“காட்டுக்குச் சென்றால் நீங்கள் எந்த மிருகத்தைப் பார்க்க விரும்புவீர்கள்?” இப்படி ஒரு கேள்வியை நட்பு வட்டத்தில் முன்வைத்தபோது பலரின் விருப்பத் தேர்வாக இருந்த மிருகம் – புலி!
அதற்குக் காரணமாக அதன் வசீகரத்தைச் சொன்னார்கள். அதில் ஒருவர், “அந்த அடர்மஞ்சள் நிறமும் அதன் ஊடே பாயும் கறுப்புக் கோடுகளும், கூர்மையான பார்வையும் பிரமிக்க வைக்கும்” என்றார்.
ஆம், புலியின் தரிசனம் தரும் உணர்வு பிரமிக்க வைப்பதுதான். அப்படி ஓர் உணர்வைப் பெறுவதற்குத் தயாராக இருங்கள். அடுத்த சில வாரங்களுக்கு நாம் இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்களைப் பிரத்யேகமாகச் சுற்றிவரப்போகிறோம்.
புலியின் முக்கியத்துவம்
எல்லாம் சரி, பல விலங்குகளுக்குக் காப்பகங்கள் இருக்கும்போது, புலிகள் காப்பகம் மட்டும் ஏன் தனிச் சிறப்பைப் பெறுகிறது? புலி தேசிய விலங்கு என்பதாலா? இல்லை. அது ‘கானகத்தின் காவலன்' என்பதால்தான். யோசித்துப் பாருங்களேன். வனத்தினுள் மான்கள், காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள் இன்னும் சில மேய்ச்சல் விலங்குகள் மட்டுமே இருந்தால் என்னவாகும்? அவற்றின் இனவிருத்தி வேகத்தால் காடு சீக்கிரமே அழிந்துவிடும். அதனைத் தடுக்க வனத்தின் பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புலிகள் அவசியம்.
புலிகளைப் பாதுகாக்க வேண்டுமானால், வனத்தை மனிதனிடமிருந்து பாதுகாக்க வேண்டும். வனத்தின் எல்லைகளை மீட்டால், புலிகளின் எண்ணிக்கை தானாகவே உயரும். வனத்தின் அடர்த்தி அதிகமாகும் போது மழைப் பொழிவு சீராகும். மழை பசுமையை அதிகரிக்கும்.
பென்ச் புலிகள் காப்பகம்
நாம் முதலில் பயணப்பட இருப்பது மத்திய பிரதேசத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகம். இந்தியாவில் தற்போது உள்ள 2,967 புலிகளில் 526 புலிகள் மத்திய பிரதேச வனங்களில் உள்ளன. அதனாலேயே இந்தக் காப்பகத்தை முதலில் தேர்வு செய்துள்ளோம்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தெற்கு எல்லையில் இந்தக் காப்பகம் அமைந்துள்ளது. அக்டோபர் முதல் ஜூன் வரையில் இங்கு செல்வது சரியாக இருக்கும் எனப் பரிந்துரைக்கிறது வனத் துறை. அதிலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு செல்வது மிகவும் சிறந்தது. காலை 6 முதல் 10.30 மணி வரை, மாலை 3 முதல் 6 மணி வரை என இரண்டு வேளை மட்டுமே அங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி.
என்னென்ன பார்க்கலாம்?
இங்கு புலிகளை மட்டுமல்ல, புள்ளி மான்கள், காட்டுப் பன்றிகள், கரடிகள், சிறுத்தைப் புலிகள், கட மான்கள் போன்றவற்றையும் பார்க்கலாம். இவை தவிர மயில், க்ரீன் பீ-ஈட்டர், நெக்டார் பீ-ஈட்டர்… இன்னும் பல விதமான பறவைகள், பட்டாம்பூச்சிகள், தாவரங்கள், மரங்கள் எனப் பல்லுயிர் சமன்பாட்டுக்குச் சிறந்த கானகமாக இது திகழ்கிறது.
குடும்பத்துடன் நிச்சயமாகச் சென்று பார்க்க வேண்டிய இடம் பென்ச் என்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த செந்தில் குமரன். பொறியாளரான இவர், தொழில் நிமித்தமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணப்படுபவர். கானகங்களைத் தரிசிப்பதிலும், காட்டுயிர்களைப் படம் பிடிப்பதிலும் இவருக்கு தீராக் காதல். வனத்தைப் படம் பிடித்து அதன் பன்முகத்தன்மையைச் சாமானியர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், ‘வனத்தின் பிரம்மாண்டத்துக்கு நாம் பாதகம் ஏற்படுத்தக் கூடாது’ எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகிறார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது பயணக் கதைகளைப் பதிவேற்றுகிறார்.
காலர்வாலி கதை தெரியுமா?
