கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
மரணம் சம்பவித்துவிட்ட வீடுகளில் இருப்பவர்கள் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுசெய்ய முடியாத அளவுக்கு உடைந்துபோயிருப்பார்கள். உறவினர்களும் நண்பர்களும்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். ஓரளவு வசதியான நிலையில் இருப்பவர்கள்கூட இதுபோன்ற தருணங்களில் தடுமாறி நிற்பார்கள் எனும்போது, பொருளாதார வசதி இல்லாதவர்களின் நிலை இன்னும் பரிதாபமானது. அப்படி துக்கத்தில் துவண்டு நிற்கும் மனிதர்களுக்குத் துணை நிற்கும் அரிய பணியைச் செய்கிறது கோவையில் உள்ள ‘தாய்மை’ அறக்கட்டளை.
துக்க வீடு எதுவானாலும் ஷாமியானா, ஃப்ரீசர் பாக்ஸ், மேஜை, நாற்காலி போன்றவற்றை இலவசமாகவே தந்து சேவையாற்றுகிறது இந்த அறக்கட்டளை. இதை முன்னின்று நடத்துபவர்கள் பெண்கள் என்பது நெகிழ்ச்சி தரும் இன்னொரு செய்தி.
கோவை, சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியின் மகாத்மா காந்தி சாலையில் இயங்கிவருகிறது இந்த அறக்கட்டளை. ‘தாய்மை அறக்கட்டளையின் இலவச நீத்தார் சேவை’ என்ற பேனர் கட்டப்பட்டிருந்த அந்தக் கொட்டகைக்குள் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று பலர், ஷாமியானா, நாற்காலி உள்ளிட்ட பொருட்களைத் தூக்கிக்கொண்டிருந்தனர். ஒரு துக்க வீட்டுக்குப் பொருட்களை எடுத்துச்செல்லும் வேலையில் இருந்த அவர்களுடன் பேசினேன்.