உற்சாகம் தரும் உள்ளாட்சித் தேர்தல்!


புத்தாண்டு நமக்குத் தரப்போகும் முக்கியமான பரிசு, ஒரு பகுதி உள்ளாட்சி நிர்வாகங்களில் மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் அமரப்போகும் நிகழ்வுதான்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மத்திய, மாநில அரசுகளின் துணையுடன் புதிய திட்டங்களையும், நிதி ஆதாரத்தையும் பெற்று தங்கள் பகுதிகளுக்கு வளம் சேர்க்க முடியும் என்பதுதான் இந்தத் தேர்தலின் தாத்பரியம். அரசமைப்புச் சட்டம் வழங்கும் சட்டபூர்வ அதிகாரங்களைக் கொண்ட உள்ளாட்சிப் பதவிகள் ஜனநாயகத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை. அந்த வகையில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்போம்.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு, டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் முதலில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதற்கட்டத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம்கட்ட வாக்குப் பதிவும் வெற்றிகரமாக நடந்தேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் விரைவில் நடைபெறும் என்று நம்பிக்கை கொள்வோம்.

பிற நாடுகளை ஒப்பிடுகையில் மிகக் குறைந்த நிதி ஆதாரம்தான் இந்தியாவின் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்படுகிறது. எனினும், அதை வைத்துக்கொண்டே பல அற்புதங்களை நமது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நமக்கு வழங்கி வந்திருக்கிறார்கள். சாமானிய மக்கள் அதிகாரத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் வாய்ப்பை உள்ளாட்சித் தேர்தல் வழங்குகிறது. பெண்களின் பங்கும் இதில் மிக முக்கியமானது. இந்தத் தேர்தலில் முதல்முறையாக பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் விஷயம்.

x