“அடிச்சிடு ரகு. அது ஒண்ணுதான் பாக்கி” என்று விலகிச் சென்ற அஞ்சலியை எரிச்சலுடன் பார்த்தான் ரகு.
“ஏய்! நில்லு! நான் உன்னை லவ் பண்ணப்ப துபாய்ல பத்து எண்ணெய் கிணறு இருக்குன்னு பொய் சொல்லிருக்கனா? என் ஃபைனான்ஷியல் ஸ்டேட்டஸ் உனக்கு நல்லாத் தெரியும். சும்மா அதையே சொல்லி குத்திக் காட்றியே...”
போன வேகத்தில் திரும்பி வந்தாள் அஞ்சலி. அவன் எதிரில் அமர்ந்தாள்.
“இன்னிக்குத் தெளிவாப் பேசி ஒரு முடிவு எடுத்துடலாம். தாம்பரத்துல உன் அப்பா வாங்கிப்போட்ட அந்த ரெண்டு கிரவுண்ட் நிலத்தை என்னதான் பண்றதா உத்தேசம்?”
“அந்தப் பேச்சு இப்ப வேணாம் அஞ்சலி.”
“என்னதான் பிளான் உன் மனசுல வெச்சிருக்கே? ஒவ்வொரு தடவை ஒவ்வொரு விதமா சொல்றே. இன்னிக்குத் தெளிவா சொல்லு.”
“அங்க வீடு கட்டிக்கிறது புத்திசாலித்தனம் இல்லன்னு பல தடவை சொல்லிட்டேன் அஞ்சலி. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? ரெண்டு பேருக்கும் சிட்டிக்குள்ள வேலை. தினம் வந்து போறதுலயே பாதி வாழ்க்கை போயிடும்.”
“அப்ப என்னிக்கு இருந்தாலும் அது விக்கிற ப்ராப்பர்ட்டின்னுதான் மனசுல வெச்சிருக்கே. ரைட்டா?”
“ஆமாம்.”
“அப்ப வித்துத் தொலைய வேண்டியதுதான? அந்தப் பணத்துல சிட்டிக்குள்ள டபுள் பெட் ரூம் ஃபிளாட் வாங்க முடியாதா என்ன?”
“எனக்கு ஃபிளாட்ல இன்ட்ரெஸ்ட் இல்ல அஞ்சலி. அரை கிரவுண்ட்லயாவது நிலம் வாங்கி தனியா மாடி போட்டு நம்ம இஷ்டத்துக்கு டிசைன் பண்ணி வீடு கட்டிக்கணும்.”
“அப்படி தனி வீடு இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா கனவுலயே பேசிட்டிருந்தா எப்படி? அந்த நிலத்தை வித்து மொதல்ல இங்க அந்த அரை கிரவுண்ட் நிலத்த வாங்கக் கூடாதா? தனி வீடு, தனி வீடுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தா அலாவுதீன் பூதம் கொண்டாந்து நம்ம முன்னாடி வெச்சிடுமா என்ன? உன் கனவுக்காக எந்த ஸ்டெப்பும் எடுக்க மாட்டேன்றியே?”
“என்னை என்ன எதுவுமே தெரியாத முட்டாள்னு நினைச்சிட்டிருக்கியா? இப்பதான் தாம்பரத்துல ரியல் எஸ்டேட் விலை ஏற ஆரம்பிச்சிருக்கு. இன்னும் அஞ்சி வருஷத்துல தாம்பரம் ரியல் எஸ்டேட்ல டாப்புல இருக்கும். அப்ப விக்கிறதுதான் புத்திசாலித்தனம்.”
“அங்க விலை ஏறினா சிட்டிக்குள்ளயும் விலை ஏறாதா என்ன? அதை ஏன் யோசிக்க மாட்டேன்றே?”
“இப்ப நாம் டபுள் பெட்ரூம் ஃபிளாட்லதானே இருக்கோம். இப்ப உனக்கு என்ன பிரச்சினை?”
“என்ன இருந்தாலும் வாடகை ஃபிளாட்டுப்பா. ஒரு சின்ன சுதந்திரமும் இல்ல. வருஷா வருஷம் வாடகையை ஏத்திடுது அந்தப் பொம்பள. தொட்டிச் செடி வைக்காத, நான் வெஜ் சமைக்காதன்னு நூத்தியெட்டு கண்டிஷன்ஸ்!”
