இந்தியன் நெ.1: காந்தியால் கிடைத்த ஆஸ்கர்


ஆஸ்கர் விருதுபெற்ற இந்தியர் ஒருவரின் பெயரைக் கூறுங்கள் என்று யாராவது கேட்டால்... உடனே,  ஏ.ஆர்.ரஹ்மான் என்போம். 
இன்னும் தீவிரமாக யோசிப்பவர்கள் ரசூல் பூக்குட்டியின் பெயரைச் சொல்வார்கள். ஆனால், இவர்கள் இருவருக்கும் முன்பாக, 1983-ம் ஆண்டிலேயே ஆஸ்கர் விருதைப் பெற்றவர் பானு ரஜோபாத்யே அத்தையா (Bhanu Rajopadhye Athaiya) என்ற பெண்மணிதான்.

‘காந்தி’ படத்தில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய இவர் இத்துறைக்காக 1983-ம் ஆண்டில் ஆஸ்கர் விருதைப் பெற்றார். இதன்மூலம் ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை யும் இவர் படைத்துள்ளார். இவரைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

1929-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் பானு அத்தையா பிறந்தார். இவரது தந்தை அன்னாசாகேப், ஒரு ஓவியர். பானு அத்தையாவுக்கு 7 வயதாக இருக்கும்போதே அவரது தந்தை காலமானார். அதன் பிறகு தாயின் அரவணைப்பில் வளர்ந்த பானு அத்தையா, சிறுவயதில் இருந்தே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இவரது தாயாரும் இந்த துறையில் இவருக்கு கல்வி கற்க உதவினார். படிப்பை முடித்த பிறகு பல்வேறு பத்திரிகைகளிலும் போட்டோ ஷூட் ஆடை வடிவமைப்பாளராக பானு அத்தையா பணியாற்றினார்.

இந்தக் காலகட்டத்தில் இவர் ஆடை வடிவமைப்பாளராகப்  பணியாற்றிய ‘ஈவ்ஸ் வீக்லி’ பத்திரிகையின் ஆசிரியர் ஒரு  ‘பொட்
டிக்’கை ஆரம்பிக்க, அவரது அழைப்பின் பேரில் அதிலும்  ஆடை வடிவமைப்பாளராகப்  பணியாற்றினார்  பானு அத்தையா. இந்தக் கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்ததுடன், அத்தையா வடிவமைத்த ஆடைகள் மும்பை நகரில்  புகழ்பெறவும் தொடங்
கியது. இதைத் தொடர்ந்து குரு தத் தயாரிப்பில் தேவ்  ஆனந்த் நடித்த ‘சிஐடி’ என்ற படத்தில்  ஆடை வடிவமைப்பாளராகப்
பணியாற்றும் வாய்ப்பு 1956-ம் ஆண்டில் அத்தையாவைத் தேடி வந்தது. இப்படத்தில் சிறப்பாக பணியாற்றியதைத் தொடர்ந்து குரு தத்தின் குழுவில் ஒரு முக்கிய அங்கமாக மாறினார் பானு அத்தையா.

பாலிவுட் படங்களில் முக்கியமான ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக பானு அத்தையா இருந்த காலத்தில் ‘காந்தி’ படத்தை எடுப்பதற்காக இந்தியா வந்தார் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. தனது கனவுப் படமான ‘காந்தி’யில் பயன்படுத்தும் ஆடைகள் அனைத்தும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகளைப் போலவே இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்தார். இதைத்
தொடர்ந்து இப்படத்தில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய உடைகளை வடிவமைப்பதற்காக ஜான் மல்லோ (John Mollo), என்பவரை நியமித்த ஆட்டன்பரோ, இந்திய கதாபாத்திரங்கள் அணியும் ஆடைகளை வடிவமைப்பதற்காக ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகை சிமி கரேவால் மூலமாக பானு அத்தையாவைப் பற்றி கேள்விப்பட்டார். உடனடியாக அவரைச்  சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு ஆட்டன்பரோ கூறினார்.

இந்தத் தகவலை சிமி கரேவால், பானு அத்தையாவிடம் கூறினார்.  ஒரு மிகப்பெரிய படத்துக்குத் தேவையான ஆடைகளை தன்னால் வடிவமைக்க முடியுமா என்று ஆரம்பத்தில் தயங்கிய பானு அத்தையா, பின்னர் இந்தச் சவாலை ஏற்கத் தயாரானார். தன்னைப் பற்றிய பயோடேட்டா மற்றும் ‘காந்தி’ படத்துக்கு எப்படியெல்லாம் ஆடைகளை வடிவமைக்கலாம் என்பது பற்றிய திட்டங்களுடன் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆட்டன்பரோவைச் சந்தித்தார் பானு அத்தையா.

