கார்த்தியின் காணிக்கை கணக்கு!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை சென்டிமென்டாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலிலிருந்து தொடங்கினார் கார்த்தி சிதம்பரம். நினைத்தபடியே ஜெயம் கிடைத்தது. 3 லட்சத்து 32 ஆயிரத்து 244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் கார்த்தி. அதற்கு நன்றிக் காணிக்கையாக பிள்ளையார்பட்டி கோயில் அன்னம் பாலிப்புக்காக (அன்னதானம்) 3 லட்சத்து 32 ஆயிரத்து 244 ரூபாயை கடந்த 6-ம் தேதி செலுத்தி இருக்கிறார் கார்த்தி.
திமுகவிடம் போட்டுக் கொடுத்த அழகிரி!
“திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டது” என்று அவசரப்பட்டு ஒரு அறிக்கையைத் தந்துவிட்டு ஆடிப்போய் கிடக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. தமிழகத்தில் காலியாகவிருக்கும் ஆறு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளில் மூன்று திமுகவுக்கு கிடைக்கும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் பேசியபோதே, இந்த மூன்றில் ஒன்றை தங்களுக்குத் தரவேண்டும் எனப் பேசிவைத்திருந்தது காங்கிரஸ். அந்த ஒரு இடத்தில் தன்னை அமரவைப்பார்கள் எனக் கனவு கண்டுகொண்டிருந்தார் அழகிரி. இனி அந்தக் கனவு பலிக்குமா என்று தெரியவில்லை. தனது அறிக்கைக்கு காங்கிரஸ் தலைமையிலிருந்தும் திமுக தரப்பிலிருந்தும் ஒரே மாதிரியான ரியாக்ஷன் வந்ததால் ஆடிப் போய் ஸ்டாலினைத் தொடர்பு கொண்ட அழகிரி, “அறிக்கை விஷயத்தில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. இன்னார் தான் அப்படி அறிக்கை கொடுக்கச் சொல்லி என்னை நிர்பந்தித்தார்” எனத் தமிழக காங்கிரஸ் மேதாவி ஒருவரின் பெயரை ஓப்பனாகவே சொல்லி சரண்டராகிவிட்டாராம். இது தெரியாமல், அந்த மேதாவியே அறிக்கை விஷயத்தில் சமரசம் பேசுவதற்காக திமுக தலைமையைத் தொடர்பு கொண்டாராம். ஆனால், உண்மை தெரியும் என்பதால் அந்தப் பக்கம் எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம்.