பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகே இருக்கிறது நெற்குப்பை. அந்தச் சின்னஞ்சிறு ஊரில் இருக்கும் ஒரு பழங்காலத்து செட்டிநாட்டு வீடு. அங்கே, ஆளுக்கொரு வேலையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த வீட்டின் உறவுகள். அவர்கள் இப்படி வேலைகளைப் பிரித்துக்கொண்டு, தங்கள் வயதையும் கடந்த சுறுசுறுப்புடன் பம்பரமாய்ச் சுழல்வதன் காரணம்... வந்து கொண்டிருக்கும் தைப்பொங்கல் திருநாள்தான்!
‘தைப் பொங்கல்னா எல்லார் வீட்லயும் இது நடக்கிறதுதானே... இதென்ன பெரிய அதிசயம்?’ என்று சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். அந்த வீட்டில் பிறந்த நான்கு சகோதரர்களின் பிள்ளைகள், அவர்களின் வாரிசுகள் என 4 தலைமுறைச் சொந்தங்கள் ஒன்றுகூடி கொண்டாடும் மெகா பொங்கல் அது.
இந்தக் குடும்பத்துச் சொந்தங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அனைவரும் தைப்பொங்கலுக்காக முன்கூட்டியே பயணங்களைத் திட்டமிட்டு, நெற்குப்பைக்கு வந்துவிடுகிறார்கள். இவர்களெல்லாம் ஒன்றுகூடி தங்களது பூர்விக வீட்டில் கொண்டாடும் கூட்டுக்குடும்பப் பொங்கல் அதிசயம்தானே!