண்டி கணினி கட்டமைப்பை மையப்படுத்தி (Network Centric) தற்காலப் போர்முறை வளர்ந்திருக்கிறது. ஆயுதங்கள் உறுப்புகளாக இருந்தாலும் ராணுவத்தின் தலையாக இருப்பது, C4ISR. என்ன இது? Command, Control, Communications, Computers, Intelligence, Surveillance and Reconnaissance என்பதின் சுருக்கம் தான் C4ISR. கட்டளை, கட்டுப்பாடு, தொடர்புகள், கணினிகள், நுண்ணறிவு, கண்காணிப்பு, வேவு என இதைத் தமிழ்ப்படுத்தலாம்! கணினி கட்டமைப்புகள் ராணுவத்தின் மூளையாகவும், செயற்கைக்கோள்கள், ஆளில்லா விமானங்கள், ரடார்கள், படக்கருவிகள் போன்றவை கண், காது, மூக்கு போன்ற உணர்வு உறுப்புகளாகவும் பங்களிக்கின்றன.

எதிரிகளின் தொலைத்தொடர்புகளைத் தடுப்பது (Electronic Counter Measure-ECM). நம் படைகளின் தொலைத்தொடர்புகளுக்கு உதவுவது (Electronic Support Measure-ESM). எதிரிகள் நம் படைகளின் தொலைத்
தொடர்புகளைத் தடுப்பதை எதிர்த்து பதிலடிக்கு பதிலடி (Electronic Counter Counter Measure - ECCM) கொடுப்பது என மின்னணுப் போர்முறை (Electronic Warfare) பலவாறாக வளர்ந்திருக்கிறது.

மேம்போக்காக முரட்டுத்தனமான துறையாகத் தெரிந்தாலும் பாதுகாப்புத்துறையில் கணினி மற்றும் மின்னணு பொறியியல் துறை சார்ந்த பல அறிவுத் தேவைகள் உண்டு. இத்துறைகளில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ விஞ்ஞானிகள் பல கருவிகளை உருவாக்கி தேசப்பாதுகாப்பில் பங்காற்றி வருகின்றனர்.

பதிலடி ஸ்வாதி

எல்லைப்பகுதியில் ராணுவ நிலைகள் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடப்பதுண்டு. அப்படி தாக்குதல் நடக்கும்போது எங்கிருந்து தாக்குதல் நடக்கிறது என்ற விவரம் தெரிந்தால் உடனுக்குடன் பதிலடி கொடுக்கலாம். எதிரியின் தாக்குதல் நிலைகளை எல்லா நேரமும் மனிதக் கண்களால் தேடிக்கண்டுபிடிக்க இயலாது. இதற்காக ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஆயுதக் கண்டுபிடிப்பு ரடார் ‘ஸ்வாதி’ (Weapon Locating Radar-SWATHI) மிக முக்கியமானது. துப்பாக்கி சுடப்பட்டால். ராக்கெட் ஏவப்பட்டால், பீரங்கி முழங்கினால், ‘ஸ்வாதி’ சில நிமிடங்களில் அதன் இருப்பிடத்தைக் கண்டறிந்து விடும். ஏறக்குறைய 40 கி.மீ தூரம் வரையிலுள்ள இடங்களை ‘ஸ்வாதி’ கண்டுபிடிக்கும். இப்படி கண்டறிந்த இடங்களைப் பற்றிய விவரங்களை உடனுக்குடன் பாதுகாப்பு படைகளுக்கு பகிர்ந்து பதிலடி கொடுக்க உதவும். இரண்டு ராணுவ வாகனங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரடாரை சுலபமாக இடம் விட்டு இடம் நகர்த்தலாம். படி வரிசை (Phased Array) வகையைச் சேர்ந்தது இந்த ரடார்.

தரை ரடார்

உயரத்தில் சுற்றியபடி வானத்தை துழாவும் ரடார்களை விமான நிலையத்தில் பார்த்திருப்பீர்கள். தரையை ஆராயும் 
ரடார் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ராணுவக் குழுக்கள் ரோந்துப்பணியில் ஈடுபடும் போது வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாவார்கள். நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள், மேம்பட்ட வெடி சாதனங்கள் (Improvised Explosive Devices) வாகனங்களை தூளாக்கி வீரர்களைக் கொல்லும். இந்த வெடிபொருட்களைக் கண்டறிய தரையை ஆராயும் ரடார்கள் தேவை. டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் உருவாக்கிய தரை ஊடுருவும் ரடார், புதைக்கப்பட்டுள்ள வெடிபொருட்களைக் கண்டுபிடித்து ஒலியெழுப்பும். வெடிபொருளின் இருப்பிடத்தையும் திரையில் காட்டும். 5 கிலோ எடையுள்ள இந்த ரடாரை ஒரு ராணுவ வீரர் எளிதில் இயக்கலாம். சாலைகளை ஆராய வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள தரை ரடாரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரடார் வாகனத்தை சாலையில் செலுத்தினால் சாலையின் கீழுள்ள நிலத்தின் முப்பரிமாண பிம்பம் திரையில் தெரியும். வெடிபொருளின் இருப்பிடமும் குறிப்பிடப்படும். எல்லை காக்கும் வீரர்களுக்கும், தீவிரவாத தடுப்புப்படையினருக்கும் உயிர்காக்கும் உபகரணமாயிருக்கிறது இந்த மின்னணு கண்டுபிடிப்பு. இவை பெங்களூருவிலுள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகமான மின்னணு மற்றும் ரடார் மேம்பாட்டு நிறுவன (Electronics and Radar Development Establishment-LRDE) விஞ்ஞானிகளின் படைப்புகள்.

