முதல் உலகப்போரில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட உயிர்க்கொல்லி வாயுக்கள், புதிய ஆயுத வரிசையை அறிமுகப்படுத்தின. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாயுக்களும் அவற்றிடமிருந்து தற்காக்க நடைபெற்ற முயற்சிகளும் உலக அளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன. வெடிகுண்டு, பீரங்கி, ஏவுகணை முதலிய ஆயுதங்களைப் போலில்லாமல் தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் இயற்பியல், வேதியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் துறைகளின் அடிப்படைகள் போருக்கு அதிகம் தேவைப்பட்டன. இத்தகைய அறிவியல் நடவடிக்கைகளால் ‘வேதியல் நிபுணனின் போர்’ என்றே முதல் உலகப்போர் வேடிக்கையாகக் குறிப்பிடப்பட்டது.
உயிரி ஆயுதம்
நோய்களைப் பரப்பும் கிருமிகள் ஆயுதங்களாக ஆளப்பட்டது மனித சிந்தனையின் குரூரத்தின் உச்சம். உடலில் நேரடியாக நோய் பரப்பும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்றவை ஆயுதங்களாகக் கையிலெடுக்கப்பட்டது மனிதகுலத்தின் மிகப்பெரும் ஆபத்து. வெடிமருந்துகளைக் கண்டுபிடித்து அழிக்கலாம். இந்த உயிரி ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது பாதுகாப்புத் துறையினருக்கு பெரும் சவாலாக மாறியது. ‘பேசிலஸ் ஆந்தராஸிஸ்’ என்ற பாக்டீரியாவால் பரவும் ஆந்த்ராக்ஸ் நோயைப் பற்றி நீங்கள் மறந்திருக்க முடியாது. 2011-ல், அமெரிக்காவில் ஆந்த்ராக்ஸ் நோய்க்கிருமிகள் பொடி வடிவில் கடிதங்களில் அனுப்பப்பெற்ற உயிரித் தாக்குதல், பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிவிட்டுப் போனது.
புதிய பேராபத்து
ஹிரோஷிமா, நாகசாகியில் லட்சக்கணக்கானவர்களைக் கொன்ற இரண்டாம் உலகப்போரின் அணுஆயுத அழிவுகளை நாம் அறிவோம். வெடிபொருட்களோடு கதிரியக்கப் பொருட்களை உமிழும் வெடிகுண்டுகளை ‘அழுக்கு குண்டுகள்’ (Dirty Bombs) என்கிறார்கள். இந்த உலக அளவிலான மாற்றங்களால் அணு-உயிரி-வேதியல் (Nuclear-Biological-Chemical : NBC) என்ற புதிய வகை பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு, தற்காப்புத் தொழில்நுட்ப முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது இந்தப் பேரழிவு ஆயுதங்கள் வேதி-உயிரி- கதிரியக்கம்-அணு (Chemical, Biological, Radiological and Nuclear : CBRN) எனக் குறிப்பிடப்படுகின்றன. இதோடு மேம்பட்ட வெடிபொருளும் (Enhanced explosives) சேர்க்கப்பட்டு CBRNe என்று அழைக்கப்படுகிறது.
வெடிகுண்டி, பீரங்கி, ஏவுகணை போன்றவை ஓடுபாதைகள், கட்டிடங்கள், விமானங்கள், கப்பல்கள் என உயிரில்லா கட்டமைப்புகளைத் தாக்கும். ஆனால், இந்த வேதி-உயிரி-கதிரியக்க-அணு ஆயுதங்கள் மனிதர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டவை என்பது சில்லிட வைக்கும் உண்மை.
போர் ஆபத்துகளைத் தாண்டிய பேராபத்து, தீவிரவாதத்தின் வடிவில் வந்து நிற்கிறது. தீவிரவாதத்தின் கூரிய விரல்கள் மனித சமுதாயத்தின் வேர்களை அவ்வப்போது அறுக்க முயலும் காலகட்டத்தில், வேதி-உயிரி-கதிரியக்க-அணு தாக்குதல்களின் ஆபத்து
அதிகரித்திருக்கிறது. இவற்றுக்கெதிராக நம் மக்களைக் காக்கும் தொழில்நுட்பங்கள் என்னென்ன?
