வாய் பேசிடும் புல்லாங்குழல்கள்
ஆமாம் ஊதுகுழல்கள்
ஓட்டை நிரம்பியவைதான்
இசை தானாகவே வந்துவிடாது.
மேய்ப்பனைப் போல
நல்லதொரு வாயசைவுகளாலே
இசை உயிர் பெருக்குகிறது.
காற்றில் அலையும்
மகரந்தங்களைப் போல
ஏதோவொரு இடத்தில் விளைந்திடாது
செதுக்கும் உயிரசைவுகளை
ஒட்டியே நாதங்கள் பிறக்கும்.
பேருந்து நிறுத்தங்கள்
தொடர் வண்டிகள் என
ஒவ்வொரு இடத்திலும்
காற்றின் அலைவரிசையில்
கலந்தே ஒலிக்கும்.
பார்வையற்ற மனிதர்களின் குரல்களே
பரிதாப வாழ்வை ஞாபகம் செய்யும்
அவர்களின் கைகளை
தொடர் சங்கிலியாய் பிடித்திருப்பதுபோல்
கானங்களும் பூத்தேயிருக்கும்.
வாய் பேசிடும் புல்லாங்குழல்கள்
தள்ளிவைக்கின்றன
சில கவலைகளை!
- க.சோ.திருமாவளவன்
ஈரம் படராத நிலம்
அருவியை மலையில்
காயப்போட்டு எடுக்கிறாள்
மடித்துவைக்க
ஈரம்
பெருக்கெடுத்துக்கொண்டேதான் இருக்கிறது
ஒட்டப் பிழிந்து உதறி
‘கிளிப்’ இட்டுக் காத்திருக்கிறாள்
காற்றில் விழாமல் காய
அலைந்து கிழிந்தது. கண்ணில் தெரிய
பிடிப்பை நீக்கிய தருணம்
அடைபட்டது துள்ளலிடுகிறது
நதியாக.
இனி அவள் முயற்சியைக் கைவிட்டு
நிலத்தைக் காயவைக்க ஆயத்தமாகிறாள்
இம்முறை அடங்க நினைத்த நீர்
நிலம் நனைக்காமல்
கடல் புகுந்து உப்பாகிறது.
- ஸ்ரீகா