திருமணத்தைப் பற்றி இரண்டு வேறுபட்ட கருத்துகள் உண்டு. திருமண வயதைக் கடந்த பலர், தங்கள் கழுத்தில் கல்யாண மாலை விழ வேண்டுமென கோயில், குளம் என்று அலைந்து திரிவார்கள். திருமணமானவர்களில் சிலரோ, ‘ஏன் அவசரப்பட்டு அந்த முடிவை எடுத்தோம்’ என்று பின்னாட்களில் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு. திருமணத்தின்போது, புகைப்படக்காரர், “மாப்ள… கடைசியா ஒரு முறை சிரிங்க…” என்று சொல்வதைக்கூட வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஆனால், திருமண வாழ்வு எனும் பந்தம் இந்த வேடிக்கைகளைத் தாண்டி வேறு பல பரிமாணங்களைக் கொண்டது.
திருமணமாகி கணவனை இழந்து மனைவி இருப்பதும் தனிமைதான், மனைவி இறந்து கணவன் இருப்பதும் தனிமைதான். ஆனால், திருமணமே செய்துகொள்ளாமல் வயோதிகப் பருவத்தில் ஏற்படும் தனிமையின் தாக்கம் துயர் நிரம்பியது. திருமணமாகி பிற்காலத்தில் தனிமை ஏற்பட்டால் சமாதானப்படுத்தவும், ஆற்றுப்படுத்தவும் பிள்ளைகள், இருப்பார்கள். ஆனால், திருமணம் ஆகாமல் தனியாக வாழ்பவர்கள் முதுமைப் பருவத்தில் தனிமையின் உச்சபட்சக் கொடுமைக்கு ஆளாகலாம்.
பெற்ற பிள்ளைகளே பெரியவர்களைப் பாரமாக நினைக்கும்போது, திருமணமாகாமல், சொந்தங்களிடம் போய் இருக்கவும் முடியாமல் தனிமையில் பெரியவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.
காரணங்கள் பலவிதம்
எடுத்தவுடனேயே யாரும் திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிடுவதில்லை. பெரும்பாலான நேரங்களில் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும்தான் அந்த முடிவை நோக்கி அவர்களைத் தள்ளுகின்றன. சிலருக்கு வருமானம், சிலருக்குக் குடும்ப சூழ்நிலை, சிலருக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள், சிலருக்கு அவர்கள் நினைப்பது போல் வரன் அமையாமல் போவது, திருமணத் தடை, உடல் ஊனம் எனப் பல காரணங்களால் திருமண உறவிலிருந்து தள்ளியிருக்கிறார்கள் பலர். ஆனால், அப்படி ஒரு முடிவை எடுக்கும் முன்னர், அந்த முடிவால் பிற்காலத்தில் சிரமங்கள் வருமா என்பதையும் யோசிக்க வேண்டும்.
திருமண உணர்வு உறவு
திருமண உறவு என்பது தாம்பத்திய உறவுக்கு மட்டுமல்ல... வாழ்நாள் முழுவதும் நமது துக்கத்தை, சந்தோஷத்தை, கஷ்டத்தைப் பகிர்ந்துகொள்ள ஒரு ஆத்மார்த்தமான துணையை வழங்கும் பரிபூரண உறவு. திருமண வயதைக் கடந்தவர்கள், ஒருகட்டத்தில் சமூகத்தின் கேலிக்கு அஞ்சி திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்த்துவிடுவார்கள். அப்படியெல்லாம் ஒரு முடிவை எடுக்க வேண்டியதில்லை. மனங்களின் இணைவுதான் மணம். இதற்கு உதாரணமாக வாழும் ஒரு தம்பதியைப் பற்றிச் சொல்கிறேன்.
தென்காசி அருகே ஆய்க்குடி என்ற ஊரில் வசிப்பவர் ராமகிருஷ்ணன். முன்னாள் தடகள வீரர் அவர். உயரம் தாண்டும் விளையாட்டுப் போட்டியின்போது ஏற்பட்ட விபத்து அவரதுவாழ்க்கையை மாற்றிப்போட்டுவிட்டது. தலைக்குக் கீழ் எந்த உடல் பாகத்தையும் தானாக அசைக்க முடியாத அளவுக்கு அவரது உடலில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. அப்படியான நிலையிலும் சமூகசேவைகளைச் செய்துவருகிறார். தன்னைப் போல்உடல் பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கு உதவ, ‘அமர்சேவா சங்கம்’ எனும் அமைப்பை நடத்திவருகிறார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி, ஆதரவில்லாத பிள்ளைகளுக்குக் கல்வி எனப் பல சேவைகளை வழங்கிவருகிறார். இந்திரா காந்தியே இவரை நேரில் சந்தித்துப் பாராட்டியிருக்கிறார்.