“நீ என்ன சொன்னாலும் சரி... அந்த லேண்டை நான் இப்ப விக்கிறதா இல்லை.”
“ரெண்டு கிரவுண்ட் இருக்குதே... அதுல ஒரு கிரவுண்டை மட்டுமாவது பிரிச்சி விக்கலாம்ல? இல்ல அப்படியே உன் கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனிலயே ஜாயின்ட் வென்ச்சர் போடலாம்ல?”
“அந்த லைன்லயே இருக்கேன். எனக்குத் தெரியாத யோசனையை நீ சொல்றியா? இனிமே இதைப் பத்திப் பேசறதை நிறுத்து. எனக்கு போரடிக்குது” என்று விருட்டென்று எழுந்து படுக்கையறைக்குள் சென்ற ரகு சட்டை, பேன்ட் அணிந்தான்.
பைக் சாவியையும், ஹெல்மெட்டையும் கையிலெடுத்தான்.
“எங்க போறேன்னு சொல்லிட்டுப் போ ரகு!”
“நான் ஒண்ணும் காசிக்கு போகல.”
“ஏன் போறதுன்னா போயேன்.”
“அதான? நீயா கவலைப்படப்போறே?”
செருப்புகளை அணிந்தான் ரகு.
“டின்னர் ரெடி பண்ணிட்டேன். ஹாட் பேக்ல வெச்சிடவா?”
“வேணாம். நான் வெளில சாப்ட்டுக்கறேன்”
“எத்தனை மணிக்கு வருவே?”
“தெரியல.”
“சினிமா போறியா?”
“இல்ல. மதன் வீட்டுக்குத்தான் போறேன். வந்துடுவேன். நான் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல. தொலஞ்சி போயிடமாட்டேன். நான் சாவி வெச்சிருக்கேன். நீ படுத்துத் தூங்கு.”
“லேட்டா வருவேன்ற. டின்னர் வேணாம்ன்றே. அப்போ...ட்ரிங் பண்ணப் போறியா?”
“ஏண்டி இப்படி ஸ்கூல்ல டீச்சர் மாதிரி தொணப்பறே? வர்றேன்னு சொல்றேன்ல... சும்மா நொய்நொய்ன்னு...”
“பதில் சொல்ல முடியாத சிக்கலான கேள்வின்னா அது தொணப்பலாத்தான் தெரியும்.”
“நேரடியா சொல்ல வேணாம்னு நெனைச்சேன். சொல்ல வைக்கிறே. ஆமாம். சரக்கடிக்கத்தான் போறேன். போதுமா?”
“எனக்கும் சரக்கடிக்கிற ஃப்ரெண்ட்ஸ் சில பேர் இருக்காங்க ரகு. நானும் பழகிக்கட்டுமா? பரவால்லையா?”
“அம்மா தாயே... இன்னிக்கு இத்தோட விட்ரும்மா... முடியல!” கதவை டப்பென்று மூடிவிட்டு வெளியேறிய ரகு, லிஃப்டில் இறங்கியபோதே மதனுக்கு போன் செய்தான்.
“மதன்... ஃப்ரீயா இருக்கியா? மனசு சரியில்லடா.”
“பாருக்குக் கூப்புடறியா?”
“ஃப்ரீயா இருந்தா வா. இல்லன்னா கண்ணனைக் கேட்டுப் பாக்கறேன். எனக்குத் தனியா அடிக்கப் பிடிக்காது.”
“என் வைஃப் ஒரு மேரேஜுக்காக செங்கல்பட்டு போயிருக்கா. தனியாதான் இருக்கேன்.”
“அப்படின்னா உன் வீட்லயே வெச்சிக்கலாம்.”
“என்ன வேணுமோ வாங்கிட்டு வந்துடு. வீட்ல நிறைய ஸ்நாக்ஸ் இருக்கு. முட்டை இருக்கு. ஆம்லெட் போட்டுக்கலாம்.”
“ரொம்ப நல்லதாப் போச்சு” என்று உற்சாகமாக பைக்கை ஸ்டார்ட் செய்தான் ரகு.
“சியர்ஸ்” சொல்லி கிளாஸ்களை மோதிக்கொண்டு பருகத் தொடங்கினார்கள்.
