உமா
uma2015scert@gmail.com
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டிலும் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. மற்ற பள்ளிகளில் இருக்கும் அனைத்து நடைமுறைப் பிரச்சினைகளும் இந்தப் பள்ளிகளிலும் உண்டு. அதைத் தவிர்த்து வேறு என்னென்ன சிக்கல்களை இப்பள்ளிகள் எதிர்கொள்கின்றன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு லட்சம் குழந்தைகள்
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் 312 பழங்குடியின பள்ளிகளும் 1,200 ஆதி திராவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆதி திராவிட இன மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அவர்களின் குழந்தைகள் கல்வி அறிவு பெறுவதற்காக ஆதி திராவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. அதேபோல், பழங்குடியினக் குழந்தைகள் அவர்களது வாழிடத்திற்கு அருகிலேயே தடையின்றி கல்வி கற்கும் வகையில் மலைப் பகுதிகளில் பழங்குடியினப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பழங்குடியினப் பள்ளிகள் உண்டு உறைவிடப் பள்ளிகளாகவும் செயல்படுகின்றன.