கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
ஜனவரி 17-ல், தமிழகமெங்கும் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. எம்ஜிஆரின் காலத்துக்குப் பிறகு கட்சியில் சேர்ந்து எத்தனையோ உயரங்களைத் தொட்டுவிட்டவர்களின் மத்தியில், அவரது அணுக்கத் தொண்டர்களாக ஆயுள் முழுவதும் இருந்துவரும் பல எளியவர்களின் வாழ்க்கை இன்னமும் இருளில்தான் இருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் ஓ.பி.ராமன்.
இவரை ஒரு வருடத்துக்கு முன்பு கோவை சிங்காநல்லூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன். வாஜ்பாய் இறந்த செய்தி கேட்டு நிகழ்ச்சியைப் பாதியில் ரத்து செய்த நிர்வாகிகள், வந்திருந்தவர்களுக்கு பிரியாணி பரிமாறத் தொடங்கியிருந்தனர். பிரியாணிக்கு முண்டியடித்தவர்களின் மத்தியில் இவரும் இவரது மனைவியும் அல்லாடிக்கொண்டிருந்தார்கள். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த ராமன் இருந்த நிலையே வேறு.
அப்போது கோவை மக்களவை இடைத்தேர்தல். கூட்டணிக் கட்சி வேட்பாளர் தோழர் பார்வதி கிருஷ்ணனுக்காகப் பிரச்சாரம் செய்ய வந்தார் எம்ஜிஆர். ஒண்டிப்புதூர் ரயில்வே கேட்டில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் முண்டியடித்து வேனின் மீதேறி எம்ஜிஆருக்கு முதல் ஆளாக மாலை போட்டது இந்த ராமன்தான். அந்த மாலையை எம்ஜிஆர் திரும்ப ராமனுக்கே அணிவித்து ஆனந்தப்படுத்தினார். ஒண்டிப்புதூருக்கு எம்ஜிஆர் எப்போதெல்லாம் வருகிறாரோ, அப்போதெல்லாம் ராமன் முதல் ஆளாகத் தென்படுவார். அவ்வளவு பெரிய கூட்டத்திலும் எம்ஜிஆரின் வாகனத்தை எதிர்கொண்டு மறிப்பதிலும், முதல் மாலையிடுவதிலும் அசகாய சூரர் இவர். இத்தனைக்கும் இவர் அன்றாட கை வண்டிக்கூலிதான். ஆனால், கடைக்கோடித் தொண்டனுக்கும் கட்சியில் மதிப்பு இருந்த காலம் அது.