பெண்கள் கல்வி கற்பது இன்றைக்கு வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், மூட நம்பிக்கைகள் மிகுந்த 19-ம் நூற்றாண்டில் இது மிகவும் கடினமான காரியம். அந்தக் காலகட்டத்திலேயே மருத்துவம் படித்து, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆனந்தி கோபால் ஜோஷி.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே நகரில், வசதியான குடும்பத்தில் 1865-ம் ஆண்டு பிறந்தவர் யமுனா. இவரது குடும்
பத்தினர் பல தலைமுறைகளாக நிலச்சுவான்தார்களாக இருந்தனர். ஆனால், ஆங்கிலேய அரசு விதித்த கடுமையான வரிகளால், கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களின் செல்வத்தை இழந்த யமுனாவின் குடும்பம், யமுனா பிறந்த சில ஆண்டுகளிலேயே வறுமைக்குள் விழுந்தது.
இந்நிலையில், யமுனாவுக்கு 9 வயதாக இருந்தபோது, அவரைவிட 21 வயது மூத்தவரான கோபால்ராவ் ஜோஷி என்பவருக்கு திருமணம் செய்துவைத்தனர். அந்தக் காலத்தில் மகாராஷ்டிராவில், திருமணத்துக்குப் பிறகு பெண்களின் பெயரை மாற்றும் வழக்கம் இருந்தது. அதன்படி யமுனாவின் பெயர் ஆனந்தி கோபால் ஜோஷி என்று மாற்றப்பட்டது.
தானே நகரில் இருந்த தபால் ஆபீஸில் கிளார்க்காக பணிபுரிந்து வந்தார் கோபால் ஜோஷி. ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்தவரான கோபால் ஜோஷி, தன் புது மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினார். ஆனந்திக்கு படிப்பில் அதிக ஆசை இருப்பதை அறிந்த ஜோஷி, அவரை நன்றாகப் படிக்கவைத்தார்.
14 வயதிருக்கும் போது ஆனந்தி ஒரு குழந்தைக்குத் தாயானார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நோயுற்ற காரணத்தால், பிறந்த 10 நாட்களிலேயே அந்தக் குழந்தை இறந்துபோனது. இதனால் ஆனந்தியும் ஜோஷியும் துக்கத்தில் ஆழ்ந்தனர். தக்க சமயத்தில் உரிய சிகிச்சை அளித்திருந்தால் குழந்தை பிழைத்திருக்குமே என்று இருவரும் சொல்லிச் சொல்லி அழுது தீர்த்தனர்.
அந்தச் சமயத்தில் ஆனந்தியின் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. தனக்கு நேர்ந்ததைப் போல் மற்றவர்களுக்கு நேராமல் இருக்க, தானே ஒரு டாக்டராக வேண்டும் என்பதே அந்த எண்ணம். இதைத் தயக்கத்துடன் தனது கணவரிடம் கூறினார் ஆனந்தி.
மனைவியின் விருப்பத்தைப் பற்றி கேள்விப்பட்டதும், அவரது தோளை ஆதரவாகப் பற்றிக்கொண்டார் கோபால் ஜோஷி. “உனக்கு டாக்டர் ஆகவேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அதற்கு தேவையான தகுதி உனக்கு உள்ளது என்று நம்பினால் மேற்கொண்டு படி. தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன்” என்று உற்சாகமூட்டினார் கோபால் ஜோஷி. அத்துடன் தன் மனைவி டாக்டருக்குப் படிக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்தார்.
ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்கவைக்கத் திட்டமிட்ட கோபால், அதற்கு உதவுமாறு கூறி அமெரிக்கன் மெஷினரிக்கு கடிதம் எழுதினார். அவர்களும் அதற்கு சம்மதிக்க, ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் இறங்கினார். ஆனால், அவரது உறவினர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
“கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட நம் சமூகத்தில் ஆண்களே கடல்தாண்டி போகக்கூடாது என்று கூறுவார்கள். ஒரு பெண்ணை எப்படி கடல் கடந்து அனுப்பலாம்” என்று பலரும் கோபால் ஜோஷியை எதிர்த்தனர். இந்த எதிர்ப்புகளைப் புறந்தள்ளி ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்பினார் கோபால் ஜோஷி. கனவுகளைச் சுமந்தபடி கொல்கத்தாவில் இருந்து நியூயார்க் நகருக்கு கப்பலில் புறப்பட்டுச் சென்றார் ஆனந்தி.
