முதுமை எனும் பூங்காற்று 15: சொத்துக்கள் மூன்று


மனிதர்கள் தங்கள் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விஷயங்கள் தங்களுக்குப் பலம் தருபவை என்று நம்புவார்கள். அன்னையின் ஸ்பரிசம் குழந்தைப் பருவத்தில் பலம், பிடித்து எழுந்து நடக்கும்போது திண்ணையும் தூணும் பலம்… என்று வளரும் மனிதர்கள் பின்னர் உறவுகள் தரும் பலத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். முதுமையில் அவர்களுக்கு முக்கியப் பலமாக இருக்கும் மூன்று விஷயங்கள் சேமிப்பு, ஓய்வூதியம் மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவைதான். அவற்றைப் பற்றிக் கொஞ்சம் அலசுவோம்.

60 வயதைக் கடந்து, குடும்பத்தில் தன் கடமையை எல்லாம் முடித்துவிட்டு ஓய்ந்து அமரும்போது பிள்ளைகளின் அன்பும் அரவணைப்பும் எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு ஆரோக்கியமும் பணமும் முக்கியம். இன்று நம்மில் பலருக்கு 40 வயதைத் தாண்டும்போதே பல உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கிவிடுகின்றன. இப்படியான சூழலில் மேலே சொன்ன மூன்று விஷயங்களும் நமக்கு உறுதுணையாக இருக்கும்.

சேமிப்பு எனும் செல்வம்

பணிநிறைவு பெறும்போது கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியைச் சேமித்து அதிலிருந்து நிரந்தர மாதாந்திர வருவாய் ஏற்பட வழிவகை செய்யலாம். அனைத்து தேசிய வங்கிகளிலும் சாதாரண வட்டியைவிட 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை வட்டி விகிதம் அதிகம் வழங்கப்படுகிறது. மேலும், தபால் அலுவலகத்தில் ‘மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்’ என்ற திட்டம் உள்ளது. இதில் நாம் சேமிப்புக் கணக்கு தொடங்கிய ஐந்து வருடங்களில் தொகை முதிர்வடையும். வேண்டுமானால் அடுத்த மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கலாம். இதில் தற்போது 8.7 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதேபோல மாதாந்திர வருவாய்த் திட்டத்தின் மூலம் சேமித்து அந்த வட்டியை வைத்து பெரியவர்கள் பராமரிப்புச் செலவை மேற்கொள்ளலாம். இப்படி சேமித்து பயன்பெறுவது மனதிற்கு ஒரு தெம்பைத் தரும். யாரையும் எதற்கும் எதிர்பார்க்காமல் இருப்பது பெரும் மனநிறைவைத் தரும்.

ஓய்வூதியத் திட்டம்

40 வயதில் இருந்து ஒருவர் தன் முதுமைப் பருவத்திற்குப் பணம் சேர்க்கலாம். ஏனென்றால் தனியார் துறையில் இருக்கும் யாருக்கும் ஓய்வூதியம் கிடையாது. எனவே, மத்திய அரசு 40 வயது உச்சவரம்பை வைத்து ‘பிரதம மந்திரி சிரம் யோகி மந்தன் யோஜனா’ எனும் திட்டத்தையும், ‘அடல் பென்ஷன் யோஜனா’ எனும் திட்டத்தையும் கொண்டுவந்தது. இதில் 1,000 முதல் 12,000 ரூபாய் வரை சேமிக்கலாம். மாதச் சம்பளமாக 15,000 ரூபாய் அல்லது அதற்குக் குறைவாகப் பெறுபவர்கள் இதன் மூலம் பயன் பெறலாம். 60 வயதை எட்டியவுடன் சேமிக்கும் அளவிற்கு ஏற்ப ஓய்வூதியம் கிடைக்கும். 1,000 ரூபாய் கூட சேமிக்க முடியாத நிலையில் உள்ள முதியோருக்கு மத்திய அரசு ‘இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம்’, ‘இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம்’, ‘இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியம்’ எனப் பல திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் வழங்குகிறது.

