குஜராத்தின் உப்புப் பாலைவனம், அசாமின் அடர்வனம் என்று கடந்த இரு வாரங்களாகவே வெளிமாநில வனங்களில் பயணப்பட்டோம். இந்த வாரம் தமிழ் மண்ணுக்குள்ளேயே அமைந்திருக்கும் இன்னொரு சூழல் இணக்கச் சுற்றுலா மையத்துக்குச் சென்றுவருவோம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்துக்குட்பட்ட மலைக் கிராமமான மன்னவனூருக்குத்தான் இந்த வாரம் செல்கிறோம்.
“அட, நம்ம கொடைக்கானல்தானே! நாங்க நாலாயிரம் தடவை போயிருக்கிறோம்” என்று சொல்வபர்களிடம்கூட, “மன்னவனூர் சென்றுள்ளீர்களா?” என்றால், “அது எங்க இருக்கு?” என்று நெற்றி சுருக்குவார்கள். கொடைக்கானல் என்றாலே பிரையன்ட் பார்க், தூண் பாறைகள், கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, கோக்கர்ஸ் வாக், குணா குகைகள், தொப்பி தூக்கிப் பாறை என்று வழக்கமான சில இடங்களில்தான் சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம். வழக்கத்தை மாற்றி வேறு இடம் தேடுவதில் கொடைக்கானல் பிரியர்கள் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை. அதனால்தான், பலரது தேடுதல் எல்லைக்கு வெளியில் இருக்கிறது.
கொடைக்கானலில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மன்னவனூர் எனும் மலை கிராமத்தில், வனத்துறை சார்பில் நடத்தப்படும் சூழல் இணக்கச் சுற்றுலா மையம் இருக்கிறது.
புல்வெளி… பனித்துளி…
மன்னவனூரின் மையக் கவர்ச்சியே அதன் புல்வெளிதான். மலை மீது ஒரு பச்சைக் கம்பளம் போல் இந்தப் புல்வெளி காட்சியளிக்கும். மன்னவனூர் ஏரியும், உடலை உரசிச் செல்லும் சில்லென்ற ஏரிக் காற்றும், பசுமைப் படலமும் கண்கள் வழியாக நமக்குள் புகுந்து சிந்தைக்கும் புத்துணர்வு அளிக்கும். புல்வெளியை நனைக்கும் அளவிலேயே மன்னவனூர் தட்பவெப்பம் எப்போது இருக்கும் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில்கூட இங்கு வெப்பநிலை 25 டிகிரியைக் கடப்பதில்லை. குளிர்காலங்களில் மைனஸ் 3 டிகிரி வரைகூட குளிர்நிலை பதிவாகியிருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன.
வனத்தின் வனப்பு
கொடைக்கானலில் இருந்து மன்னவனூர் செல்ல ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஆகும். ஆனால், வழிநெடுகிலும் காணக்கிடைக்கும் வனத்தின் செழிப்பு, பயண தூரம் இன்னும் நீளக் கூடாதா என ஏங்கவைக்கும். பூம்பாறை வழியாகவே மன்னவனூர் செல்ல வேண்டும். பூம்பாறை வழிநெடுகிலும் முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீன்ஸ், பூண்டு போன்ற காய்கறித் தோட்டங்கள் நிறைந்திருக்கும். ஆப்பிள் தோட்டங்களைப் பார்க்கும்போது பிரமிக்காமல் இருக்க முடியாது.
வழியில் காட்டு எருமைகள், சாம்பார் மான்கள், காட்டுப் பூனைகள், நீலகிரி லங்கூர்கள், நீலகிரி தார் போன்ற விலங்குகளைக் காணலாம். 165 வகையான பட்டாம்பூச்சிகள், 15 வகையான வாத்துகள், பல்வேறு வகை புறாக்கள் எனப் பல்லுயிர்களைக் கண்டு மகிழலாம்.
வடிகட்டும் வனத் துறை
2014 முதல் சூழல் இணக்கச் சுற்றுலா மையமாக மன்னவனூர் செயல்படுகிறது. இதைச் சுற்றிப் பார்ப்பதற்குப் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறுவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பரிசல் சவாரி செய்ய ஒருவருக்கு 75 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ‘டார்மிட்டரி’ வசதி உள்ளது. இதில் 20 பேர் மட்டுமே தங்க இயலும். மன்னவனூருக்கு அதிக அழுத்தத்தைத் தராமல் சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும் என்பதாலேயே, குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகள் தங்கும் வகையில் இந்த விடுதியை வடிவமைத்துள்ளது வனத் துறை. இங்கு உணவும் பறிமாறப்படுகிறது. மன்னவனூரில் விளையும் காய்கறிகளைக் கொண்டு உள்ளூர் மகளிர் நடத்தும் உணவகங்களில் சுவையான பண்டங்கள் சமைக்கப்படுகின்றன. வீட்டுப் பக்குவத்தில் உணவு கிடைப்பதால் சுற்றுலாப் பயணிகள் ரசித்து ருசிக்கிறார்கள்.
