என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
திருவனந்தபுரத்தின் மையப் பகுதியில் இருக்கிறது மண்டல புற்றுநோய் மையம். அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவனந்தபுரம் ரயில் நிலையம். இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது சஜிகுமாரின் ஆட்டோ. பெரும்பாலான சவாரி முற்றிலும் இலவசம் என்பதுதான் இதில் விசேஷம்!
ஆம்... நம்மூர் ஆட்டோக்களில் ‘பிரசவத்துக்கு இலவசம்’ என எழுதியிருப்பதுபோல், சஜிகுமாரின் ஆட்டோவில் ‘புற்றுநோயாளி
களுக்கு இலவசம்’ என எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல... இவரது ஆட்டோ சாலையில் சென்றாலே அனைவருமே ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்துவிடுவார்கள். காரணம், ஆட்டோவின் முன் பகுதியில் விளையாட்டுப் பொம்மைகள், மீன் தொட்டி
என ஆட்டோவை அழகுற அலங்கரித்திருக்கிறார்.
புற்றுநோயாளிகளின் வலியை உளபூர்வமாக உணர்ந்து அவர்களுக்கு உதவும் இந்த சஜிகுமார், ஒருகாலத்தில் உடல் ரீதியாகப் பிறருக்கு வலி தரும் வேலையைச் செய்துவந்தவர். ஆம், கூலிப்படையில் ஒருவராக அடிதடியில் ஈடுபட்டுவந்தவர். ஒருகட்டத்தில் மனம் திருந்தி சமூகசேவையோடு கூடிய இந்த வாழ்வை இரண்டாவது இன்னிங்ஸாகத் தொடங்கியிருக்கிறார்.