 இந்தச் சந்திப்புக்குப் பிறகு,  ‘காந்தி படத்தில்   இந்தியா தொடர்பான கதாபாத்திரங்களுக்கு பானு அத்தையாதான் ஆடை வடிவமைப்பாளர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார் ஆட்டன்பரோ. ‘காந்தி’ படத்தின் முழு ஸ்கிரிப்டையும் பானு அத்தையாவிடம்  கொடுத்த ஆட்டன்பரோ,  படப்பிடிப்பு  தொடங்க 12 வாரங்கள் ஆகும் என்றும், அதற்குள் படத்துக்குத் தேவையான ஆடைகளை வடிவமைக்குமாறும்   சொல்லிச் சென்றார். அன்றிலிருந்து, ‘காந்தி’ படத்தின் படப்பிடிப்பு முடியும் நாள் வரை தூக்கத்தை மறந்து வேலை பார்த்தார்  பானு அத்தையா.

 ‘காந்தி’ படத்துக்காக பணிபுரிந்த நாட்களைப் பற்றி பின்னாளில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த பானு அத்தையா, “மும்பையில் உள்ள அசோகா ஓட்டல்தான் எங்களின் படக்குழுவினர் சந்திக்கும் முக்கிய மையமாக இருந்தது. இப்படத்தில் காந்தி, நேரு கஸ்தூர்பா போன்ற முக்கியக் கதாபாத்திரங்களுக்கு மட்டுமின்றி, உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ளும் காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான நடிகர், நடிகைகளுக்கு ஆடைகளை வடிவமைக்க வேண்டி இருக்கும். தினமும் காலையில் 9 மணிக்கு படப்பிடிப்பு என்று சொன்னால் எங்கள் குழுவினர் 5 மணிக்கெல்லாம் அங்கு இருக்க வேண்டும். அப்போதுதான் 9 மணிக்குள் அவர்கள் அனைவருக்கும் ஆடைகளை மாற்றி அதைச் சரிபார்க்க முடியும். இதேபோல், படப்பிடிப்பு முடிந்த பிறகும் நாங்கள் உடனடியாக வீட்டுக்குத் திரும்ப முடியாது. அனைத்து உடைகளையும் மடித்துவைத்து ஒழுங்குபடுத்திய பிறகே வீட்டுக்குச் செல்ல முடியும்.

இப்படத்தில் காந்தியின் உடையே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதற்காக நாங்கள் அவரைப் பற்றி நிறைய படிக்கவேண்டி இருந்தது. மேலும், காந்தியின் பல தரப்பட்ட புகைப்படங்களையும் பார்க்கவேண்டி இருந்தது.  அத்துடன் காந்தியின் வாழ்க்கை வரலாறு பரந்து விரிந்த பல்வேறு காலகட்டங்களிலும், பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான உடைகளை மக்கள் அணிந்துவந்தனர். அந்த உடைகளைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து இப்படத்தில் பயன்படுத்தினோம்” என்று சொன்னார்.

‘காந்தி’ படத்துக்காக பானு அத்தையா மேற்கொண்ட கடும் உழைப்பு வீண் போகவில்லை. 1983-ம்  ஆண்டில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பானு அத்தையா பெற்றார்.

‘காந்தி’ படத்துக்குப் பிறகு ஆமிர்கான் நடித்த ‘லகான்’, ‘லேகின்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு பானு அத்தையா ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி உள்ளார்.  2 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ள பானு அத்தையா, இந்தியாவின் மிகச்சிறந்த ஆடை வடிவமைப்பாளராக விளங்குகிறார்.

வாழ்க்கைப் பாதை

மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் 1929-ம் ஆண்டு பானு அத்தையா பிறந்தார். 1956-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை பாலிவுட் திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய பானு அத்தையா, அதன்பிறகு இத்துறையில் இருந்து ஓய்வு பெற்றார். 1983-ம் ஆண்டு ஆஸ்கர் விருதைப் பெற்ற இவர், ‘காந்தி’ படத்துக்காக பாஃப்டா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டர்.  1991 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதையும் இவர் வென்றுள்ளார்.

x