வனம் தரும் வாழ்வாதாரம்
மன்னவனூரில் மொத்தமே 5,000 பேர்தான் வசிக்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் கால்நடை மேய்த்தல், காய்கறி சாகுபடியைச் சார்ந்து மட்டுமே இருக்கிறது. அதனால், அவர்களின் பொருளாதாரத்தைச் சற்றே மேம்படுத்தும் வகையிலேயே வனத் துறை சுற்றுலாவைத் திட்டமிட்டிருக்கிறது.
ஏரியில் பரிசல் சவாரி, புல்வெளியில் குதிரை சவாரி செல்வதோடு ஆர்வமுள்ளவர்கள் ட்ரெக்கிங்கும் செல்லலாம். ஆனால், ட்ரெக்கிங் செல்ல வனத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். ட்ரெக்கிங் செல்லும்போது வனத் துறை அலுவலர்களும் உடன் வருவார்கள். பரிசல், குதிரைகளை உள்ளூர்வாசிகள் இயக்கி வருமானம் பெறுகின்றனர்.
ரோம ஆராய்ச்சி மையம்
மன்னவனூர் புல்வெளியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில், மத்திய செம்மறி ஆடு மற்றும் ரோம ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் டோங் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மத்திய செம்மறியாடு ரோம ஆராய்ச்சி நிலையத்தின் தென் மண்டலக் கிளையாக இந்த ஆராய்ச்சி மையம் 1965-ல், அமைக்கப்பட்டது. இங்கு ஆடுகளும் முயல்களும் ஆராய்ச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
ஆடுகளில் பாரத் மெரினோ, ஆஸ்திரேலியன் மெரினோஉள்ளிட்ட வகைகளும், முயல்களில் ஒயிட் ஜயன்ட், சோவியத் சின்சிலா போன்ற வகைகளும் வளர்க்கப்படுகின்றன. மெரினோ வகை ஆடுகள் இறைச்சிக்காகமட்டுமல்லாது ரோமத்துக்காகவும் பராமரிக்கப்படுகின்றன. அவற்றின் ரோமத்தைக் கொண்டு உயர்தர கம்பளிப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தயா
ரிப்புகளைச் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்லலாம்.
20 ரூபாய் கட்டணம் செலுத்தி இந்த மையத்தில் பராமரிக்கப்படும் ஆடுகளையும் முயல்களையும் கண்டுகளிக்கலாம். ஆடு, முயல் வளர்ப்பு முறையைத் தெரிந்துகொள்ளலாம்.
நேரக் கட்டுப்பாடு
மன்னவனூருக்குச் சுற்றுலா செல்ல பயணிகள் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஒருநாள் முழுவதும் குடும்பத்துடன் இன்பமாகச் செலவழிக்க, குறைந்த செலவில் நிறைவான அனுபவத்தைப் பெற மன்னவனூர் சரியான தெரிவாக இருக்கும்.
அனுபவப் பகிர்வு
அண்மையில் மன்னவனூருக்குக் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவந்த தமிழ்நாடு போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தனது பயண அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
“அன்றாடப் பரபரப்புகளுக்கிடையே அவ்வப்போது குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் மிக அவசியமானது. அதுவும் மன்னவனூர் போன்ற சுற்றுலா மையத்துக்குச் சென்றுவந்தால் அங்கு கிடைக்கும் புத்துணர்ச்சி, அடுத்த சில வாரங்களுக்கு மொத்த குடும்பத்துக்கும் உற்சாகம் தரும் உந்துசக்தியாக இருக்கும்.
மன்னவனூர் பற்றி அறிந்ததும் முன்னரே எங்களின் பயணத்தைத் திட்டமிட்டோம். அங்குள்ள வனத் துறை அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடுகளைச் செய்தோம். மன்னவனூர் எங்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி எழில் கொஞ்சும் இடமாக இருந்தது. பசுமையான புல்வெளி பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. நிறையவே புகைப்படங்கள் எடுக்கத் தூண்டியது. உணவகங்களும் தரமாகவே இருக்கின்றன.
இதுபோன்ற சூழல் இணக்கச் சுற்றுலா தலங்களுக்குச் செல்வது நம்மை உற்சாகப்படுத்திக்கொள்ள மட்டுமல்ல; இயற்கைச் சூழலைக் காப்பது நமது கடமை என்பதை மனதில் கொள்ளவும்தான்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் மன்னவனூர் செல்ல ஏற்றவை என்கிறார்கள். பொங்கல் விடுமுறையில் முடிந்தால் மன்னவனூர் சென்று வாருங்களேன். பண்டிகைத் தித்திப்பு பன்மடங்காகும்!
அடுத்து வாரம் கடவுளின் தேசத்தில் கால் பதிக்கலாம். காத்திருங்கள்!
படங்கள் உதவி: ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்