திறந்த புத்தகமாக ஒரு நூலகம்!- இன்டீரியர் டெக்கரேட்டரின் இலக்கியச் சேவை


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

இளம் தலைமுறைக்கு வாசிப்புப் பழக்கத்தை அறிமுகப்படுத்த, இலக்கிய ஆர்வலர்களும் கல்வியாளர்களும் ஏதேதோ பிரயத்தனம் செய்து வருகிறார்கள். இந்த முயற்சியில் தன் பங்குக்கு ஒரு புதுமைப் பணியைச் செய்திருக்கிறது பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் உள்ள பி.ஏ. சர்வதேசப் பள்ளி.

“இந்தப் பள்ளியில் நூலக அறைக் கதவுகளையே புத்தக வடிவில் உருவாக்கி மாணவர்களுக்கு வாசிப்பின் மேல் நேசிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்” என்று இலக்கிய நண்பர் ஒருவர் தகவல் சொல்ல, ஆச்சரியம் மேலிட அப்பள்ளிக்குச் சென்றேன்.
நூலக நுழைவாயிலில், ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற குறள் தமிழிலும், ஆங்கிலத்
திலும் எழுதப்பட்டுள்ள கதவுகளுக்குள் ஆசிரியர்கள் சகிதம் நுழைந்து கொண்டிருந்தனர் மழலைகள். ‘வாசிக்கலாம் வாருங்கள்…’ என்று ஒரு புத்தகமே அகலத் திறந்து மாணவர்களை அழைப்பதுபோல், அத்தனை கலைநேர்த்தி
யுடன் இருக்கின்றன நூலகக் கதவுகள்.

பள்ளியின் சேர்மன் பி.அப்புக்குட்டியிடம் அந்தக் கதவுகள் பற்றி கேட்டேன். “எங்க பள்ளிக்கு உள் அலங்காரப் (இன்டீரியர் டெக்கரேஷன்) பணிகளைச் செய்து தரும் ஏ.ஸ்ரீனிவாஸுக்குக் கலை, இலக்கியத்துல ரொம்ப ஆர்வம். புதுசு புதுசா ஏதாச்சும் செஞ்சுட்டே இருப்பார். ‘நூலகத்துக்கான கதவுகளைப் புத்தக வடிவத்துல செய்யட்டுமா?’ன்னு அவர்தான் என்கிட்ட கேட்டார். அது சரியா வருமான்னு தெரியாம, நான் வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா அவரோ, சொன்ன மாதிரி செஞ்சுட்டே வந்துட்டார். பார்த்தோம். இதுவும் நல்லாத்தானே இருக்குன்னு மாட்டிட்டோம். ஒரு வருஷமாச்சு. இங்கே வர்றவங்க இதைப் பத்திக் கேட்காம போறதில்லை” என்றார்.

x