சுவாசக் கவசம்
வேதி-உயிரி-கதிரியக்க-அணு பாதிப்படைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள நமது வீரர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் வேண்டும். இதற்காக ராணுவ விஞ்ஞானிகள் சுவாசக் கவசத்தை உருவாக்கியுள்ளனர். இரண்டு காற்று வடிகட்டிகளோடு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முகமூடியில், பார்க்க வசதியாக இரண்டு கண்ணாடிகள் உண்டு. முகமூடி அணிந்தவர் மற்றவர்களோடு பேச ஏதுவாக மின்னணு தொழில்நுட்பத்தில் குரல் ஒலியை அதிகப்படுத்தம் வசதியும் உண்டு.
இது ராணுவ வீரர்களுக்காக உருவாக்கப்பட்டாலும் சுரங்கத்தில், சுவாச ஆபத்துள்ள தொழிற்சாலைகளில், கிருமி தொற்று அபாயமுள்ள மருத்துவமனைகளிலும் இதைப் பயன்படுத்தலாம். 2003-ல், சார்ஸ் (SARS) வைரஸ் இந்தியாவை பாதித்தபோது
இந்த சுவாசக் கவசம் தற்காப்புக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கவச உடை
சுவாசக்கவசத்தோடு உடல் கவசமும் இருந்தால்தான் பாதிப்பிலிருந்து வீரர்கள் தப்ப முடியும். குவாலியரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Defence Research and Development Establishment-DRDE) விஞ்ஞானிகள் உருவாக்கிய குறைந்த எடை கொண்ட கவச உடை(CBRN Suit), வேதி-உயிரி-கதிரியக்க-அணு பாதிப்படைந்த பகுதிகளில் ராணுவ வீரர்கள் நுழையப் பயன்படுகிறது. தூண்டப்பட்ட கார்பன் உருண்டைகள் (Activated Carbon Spheres) பூசப்பட்ட துணி இதில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீரும் எண்ணெயும் ஒட்டாது. எளிதில் துணி கிழியாது. உடை இரண்டடுக்குத் துணியாலானது. இரண்டு அடுக்குகளுக்கு இடையேயும் தூண்டப்பட்ட கார்பன் உருண்டைகள் நிரப்பப்பட்டுள்ளதால் காற்று வடிகட்டப்பட்டு வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. காற்றோட்டம் இருப்பதால் அணிந்து பயன்படுத்த வீரர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும், இந்தக் கவச உடையைத் துவைக்கவும் முடியும்.
கவச வாகனம்
சுவாசக் கவசமும் கவச உடையும் தயார். எப்படி வேதி-உயிரி-கதிரியக்க-அணு பாதிப்படைந்த பகுதிகளில்
பயணிப்பது? கவச வாகனமும் தேவை. இதற்காக ரோந்து கவச வாகனத்தை (NBC Recce Vehicle) உருவாக்கியுள்ளனர் ராணுவ விஞ்ஞானிகள். மராட்டிய மாநிலம் அஹமதுநகர் பகுதியிலுள்ள வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Vehicles Research & Development Establishment -VRDE) தயாரிப்பு இந்த வாகனம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் திட மற்றும் திரவ மாதிரிகளைச் சேகரிக்க இந்த வாகனத்தில் வசதி இருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றி எச்சரிக்கைக்காக அடையாளக்குறிகளை ஏற்படுத்தும் வசதியும் உண்டு. நீரிலும் நிலத்திலும் செல்லும் இந்தக் கவச வாகனத்தில் தற்காப்புக்கு 30 மி.மீ உள்விட்ட துப்பாக்கி பொருத்தப்பட்டிருக்கும். கட்டுப்பாட்டுக் கேந்திரங்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் வசதியும் இதில் உண்டு.
நீர்ச் சோதனை
குடிநீரிலும் உணவுப்பொருட்களிலும் கூட கிருமிகளைக் கலந்த நிகழ்வுகள் வரலாற்றில் உண்டு. குடிநீரில் நுண்ணுயிரிகள் கலந்திருப்பதைக் கண்டறிய, போர் வீரர்கள் பயன்படுத்த வசதியாக எளிய சோதனை முறைகளை உருவாக்கியிருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். சிறிய சோதனை புட்டியில் நீரைச் சேகரித்து ஒரு இரவு வைக்க வேண்டும். நீர் கருப்பு நிறமாக மாறினால் நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல.
