கோயில் கோபுரங்களைப் பார்ப்பவர்களின் கண்களுக்கு எப்போதும் அதன் உச்சியில் உள்ள கலசங்கள்தான் முதலில் தெரியும். அந்த உயர்ந்த கோபுரம் உருவாகக் காரணமான, அதைத் தாங்கி நிற்கும் அஸ்திவாரம் பெரும்பாலும் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. அந்த அஸ்திவாரத்தைப் போலத்தான் சில மனிதர்களும். சமூகத்தின் மேம்பாட்டுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த பல மனிதர்களை சரித்திரம் சரியாக கண்டறிந்து கொண்டாடுவதில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சாவித்திரி பாய் புலே. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.
பெண்கள் படிப்பதற்கே தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், பல்வேறு தடைகளைக் கடந்து பெண்களுக்காக, அதிலும் கண
வனை இழந்த பெண்களுக்காக பள்ளிக்கூடம் நடத்தியவர் சாவித்திரிபாய் புலே.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நைகான் எனும் ஊரில், 1831-ம் ஆண்டு பிறந்தவர் சாவித்திரி பாய் புலே. கல்வி கற்கக்கூடிய வாய்ப்பு இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவரான இவருக்கு, ஒன்பதாவது வயதில் ஜோதிராவ் புலே என்பவருடன் திருமணம் நடந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான ஜோதிராவ் புலே, இளம் வயதில் கல்வி கற்க மேல்திசாதியினர் பல்வேறு தடைகளை விதித்தனர். ஆனாலும், ஸ்காட்டிஷ் மிஷினரி பள்ளியில் சேர்ந்து படிப்பை முடித்தார் ஜோதிராவ்.
முற்போக்கு சிந்தனையாளரான ஜோதிராவ் புலே, தன்னைப் போலவே தன் மனைவியும் கல்வியில் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக சாவித்திரி பாய்க்கு 4 ஆண்டுகள் வீட்டிலேயே கல்வி அளித்தார். பின்னர் அவரை அமெரிக்கன் மிஷனரியில் மேற்படிப்பு படிக்க வைத்தார். அத்துடன் ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்பி வைத்தார். சாவித்திரி பாய் நன்கு கற்றுத் தேர்ந்ததும் அவருடன் இணைந்து, ஒடுக்கப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக 1847-ம் ஆண்டில் புனேவில் ஒரு பள்ளியைத் திறந்தார் ஜோதிராவ் புலே. இந்தப் பள்ளியில் தான் முதல் முறையாக பாடம் நடத்தினார் சாவித்திரி பாய் புலே. இதன்மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
கணவனை இழந்த பெண்கள் வீட்டுக்கு வெளியில் செல்வதையே பாவம் என்று நினைத்த காலகட்டம் அது. அத்தகைய காலகட்டத்தில் கணவனை இழந்த பெண்கள் படிக்கச் சென்றால் ஒப்புக்கொள்வர்களா என்ன?
கணவனை இழந்த பெண்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் கல்வி கற்பதை ஏற்றுக் கொள்ளாத ஆதிக்க சமூகத்தினரின் கோபம், அவர்களுக்குப் பாடம் நடத்தத் துணிந்த சாவித்திரி பாய் மீது திரும்பியது. தினமும் பள்ளிக்குப் பாடம் நடத்தச் செல்லும் சாவித்திரி பாய் மீது சாணியையும், சேற்றையும் எடுத்து வீசினர். இதையெல்லாம் பார்த்து சாவித்திரி பாய் பயந்துவிடுவார் என அவர்கள் நினைத்தனர். ஆனால் சாவித்திரி பாய் இதற்காகக் கலங்கவில்லை.
தனது கணவரின் அறிவுரைப்படி தினமும் ஒரு சேலையை பையில் வைத்துக்கொண்டு, பழைய சேலையை உடுத்திக்கொண்டு பள்ளிக்குச் சென்றார். மற்றவர்களால் எறியப்படும் சாணி, சேறு உள்ளிட்டவற்றால் அழுக்கான சேலையை பள்ளிக்குச் சென்றதும் மாற்றி பையில்இருக்கும் சேலையை அணிந்துகொண்டு பாடம் நடத்தினார். ஆரம்பத்தில், ஒடுக்கப்பட்ட மற்றும் கணவரை இழந்த பெண்களுக்காக ஒரு பள்ளியை நடத்தியவர், பின்னர் தினந்தோறும் பல்வேறு இடங்களுக்குச் சென்று கல்வி கற்பிக்கத் தொடங்கினார்.