அமெரிக்காவுக்குச் சென்ற ஆனந்திக்கு, பென்ஸில்வேனியா நகரில் உள்ள பெண்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்தியாவில் இருந்த காலகட்டத்திலேயே அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டார் ஆனந்தி. இந்நிலையில் அமெரிக்காவின் குளிர்ச்சி
யான தட்பவெட்பம் அவரது உடல்நிலையை மேலும் பாதித்தது. அங்கு அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் அந்தச் சூழ்நிலையிலும் படிப்பை அவர் கைவிடவில்லை. நோயுடன் போராடிக்கொண்டே மருத்துவப் படிப்பை முடித்தார்.
இந்தியாவைச் சேர்த்த பெண் ஒருவர் முதன்முதலாக மருத்துவப் படிப்பை முடித்தது அந்நாளில் மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்பட்டது. ஆனந்தியைப் பாராட்டி, பல்வேறு பத்திரிகைகளும் கட்டுரைகளை வெளியிட்டன. ஆனந்தியைப் பற்றியும், அவரது சாதனையைப் பற்றியும் கேள்விப்பட்ட விக்டோரியா மகாராணி, பால கங்காதர திலகர் ஆகியோர் ஆனந்திக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
மருத்துவப் படிப்பை முடித்துக்கொண்டு 1886-ல், ஆனந்தி இந்தியாவுக்குத் திரும்பினார். துறைமுகத்தில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோலாப்பூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் ஆனந்திக்கு வேலை கிடைத்தது. அங்கே பணியில் சேர்ந்து இந்தியர்களுக்கு மருத்துவம் பார்க்க ஆர்வமாக இருந்தார் ஆனந்தி. ஆனால், விதி வேறுவிதமாக விளையாடியது.
ஏற்கெனவே காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்தி, அமெரிக்காவில் இருந்து திரும்பிய சிறிது நாட்களிலேயே மேலும் மோசமாக பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தனது 22-வது பிறந்தநாளுக்கு ஒரு மாதம் முன்னதாக அவர் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு ஒட்டுமொத்த இந்தியாவே கண்ணீர் சிந்தியது. இந்தியாவில் பெண்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரியைக் கட்டவேண்டும் என்பது ஆனந்தியின் மிகப்பெரிய கனவாக இருந்தது. ஆனால், அவரது கனவை நனவாக்க முடியாமல் இளம் வயதிலேயே அவரது உயிரைக் குடித்துவிட்டது காசநோய்.
ஆனந்தி கோபால் ஜோஷி இளம் வயதில் மறைந்தாலும், ஏராளமான இந்தியப் பெண்களுக்கு அவர் ரோல் மாடலாக விளங்கினார். அவரைப் பின்பற்றி பல பெண்கள் மருத்துவத் துறையில் நுழைந்து சாதனை படைத்தனர்.
வாழ்க்கைப் பாதை
இந்தியாவின் முதல் பெண் டாக்டரான ஆனந்தி கோபால் ஜோஷி, 1865-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி பிறந்தார். அமெரிக்காவில் மருத்துவம் படித்து 1886-ல் இந்தியா திரும்பினார். ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பதை லட்சியமாகக் கொண்டிருந்த ஆனந்தி, அது நிறைவேறாமலேயே தனது 21-வது வயதில் காலமானார். இந்தியாவில் காலமானாலும் அவரது அஸ்தி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவரது வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சித் தொடராகவும், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. மகாராஷ்டிர அரசு இன்றுவரை இவரது பெயரில் ஃபெல்லோஷிப் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.