ஆட்டோவில் ஆர்ட்டிகிள் 14- கேரளத்தைக் கலக்கும் குஞ்சுகுட்டன்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மல்லுக்கு நிற்கும் மலையாளிகள், தங்கள் போராட்டத்துக்கு வித்தியாசமான முறையில் துணை நிற்கும் ஓர் ஆட்டோக்காரரைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். பாலக்காடு மாவட்டம், அனக்கரா பகுதியைச் சேர்ந்த குஞ்சுகுட்டன்தான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்!

இவரது ஆட்டோவின் பெயர் ‘ஆர்ட்டிகிள் 14’ என்பதுதான் இதற்குக் காரணம். ஆம், அரசமைப்புச் சட்டக்கூறு 14-ஐ நினைவுபடுத்தும் வகையில்தான் தன் ஆட்டோவுக்கு இந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார் குஞ்சுகுட்டன். ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ எனச் சொல்லும் இந்தச் சட்டக்கூறை, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் ஆட்டோவில் எழுதிவைத்திருக்கிறார். இந்தத் தகவலை அதே பகுதியைச் சேர்ந்த சிபிஎம் நிர்வாகி பிரதீப் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் போட, கேரளம் முழுவதும் ‘ஃபேமஸ்’ ஆகிவிட்டார் குஞ்சுகுட்டன்.

அனக்கராவில் குஞ்சுகுட்டனைச் சந்தித்தேன். “இது பள்ளிக்கூட வயசுலயே அரும்பிய ஆசை” என்று தொடங்கிய குஞ்சுகுட்டன், “நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கூடப் பாடத்தில் அரசமைப்புச் சட்டக்கூறு 14 பற்றி படிச்சேன். அதன்படி சாதி, மதம், இனம், மொழி, பிறந்த இடத்தின் அடிப்படையில பாகுபாடு இல்லாமல், அரசால் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அது என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. பெரியாளாகி என்ன வாகனம் வாங்கினாலும் அதுக்கு ‘ஆர்ட்டிகிள் 14’னுதான் பேரு வைக்கணும்னு தீர்க்கமா முடிவெடுத்தேன்” என்கிறார் குஞ்சுகுட்டன்.

x