இந்தத் திட்டங்களுக்கு விண்ணப்பித்தால் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும். மாநில அரசின் சார்பில், 60 வயதைத் தாண்டியவர்களுக்கு ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற கைவிடப்பட்ட மனைவிகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், 50 வயதிற்கு மேல் திருமணம் ஆகாமல் தனியாக இருக்கும் ஏழைப் பெண்களுக்கு ஓய்வூதியம் என நான்கு திட்டங்களின் கீழ் 1,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. எனவே, ஓய்வூதியம் கிடைக்கும் வகையிலான வேலைக்குச் செல்லவில்லையே என்று விரக்தி அடைய வேண்டியதில்லை. இத்தனை வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை நமக்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

மத்திய அரசின் திட்டங்களைப் பெற அவை தொடர்பான இணையதளங்கள் உதவும். மாநில அரசின் உதவித் தொகைக்கு அருகில் உள்ள கிராமப் பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் என அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பயன்பெறலாம். முதியோருக்கு விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்வது, கேட்கப்படும் அத்தாட்சிகளை இணைத்து ஓய்வூதியத்தைத் பெற்றுத்தருவது போன்ற உதவிகளை இளைஞர்கள் செய்யலாம்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள்

60 வயதிற்கு மேல் செலவு என்பது பெரும்பாலும் மருத்துவச் செலவுதான். ரத்த அழுத்தம், நீரிழிவு, பற்களில் பிரச்சினை, மூட்டு வலி என்று உடல்சார்ந்த பிரச்சினைகளைப் பலர் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு இருந்தால் எந்த நேரத்திலும் அது கைகொடுக்கும். இதில் முக்கியமானது மூத்த குடிமக்கள் காப்பீடு திட்டம். இதில் 2 லட்ச ரூபாய் வரைக்கும் காப்பீடு பெற முடியும். இதற்கு வருடத்துக்கு 10,000 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்தக் காப்பீட்டுத் திட்டம் எடுத்த 30-வது நாளிலிருந்து பயனுக்கு வரும்.

இதற்கு எந்த விதமான மருத்துவச் சான்றிதழும் தேவையில்லை. ஆனால், நாம் பயன்படுத்தவில்லை என்றால் இந்தப் பணம் திரும்பக் கிடைக்காது. வருடத்துக்கு 10,000 ரூபாய் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்கள், அம்மா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 
ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களுக்கு விண்ணப்பித்து அட்டையைப் பெற்றுக்கொண்டு பலன் பெறலாம். இதன் மூலம் மருத்துவக் காப்பீட்டுப் பலன் பெற இயலும்.

‘ராஷ்ட்ரிய வயோஷ்ரி யோஜனா’ என்ற திட்டம் மூலம் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கைத்தடி, முழங்கால் ஊன்றுகோல், காது கேட்கும் கருவிகள், சக்கர நாற்காலி மற்றும் செயற்கைப் பற்கள் போன்ற வாழ்க்கை உதவி உபகரணங்கள் அளிக்கப்படுகின்றன.

‘பென்ஷன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற ஒரு லட்ச ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை உதவி அளிக்கப்படுகிறது. இவை அனைத்துக்குமே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வங்கிக் கணக்கில் பணம் சேமிக்கப்படும்.

கூடுதல் உதவிகள்

60 வயதைக் கடந்தவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் மாதத்திற்கு 10 பயணச்சீட்டுகளை இலவசமாகத் தருகிறது மாநில அரசு. வயதிற்கான ஆதாரத்தைக் காட்டி அருகில் உள்ள பணிமனையில் அவற்றைப் பெற்றுப் பயன்பெறலாம். முதியோருக்கு ரயில்களில் 50 சதவீத கட்டணச் சலுகை உள்ளது. மேலும், மருத்துவத்திற்காகப் பயணித்தால் தேவையின் அடிப்படையில் ஒரு உதவியாளரை அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கும் கட்டணச் சலுகையைப் பயன்படுத்தலாம்.

சேமிப்பதற்கும், பணம் பெறுவதற்கும், பயன் பெறுவதற்கும் இப்படிப் பல வழிகள் உள்ளன. இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது முதியோரின் உரிமை. முதியோருக்கு இவற்றை எடுத்துச்சொல்லி அவர்களின் இறுதிக்காலத்தை இன்பமயமாக்குவது இளைஞர்களின் கடமை!

(காற்று வீசும்…)

x