சாவித்திரி பாயின் இந்த உறுதி, அவரை எதிர்த்தவர் களை நிலைகுலைய வைத்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் சாவித்திரி பாயின் செயல்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கல்விப் பணிகளுடன் தனது சேவைகளை நிறுத்திக் கொள்ளாத சாவித்திரி பாய் புலே, சமூக சீர்திருத்தப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். தீண்டாமை கொடுமை காரணமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில், தங்கள் வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தாழ்த்தப்பட்ட மக்களை புலே தம்பதியினர் அனுமதித்தனர். அத்துடன் விதவைகளுக்கு திருமணம் செய்துவைப்பதிலும் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் கலாச்சாரம் மற்றும் பெண் குழந்தைகளை பச்சிளம் வயதில் கொல்லும் வழக்கம் ஆகியவற்றுக்கு எதிராகவும் கணவருடன் இணைந்து சாவித்திரி பாய் புலே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்.
இளம் விதவைகள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடுப்பதற்காகப் போராடிய சாவித்திரி பாய், அவர்கள் தங்குவதற்
காக ‘பால்ஹத்யா பிரதி பந்தக் கிரஹா’ (Balhatya Pratibandhak Griha) என்ற இல்லத்தையும் கட்டினார். 1852-ல், ‘மஹிளா சேவா மண்டல்’ என்ற பெண்கள் சேவை மையத்தை தொடங்கிய சாவித்திரி பாய், பெண்களிடையே சமூக விழிப்புணர்வு ஏற்பட பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
1897-ம் ஆண்டில் இந்தியாவில் பிளேக் நோய் பரவ,அதில் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிவைத்து, மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில்ஆங்கிலேய அரசு ஈடுபட்டது. அந்தச் சமயத்தில் சாவித்திரிபாயும், மருத்துவரான அவரது வளர்ப்பு மகன் யஷ்வந்தும்சேர்ந்து பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக புனே புறநகர் பகுதியில் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். தங்களையும் இந்நோய் தொற்றிக்கொள்ளுமோ என்ற கவலையின்றி நோயுற்றவர்களுக்குச் சேவை செய்தனர்.
இந்தச் சமயத்தில் பாண்டுரங்க பாபாஜி கெய்க்வாட் என்பவரின் மகன் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவர, அவரைத் தனது தோளில் சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தார் சாவித்திரி பாய் புலே. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பாண்டுரங்க பாபாஜியின் மகன் காப்பாற்றப் பட்டார். ஆனால், அவரைத் தோளில் சுமந்துவந்த சமயத்தில் சாவித்திரி பாய் புலேவுக்கும் பிளேக் நோய் பரவ, அடுத்த சில நாட்களிலேயே அவர் காலமானார்.
இந்திய நாட்டுக்கு சாவித்திரி பாய் புலே செய்துள்ள சேவைகளைப் போற்றும் வகையில் புனே பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டில் மத்திய அரசு சாவித்திரி பாய் புலேயின் நினைவாக தபால் தலையையும் வெளியிட்டது.
வாழ்க்கைப் பாதை
1831-ல், புனேயிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலுள்ள நிகான் என்ற கிராமத்தில் சாவித்திரி பாய் புலே பிறந்தார். தனது கணவருடன் இணைந்து 1847-ம்ஆண்டிலிருந்து அவர் கல்விப் பணிகளில் ஈடுபட்டார்.
சாவித்திரி பாயின் அனைத்து முயற்சிகளுக்கும் துணைநின்ற அவரது கணவர் 1890-ல் காலமானார். அப்போது ஊர்மக்களின் எதிர்ப்பையும் மீறி கணவரின் இறுதிச் சடங்குகளை சாவித்திரி பாயே செய்தார். ஆசிரியராக மட்டுமின்றி மிகச்சிறந்த கவிஞராகவும் விளங்கிய சாவித்திரி பாய் புலே 1897 மார்ச் 10-ம் தேதி காலமானார். ஜனவரி 3-ம் தேதி சாவித்திரி பாய் புலேயின் பிறந்த நாள்.