“பென்ச் புலிகள் காப்பகத்துக்கு போவதென்று நீங்கள் முடிவு செய்திருந்தால் ‘காலர்வாலி’யின் கதையைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்கிறார் செந்தில்.
"எல்லா புலிகள் காப்பகத்திலும் புலிகளுக்குப் பிரத்யேகப் பெயர்கள் இருக்கின்றன. 2005 செப்டம்பரில் பிறந்து கண் திறப்பதற்கு முன்னரே, வனத் துறை அதிகாரிகளின் கண்ணில் காலர்வாலி பட்டுவிட்டது. இந்தப் புலியின் அதிகாரபூர்வப் பெயர் ‘டி20’. ஆனால், இது அதிகம் அறியப்படுவது ‘காலர்வாலி’ என்ற பெயரால்தான். காரணம், அதற்கு அணிவிக்கப்பட்ட ‘ரேடியோ காலர்'. அதன் தாய் பரிமாதாவைக் கண்காணிக்கவே இந்தப் புலிக்கு ரேடியோ பட்டை அணிவிக்கப்பட்டது. அப்போது பரிமாதா அதிகக் குட்டிகளை ஈன்றதால் கவனம் பெற்றிருந்தது. ஆனால், பின்னாளில் காலர்வாலியின் அதிசயக்கவைக்கும் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள அந்தக் காலர் பயன்பட்டது. தற்போது ரேடியோ காலர் அகற்றப்பட்டுவிட்டாலும்கூட இன்னமும் ‘டி20’ காலர்வாலி எனும் நாமகரணத்துடன் தான் விளங்குகிறது.
ராயல் பெங்கால் வகை புலிகளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். தற்போது காலர்வாலிக்கு வயது 15. இதுவரை 29 குட்டிகளை ஈன்றுள்ளது என்பதுதான் இதன் சிறப்பு. சராசரியாக ஒரு புலி 3 முதல் 4 வயதில் பருவம் எய்திவிடுகிறது. இனச்சேர்க்கைக்குப் பின் இரண்டரை மாதம் முதல் 3 மாதத்துக்குள் குட்டியை ஈன்றுவிடுகிறது. ஒரு பிரசவத்தில் 1 முதல் 4 குட்டிகளை ஈன்றெடுக்கிறது. சராசரியான மற்ற புலிகளைப் போல் இல்லாமல் காலர்வாலி 14 ஆண்டுகளில் 29 குட்டிகளை ஈன்றுள்ளது. இதனால் ‘பென்ச்சின் ராணி’ என்ற அடைமொழியையும் இது பெற்றுள்ளது.
காலர்வாலி மே 2008-ல் முதன்முறையாக 3 குட்டிகளை ஈன்றது. ஆனால், அப்போது பெய்த கனமழையால் நிமோனியா தொற்று ஏற்பட்டு மூன்று குட்டிகளும் பலியாகின. பின்னர், 2008 அக்டோபர் மாதம் 3 குட்டிகள், 2010 அக்டோபரில் 5 குட்டிகள், 2012 மார்ச்சில் 3 குட்டிகள், 2012 அக்டோபரில் 3 குட்டிகள், 2015 மார்ச்சில் 4 குட்டிகள், 2016 டிசம்பரில் 4 குட்டிகள், 2019-ல் 4 குட்டிகள் என மொத்தம் 29 குட்டிகள் ஈன்றுள்ளது.
சூப்பர் மாம்
இது எப்படி சாத்தியமானது என்ற ஆய்வில்தான் காலர்வாலி ‘சூப்பர் மாம்' என்பது நிரூபணமானது. இது ஒன்றரை வருடங்களிலேயே தனது குட்டிகள் தனியாக வேட்டையாடும் அளவிற்கு அவற்றைத் தயார்படுத்தி விடுகிறது. பின்னர் அடுத்த இனச்சேர்க்கைக்குத் தயாராகிவிடுகிறது. இது அங்கிருக்கும் 3 ஆண் புலிகளுடன் இணை சேர்ந்திருந்தாலுமே ‘டி-30 (ராயக்சாப்)’ என்ற ஆண் புலிக்குத்தான் அதிகக் குட்டிகளை ஈன்றுள்ளது.
நீங்கள் பென்ச் செல்லும் முன் காலர்வாலியின் இந்தக் கதையைத் தெரிந்துகொண்டுவிட்டால், ஒருவேளை அது உங்கள் கண்களில் படும்போது நீங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது" என்கிறார் செந்தில்.
அடுத்த அத்தியாயத்தில், ‘புரொஜெக்ட் டைகர்’, புலிகள் தொடர்பான சில சுவாரசியப் புள்ளிவிவரங்களுடன் நாகர்ஹோலே, கபினி புலிகள் காப்பகத்தை உலா வருவோம்.
படங்கள் உதவி: ந.செந்தில் குமரன்
(பயணம் தொடரும்...)