கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
தை பிறந்துவிட்டால், "அலங்காநல்லூர் காரியை இந்த வாட்டியாவது பிடிமாடாக்கிப்பிடணும் டோய்", "அந்த வாடிப்பட்டிக்காரனுக்கு ஓவர் பந்தாடா... இந்த வாட்டி அவன் காலை உடைக்கணும்டா", "நம்ம மாடு கெலிச்சி ஒரு பீரோவாவது பரிசு வாங்கி, ஊருக்குள்ள வெற்றி ஊர்வோலம் போவணுமப்போய்" என ஆளாளுக்கு ஒரு லட்சியத்தோடு அலங்காநல்லூர், பாலமேடு நோக்கிப் போய்க் கொண்டிருக்க... இன்னொரு பெருங்கூட்டம் இதை எல்லாம் வேடிக்கை பார்ப்பதற்காகவே வெளியூர்களில் இருந்து வந்து குவியும். இவர்களோடு இப்போது வியாபாரிகளும் குவிகிறார்கள். ஆம், ஜல்லிக்கட்டுக்கென ஒரு பொருளாதாரமும் இப்போது உருவாகிவிட்டது.
பத்துப் பேர் கூடுகிற இடத்திற்கே ஒரு ஐஸ் வண்டிக் காரர் வந்து நிற்கிறபோது, ஆயிரக்கணக்கானோர் கூடுகிற இடத்துக்கு வியாபாரிகள் படையெடுப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது என்கிறீர்களா? கரும்பு, கம்மங்கூழ், டீ, வடை, தயிர்ச்சோறு, தக்காளிச்சாதம் வியாபாரத்தைப் பற்றிப் பேசவில்லை. சில ஊர்களில்நிகழ்ச்சியைப் பார்க்க டோக்கன் போட்டு சம்பாதிக்
கிறார்களே அதையும் சொல்லவில்லை. காளைகள் விளையாடும் களத்துக்கு வந்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிய பேச்சு இது.
இந்தக் கம்பெனிகள் முதலில் நுழைந்தது காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் ஸ்பான்ஸராகத்தான். சைக்கிளும் அண்டாவும்பரிசாய் வழங்கிக் கொண்டிருந்த அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் தங்க நாணயம், ஸ்மார்ட் போன், பைக், கார்களை வாரி வழங்கும் ஸ்பான்ஸர்களாக அறிமுகமானார்கள் அவர்கள். கூடவே, தங்கள் நிறுவனத்தை விளம்பரம் செய்துகொள்ளவும் செய்தார்கள். கேலரிகள் தொடங்கி மாடுபிடி வீரர்களின் டீ சர்ட் வரையில் அவர்களது விளம்பரங்களே ஆக்கிரமித்தன.