வீட்டின் ஹாலை ஒட்டிய பால்கனியில் நாற்காலிகள் போட்டு முகத்தில் மென்மையான குளிர்த் தென்றலை வாங்கியபடி அமர்ந்திருந்தார்கள் ரகுவும், மதனும்.
மதனின் லுங்கியை வாங்கிக் கட்டி செளகரியமாக அமர்ந்திருந்தான் ரகு. மதன் ஒரு டிஷர்ட்டும், ஷார்ட்ஸும் அணிந்திருந்தான். சின்ன டீப்பாய் போட்டுக்கொண்டு அதன் மீது சிப்ஸ், கடலை உருண்டை, முறுக்கு, சோடா என்று பரப்பி வைத்திருந்தார்கள்.
நிலவில்லா கரிய வானத்தில் திப்பித் திப்பியாய் மேகங்கள் தெளித்தது போல சிதறியிருந்தன. முக்கியச் சாலையிலிருந்து விலகிய புறநகர்ப் பகுதியென்பதால் வாகன சத்தங்களின்றி அமைதியாய் இருந்ததில் ஒற்றை நாயின் தொடர் குரைப்பு பிரதானமாக அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டிருந்தது.
மதன் சிகரெட் பற்றவைக்க... ரகுவும் ஒன்றை எடுத்து உதடுகளில் வைத்தான். அவனுக்கும் பற்றவைத்தான் மதன்.
“ஏன் மதன்...உன் வீட்ல இவ்ளோ ஆர்க்யூமென்ட்ஸ் வர்றதில்லையா? எப்படிரா சமாளிக்கிறே?”
“அவ வில்லேஜ்லேர்ந்து வந்தவப்பா. ப்ளஸ் டூக்கு மேல படிக்கல. இயல்புலயே ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கும் அவளுக்கு.”
“அப்போ ஒரு மாதிரி அதட்டி வெச்சிட்டியா?”
“சீச்சீ. அதென்னவோ ஆரம்பத்துலேர்ந்தே எதுக்கும் எந்த எதிர்ப்பும் காட்றதில்ல. அவளுக்குன்னு எந்த விருப்பமும் வெச்சிக்க மாட்டா...என்ன டிசைன்ல, என்ன கலர்ல புடவைன்னு நான்தான் செலக்ட் செய்யணும். என்ன டிபன் செய்யணும்னு என்னைக் கேட்டு கேட்டுதான் செய்வா. டோட்டலா டிப்பெண்ட் பண்ணியே பழகிட்டா.”
“கொஞ்சம்கூட கோபப்பட்டதில்லையா?”
“அவ கோபப்பட்டு நான் பாத்ததில்லப்பா. மாற்றுக் கருத்துன்னு ஒண்ணு இருந்தாதான கோபம் வரும்?”
“வரம் வாங்கிட்டு வந்திருக்கடா நீ. இவ தினம் போட்டுப் படுத்தறாடா. எல்லாத்துக்கும் ஆர்க்யூமென்ட்! சுருக் சுருக்குன்னு குத்திக் காட்றா. முகத்துல அடிச்ச மாதிரி பேசறா. இன்னிக்கு எக்ஸ்ட்ரீம் ஆத்திரத்துல கைய ஓங்கிட்டேன் மதன்.”
“அதெல்லாம் தப்புடா.”
“அடிச்சிடல. ஓங்கிட்டு இறக்கிட்டேன்.”
“எல்லாம் ஒண்ணுதான்.”
“தப்புதான். என்னால கன்ட்ரோல் பண்ண முடியல. என் தன்மானத்தை தினம் நாலு தடவையாவது டச் பண்ணிடறா.”
“லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறவங்க குடும்பத்துல சண்டையே இருக்காதுன்னு நான் நெனைச்சிட்டிருந்தேன்.”
“அப்படிதான் இருந்தோம். இப்ப கம்ப்ளீட்டா மாறிட்டா.”
“நீ மாறிட்டதா அவங்க நெனைக்கலாம்ல?”
“பயமா இருக்குடா. ஒரு பெரிய உண்மைய அவகிட்ட மறைச்சிட்டிருக்கேன். அது உடையறப்ப எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு என்னால யோசிக்கவே முடியல” என்றான் ரகு.
(தொடரும்...)