காக்கும் ஜாமர்

ரேடியோ அலைகள் மூலம் தொலை தூரத்திலிருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யலாம். நடைபயணமாக ரோந்து பணியிலிருக்கும் வீரர்களையும், வாகனத்தில் பயணிக்கும் மிக முக்கிய பிரமுகர்களையும் இவ்வகை தொலையியக்கு (Remote Control) வெடிகுண்டுகளிலிருந்து காப்பாற்ற ஜாமர்கள் (குறுக்கீட்டழிப்பிகள்) தேவை. அதிக சக்திவாய்ந்த மின் காந்த அலைவீச்சின் மூலம் ஜாமர்கள், வெடிகுண்டை உசுப்பும் சமிக்ஞைகளைத் தடுக்கின்றன. ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கிய ஜாமர்களை முதுகுப் பையில் சுமந்தபடி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக நாட்டை காக்கிறார்கள். வாகனத்தில் பொருத்தப்பட்ட ஜாமர் கருவிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன.

போர் விளையாட்டு

போர் உத்திகளை வகுக்கவும் போர்க்குழுக் களுக்கு பயிற்சி தரவும் போர் ஒத்திகைகளும் போர் விளையாட்டுகளும் (War Games) உதவுகின்றன. போர் விளையாட்டுகளில் பல விதமான போர்ச்சூழல்கள் உருவாக்கப்பட்டு அவற்றை மேற்கொண்டு எப்படி வெற்றி பெறுவது என்ற பயிற்சி தரப்படுகிறது. போர் விளையாட்டுகளில் நமது வியூகங்கள் மட்டுமன்றி எதிரிகளின் பல வியூகங்களையும் உருவகப்படுத்தலாம். போர் விளையாட்டு மென்பொருள்களையும் ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கி வழங்குகின்றனர். புதுதில்லி
யிலுள்ள டி.ஆர்.டி..ஒ ஆய்வகமான, அமைப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் (Institute for Systems Studies and Analysis - ISSA) இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது.

மெய்நிகர் யதார்த்தம்

பனிமலைப்பகுதிகளில் பணிவாய்ப்பு கிடைக்கும் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்க மெய்நிகர் யதார்த்த (Virtual Reality) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. செயற்கைக்கோளின் முப்பரிமாண நிலவமைப்பு படங்களைக்கொண்டு மலைகளும் ஆறுகளும் மெய்நிகராக உருவாக்கப்படுகின்றன. மெய்நிகர் கண்ணாடியும் கைகளில் கட்டுப்பாட்டுக் கருவிகளையும் வைத்துக் கொண்டு பனிமலைச்சரிவுகளில் நடக்கலாம். தலையை உயர்த்தி வானளாவியக் காட்சிகளைக் காணலாம். குறுகலான ஒத்தையடிப் பாலத்தில் பனியாற்றைக் கடக்கலாம். ஒரு முறை நானும் மெய்நிகர் கண்ணாடியோடு இமாச்சல பிரதேச பனிமலை அனுபவத்தின் பரவசத்தை பஞ்சாபில்(!) உணர்ந்தேன். இப்படி பனிப்பகுதிகளுக்கு செல்வதற்கு முன்பே ஒத்திகையில் வீரர்களைத் தயார்படுத்துகிறார்கள்.

மெய்நிகர் யதார்த்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களுக்கு அறுவைசிகிச்சை பயிற்சிக் கருவியையும் (சிமுலேட்டர் - Simulator) உருவாக்கியிருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். சாவி துவார அறுவைசிகிச்சை என்றழைக்கப்படும் லாப்ரோஸ்கோபி அறுவைசிகிச்சையில், மிகச்சிறிய துவாரங்களின் வழியே வீடியோ குழாயும், அறுவை சிகிச்சை கருவிகளும் நோயாளியின் உடலில் செலுத்தப்படும். வீடியோ குழாய் உடலின் உள்ளுறுப்புகளை கணினி திரையில் காட்டும். திரையில் தெரியும் காட்சிகளைப் பார்த்தவாறே தனது கைகளால் கச்சிதமாக அறுவைசிகிச்சை கருவிகளைக் கையாள்வதற்கு மருத்துவருக்கு பயிற்சி தேவை. அப்பயிற்சியைப் பல படிநிலைகளில் விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த சிமுலேட்டர் தரும். நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் மருத்துவர்கள் பயிற்சி பெற எப்படி தொழில்நுட்பம் உதவுகிறது பார்த்தீர்களா? எதிரிகளை அழிக்கும் ஆயுதம் உருவாக்குபவர்கள் என்றறியப்பட்ட ராணுவ விஞ்ஞானிகள் மக்களின் உயிர்காக்கும் கருவிகளையும் உருவாக்குகிறார்கள்!

டி.ஆர்.டி.ஓ அழைக்கிறது

இதுவரை எப்படியெல்லாம் ராணுவ விஞ்ஞானிகள் அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முப்படைகளுக்கும் துணை ராணுவப்படைகளுக்கும் கருவிகள் உருவாக்கினார்கள் என்று பார்த்தோம். அந்த ராணுவத் தொழில் நுட்பங்களால் பொதுமக்களுக்கு விளைந்த நன்மைகளையும், உறுதிப்படுத்தப்பட்ட அவர்களின் பாதுகாப்பையும் பகுதி பகுதியாகப் பார்த்தோம்.

இதனால் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தைப் பற்றிய ஆர்வம் உங்களுக்கு அதிகரித்திருக்கக்கூடும். கட்டுரைகளில் பேசப்பட்ட கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் நேரில் பார்ப்பது எப்படி? உங்கள் வீட்டு சுட்டிப்பிள்ளைகளும் இளைஞர்களும் யுவதிகளும் ராணுவ விஞ்ஞானிகள் ஆவதற்கான வாய்ப்புகள் என்னென்ன?

(பேசுவோம்...)

x