சட்டமன்றத் தேர்தல்... வியூகத்தை விரைவில் அறிவிப்போம்!- பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

புத்தாண்டு தினத்தன்று பொதுக்குழு கூட்டி,  ‘எங்கள் தயவால்தான் அதிமுக ஆட்சியே தொடர்கிறது' என்று சொன்ன கையோடு,  ‘தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தக்கூடாது' என்றும் தீர்மானம் போட்டிருக்கிறது பாமக. ஒவ்வொரு தேர்தலிலும் எந்த அணி வெல்லும் என்பதைக் கணித்து அந்த அணியோடு கூட்டணி வைக்கும் பாமக, சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து காய்நகர்த்தத் தொடங்கிவிட்டதா? அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலுவிடம் பேசலாம்.

குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்து ஓட்டுப்போட்ட பாமக, தேசிய குடிமக்கள் பதிவேடு  (என்ஆர்சி)திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது என்கிறதே ஏன்?

சிஏஏ வேறு, என்ஆர்சி என்பது வேறு. சிஏஏ என்பது குடியுரிமையைப் பறிக்கிற சட்டமல்ல. இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம். அது சிறுபான்மையினருக்கு எதிரானதோ, ஆபத்தானதோ கிடையாது. ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்தியக் குடிமகனாக இருப்பவர்கள் அல்லது வெளியில் இருந்து குடியேறியவர்களைக் கணக்கெடுத்து தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் பதிவு செய்வது. அஸ்ஸாமில் அமல்படுத்தப்பட்ட என்ஆர்சியை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்து, என்பிஆர் என்று கொண்டுவர மத்திய அரசு அறிவித்தது. அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். ஏன் எதிர்க்கிறோம் என்றால், தமிழ்நாடு பிறநாடுகளுடன் நில எல்லையைப் பகிர்ந்துகொள்கிற நாடு அல்ல. அதனால் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ஊடுருவுவதற்கு வாய்ப்பு இல்லை. இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தவர்களின் முழு விவரமும் அரசாங்கத்திடம் இருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தத் தேவையில்லை என்கிறோம். தமிழ்நாட்டில் அதை அமல்படுத்தினால் தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும்.

x