45 வயதைக் கடந்தும் திருமணம் செய்துகொள்
ளாமலேயே வாழ்ந்துவந்த ராமகிருஷ்ணன், மண வாழ்வில் நுழைய வேண்டும் என்று அவரது நலம் விரும்பிகள் வலியுறுத்தினார்கள். ஆனால், அவரைத் திருமணம் செய்துகொண்டு அவரை ஒரு தாயாக, மனைவியாக, செவிலியாகப் பார்த்துக்கொள்ள ஒரு பெண் வேண்டுமே? அதுதான் சிக்கலாக இருந்தது. அதை மனமுவந்து செய்ய ஒரு பெண் முன்வந்தார். 20 வருடங்களுக்கு முன்னர் இந்தத் திருமணம் இனிதே நடந்தேறியது. அந்தப் பெண் அவருக்கு இன்று வரை நல்லதோழியாகவும் இருக்கிறார். எனவே வயது, உடல் தகுதி, சம்பளம் என எதுவுமே திருமணத்திற்கு தடை இல்லை, மனதைத் தவிர.
இளமையில் திருமணம் என்பது சிலருக்குப் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ‘சம்பாதிக்கும் பணம் முழுவதையும் நினைத்தபடி செலவு செய்யலாம், குடும்ப உறவின் அழுத்தமே இருக்காது, நிம்மதியாக இருக்கலாம்’ என்று நினைத்துப் பலர் திருமணத்தைத் தவிர்க்கிறார்கள். அப்படியானவர்களில் பலர் தங்கள் முதுமைக் காலத்தில் கையில் உள்ள பணத்தை யாருக்
காவது கொடுத்து நிம்மதியை, உணவை, ஆறுதலைத் தேட முயல்வார்கள். ஆனால், அந்தப் பணமும் இல்லாதவர்கள் நிலைமை இன்னும் மோசம். கேள்வி கேட்பதற்குக்கூட ஆளில்லாமல் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவர்களது வாழ்வே நரகமாகிவிடுகிறது. திருமணமாகாமல் வயோதிகத்துக்குள் நுழையும்போது பல சவால்கள் காத்திருக்கும்.
அதற்கு உதாரணமாக ஒரு பெரிய குடும்பத்தைப் பற்றிச் சொல்கிறேன். அந்தத் தம்பதிக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள். தந்தை ஒரு வங்கியில் கணக்கராகப் பணிபுரிந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு பத்திரிகையில் கணக்கராகச் சேர்ந்து அங்கும் பணி ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்ற இரண்டே மாதத்தில் இறந்தும் போனார். குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகம் என்பதால், எல்லா விஷயங்களிலும் எப்போதும் ஒரு வாக்குவாதம் இருக்கும். திருமணமாகிச் சென்ற சகோதரிகள் படும் சிரமங்களைப் பார்த்த சகோதரர்கள் திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டனர். இன்றைக்கு எல்லோரும் 50, 60 வயதைத் தாண்டிவிட்டார்கள்.
இவர்களில் ஒரு சகோதரரைத் தவிர மற்றவர்கள் நல்ல வேலை யில் இருந்தவர்கள். இருப்பவர்கள். ஆனால், வருமானம் இல்லாத 65 வயது கடந்த அந்தச் சகோதரரை வைத்துப் பராமரிக்க யாரும் விரும்பவில்லை. தனது கடைசிக் காலத்தில் யார் தன்னைப் பார்த்துக்கொள்வார் என்று தெரியாமல் தவிக்கிறார் அந்த மனிதர். இப்படித் திருமணமாகாத பெரியவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை வலிகளுடன் கடக்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்தால், திருமணத்தைத் தள்ளிப்போட விரும்புபவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வார்கள்.
என்ன செய்யலாம்?
எல்லாவற்றையும் தாண்டி, திருமணம் செய்யப் போவதில்லை என்று ஒருவர் உறுதியாக முடிவெடுத்தால், தனக்குப் பிற்காலத்தில் தேவைப்படும் விஷயங்களைக் கண்டிப்பாகச் சேர்த்துவைக்க வேண்டும். வேறு வழியில்லை. உறவுகள் கைவிடும் தருணத்தில் ஒரு வாய் சோறு கிடைக்க அதுதான் உத்தரவாதம் தரும். பணமே வாழ்க்கை அல்ல, ஆனால், பணமும் வாழ்க்கைக்கு அவசியம்.
திருமணம், உறவுகள் தரும் இன்ப துன்பத்தை யாரும் தர முடியாதுதான். ஆனால், ஏதோ ஒரு வகையில் தனிமையில் வாழ நேர்ந்தவர்கள் என்னதான் செய்ய முடியும்? இன்று பெரியவர்களுக்கு என எத்தனையோ முதியோர் வசிப்பிடங்கள் வந்துவிட்டன. அந்த வசிப்பிடங்களில் சேர்ந்து யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.
அவரவர் வாழ்க்கையில் பிரத்யேகமான பிரச்சினைகள் இருக்கும். ஆனால், எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகள் இல்லாமல் போகாது. அந்த நம்பிக்கையில் வாழ்க்கையை இனிமையாகக் கழிப்போம்!
(காற்று வீசும்…)