போலீஸ்தான் எங்க குலசாமி!- புதிய பாதை கண்ட முருகனின் கதை


என்.பாரதி
readers@kamadenu.in

தென்காசி அருகில் உள்ள இடைகால் கிராமத்தில் இருக்கிறது அந்த சாலையோர சூப் கடை. ஆட்டுக்கால் சூப், குடல், பட்டாணி சுண்டல் என்று அணிவகுக்கும் பதார்த்தங்களிலிருந்து சுடச்சுட ஆவி பறக்கிறது. மெல்லிய தூறலுக்கு இதமாக சூப் அருந்த வந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடைக்காரர் முருகனுக்கு 75 வயது. பணிவும் கனிவுமாகக் காட்சி தரும் முருகன், ஒரு காலத்தில், போலீஸ் தேடும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர்.

இன்று மதிப்புக்குரிய மனிதராக வாழ்க்கையை நடத்தும் முருகனுக்கு அந்த வாழ்க்கைக்கான பாதையைக் காட்டியவரும் ஒரு போலீஸ்காரர் தான். சாம்பவர் வடகரை காவல் நிலைய எஸ்ஐ-யாக இருந்த சேகர்தான் அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர். பணியிட மாற்றலாகி சென்னைக்குச் சென்றுவிட்ட சேகர், பல வருடங்களுக்குப் பிறகு, சமீபத்தில் நெல்லை மாநகர சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் நலப் பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். அதைக் கேள்விப்பட்ட முருகனும், அவரது மனைவி அருணாதேவியும் அவரை நேரில் போய்ப் பார்த்து மாலை அணிவித்து மரியாதை செய்து நெகிழவைத்திருக்கிறார்கள். முன்னாள் குற்றவாளிக்கும் காவல் துறை அதிகாரிக்குமான அரிதான உறவைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இடைகால் கிராமத்துக்குச் சென்றிருந்தேன்.

முருகனின் தள்ளுவண்டியில், ‘உழைப்பே உயர்வு தரும், செய்யும் தொழிலே தெய்வம்’ என உத்வேகம் தரும் வாசகங்கள் பளிச்சிடுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு சூப் ஊற்றிக்கொடுத்துக்கொண்டே என்னிடம் பேசத் தொடங்குகிறார் முருகன். “அப்பா ராமசாமி விவசாயி. வீட்ல நாலு பிள்ளைங்க. நான் ஒண்ணாம் கிளாஸ் வரைக்கும்தான் ஸ்கூலுக்குப் போனேன். அதுக்கப்புறம் சேர்க்கை சரியில்லை. பருவ வயசுல நண்பர்களைச் சரியா அமைச்சுக்கலை. இப்போ ஸ்கூட்டர், பைக்னு இருக்கிற மாதிரி அப்போ வீட்டுக்கு வீடு சைக்கிள் இருக்கும். கூட்டாளிங்ககூட சேர்ந்து சைக்கிள் திருட ஆரம்பிச்சுட்டேன். ஆனா அதுல கொஞ்சம் சூதானமா இருப்பேன். அக்கம்பக்கத்துல கை வைக்க மாட்டேன். சிவகாசி, ராஜபாளையம்னு திருடப் போவேன்.

x