கரு.முத்து
muthu.k@kamadenu.in
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவைப் பற்றிய வாட்ஸ்-அப் தகவல்களை நண்பர்களுக்கு அனுப்பினாலே நமக்கெல்லாம் பெருமிதம் வந்துவிடுகிறது. ஆனால், ‘நாசாவுக்கு நல்வரவு’ என்று நாசாவிடமிருந்தே வந்திருக்கும் அழைப்பை மிக இயல்பாக எதிர்கொண்டு வியப்பூட்டுகிறார் 11-ம் வகுப்பு மாணவியான ஜெயலட்சுமி.
எத்தகைய சூழலில் வாழ்ந்தாலும் மனதில் உறுதியிருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்றும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த ஜெயலட்சுமி, ஆன்லைனில் நடைபெற்ற தேர்வில் சிறப்பாகப் பரிமளித்து இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார்.
வாழ்த்துகளைச் சுமந்துகொண்டு ஆதனக்கோட்டையில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு தற்போது முற்றிலும் சிதிலமடைந்திருக்கும் ஓட்டு வீடு அது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது. எரிவாயு, மின்விசிறி, தொலைக்காட்சி என்று எந்த அடிப்படை வசதியும் இல்லை. கொஞ்சம் சமையல் பாத்திரங்கள். வாசலில் விறகு அடுப்பு - இதுதான் இவரது வீடு. சற்று மனநலம் சரியில்லாத தாய் அழகுவள்ளி, எட்டாம் வகுப்பு படிக்கும் தம்பி கோவிந்தராஜ் – இதுதான் இவரது குடும்பம்.