நீரில் விஷம் கலந்திருந்தால் எப்படிக் கண்டுபிடுப்பது? அதற்கும் சோதனை இருக்கிறது. போர் வீரர்கள் கையாள வசதியாக விஷச் சோதனை பெட்டி (Poison Detection Kit) வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரை ஊற்றினால் நிறம் மாறும் எதிர்வினைக் காகிதங்கள் (Reagent Papers) இப்பெட்டியிலிருக்கும். இதை வைத்து நீரில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறதா என்பதை வீரர்களே சோதித்து அறியலாம்.
காற்றில் கலப்படம்
காற்றில் உயிர் கொல்லி வாயுக்களைக் கலக்கும் தீவிரவாத நடவடிக்கைகளை ஊடகங்களில் நீங்கள் அறிந்திருக்கலாம். எப்படி இத்தகைய சூழல்களைக் கையாள்வது? இதற்கு சில வழிகள் உண்டு. ராணுவ விஞ்ஞானிகளின் கையடக்க வாயு க்ரோமடோகிராஃப், காற்றில் வேதிப்பொருள்கள் கலந்திருக்கிறதா என்பதை கண்டறிந்து சொல்லும்.
நரம்பு மண்டலத்தை தாக்கும் வாயுக்களான சாரின், சோமன், டாபூன், விஎக்ஸ், ஃபாஸ்ஜீன், ஹைட்ரஜன் சையனைட் ஆகியவை வேதி ஆயுதங்களாக உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாயுக்களுக்கு நரம்பு முகவர்கள் (Nerve Agents) என்று பெயர். இவற்றைக் கண்டறிந்தால் அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளைத் துவங்கலாம். இந்த வாயுக்களைக் கண்டறியும் கருவியும் (Nerve Agent Detector) உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவி ராணுவத்தில் மட்டுமின்றி, முக்கியப் பிரமுகர்களைப் பாதுகாக்கும் சிறப்புக் காவல் படையினராலும் பயன்படுத்தப்படுகிறது.
உயிர்க் கொல்லி வாயுக்களால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உடனடியாக அட்ரோபைன் சல்ஃபேட்-பாம் க்ளோரைடு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். மருத்துவருக்கோ செவிலியருக்கோ காத்திராமல் வீரர்களே பயன்படுத்தும் வகையில் இந்த மருந்து தானியங்கி ஊசி (Autoject Injector) வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமின்றி தேவைப்பட்டால் தங்களுக்கும் இம்மருந்தை செலுத்திக் கொள்ளலாம்.
நடமாடும் கவசக் கூடாரம்
வேதி-உயிரி-கதிரியக்க-அணு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சையளிக்க கவச கூடாரம் தேவை. தற்காலிக கூடாரங்களை அமைக்க அவகாசம் இருக்காது.
அப்படி அமைக்கும் பணியில் ஈடுபடுபவர்களும் பாதிப்புக்கு தப்ப முடியாது. இதற்கு மாற்றாக நடமாடும் கவசக் கூடாரம் (Mobile NBC Shelter) உருவாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10 பேரை மீட்பு உதவி வரும் வரை 96 மணிநேரம் பாதுகாப்பாக இதில் வைக்க முடியும். பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை மிக விரைவில் ஆய்வு செய்தால்தான் மீட்பு நடவடிக்கைகளை முடுக்க முடியும். தொலைதூர ஆய்வகங்களால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க, நடமாடும் ஆய்வகமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெகு அருகில் சென்று மாதிரிகளைச் சோதித்து உடனுக்குடன் முடிவுகளை இதனால் அறிந்துகொள்ளலாம். குடிநீர், தொலைத்தொடர்பு உள்ளிட்ட தன்னிறைவு வசதிகள் உடையது இந்த நடமாடும் ஆய்வகம்.
நடமாடும் ஆய்வகம்
பயணங்களில் கைகளைத் தூய்மைப்படுத்த சானிடைசர் பயன்படுத்துகிறோம். அதைப்போல வேதி ஆயுதங்களிலிருந்து தப்பிக்க சானிடைசர் உண்டாக்கினால் என்ன?
(பேசுவோம்...)