வனமே உன்னை வணங்குகிறேன்..! 7 - பிரமிக்கவைக்கும் தேஹிங் – பட்காய்


விதவிதமான வனங்களைச் சுற்றிக்கொண்டிருக்கும் நாம், இந்த வாரப் பயணத்தை ஒரு புள்ளிவிவரத்தோடு தொடங்குவோம். 2017-ல், எடுக்கப்பட்ட கணக்கின்படி நம் தேசத்தின் ஒட்டுமொத்த பரப்பளவில் சுமார் 21.54% வனப்பகுதியாக இருக்கிறது. ஆனால், இது ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. அதனால்தான் வனத்தை வணங்குவோம்; பாதுகாப்போம் என்று வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம்.

இந்த வாரம் நாம் பார்க்கவிருப்பது, வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள தேஹிங் - பட்காய் (Dehing-Patkai) அடர்வனம். இது பசுமைமாறா மழைக்காடுகள் (EverGreen Rain Forest) வகையைச் சேர்ந்தது. இந்த வனத்துக்குள் சூரியக் கதிர்கள் உட்புகுவது அரிது என்பதால் இது ‘கிழக்கின் அமேஸான்’ என்று அழைக்கப்படுகிறது.

தேஹிங் - பட்காய் வனவிலங்கு சரணாலயம் அசாமின் திப்ரூகர் மற்றும் தின்சுகியா மாவட்டங்களில் அமைந்துள்ளது. திப்ரூகர் விமான நிலையத்திலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இந்தச் சரணாலயம் உள்ளது.

சூழல் சுற்றுலா மையமானது எப்படி?

தேஹிங் - பட்காய் வனப் பகுதி 46 வகையான பாலூட்டிகள், 283 வகையான பறவைகள், 276 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 70 வகையான மீன்கள், 71 வகையான ஊர்வன, 70 வகையான தட்டான் பூச்சிகள் எனப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உகந்த இடமாகத் திகழ்கிறது. இதனால்தான் வன உயிர்ப் பாதுகாவலராக இருந்த ரஞ்சன் குமார் தாஸ், 2004-ல், தேஹிங் - பட்காயைச் சூழல் சுற்றுலா மையமாக மேம்படுத்த முயற்சிசெய்து வெற்றிகண்டார்.

இந்த வனத்தைச் சுற்றி, திக்போய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் பெருகிவந்ததால் வனத்தை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்காகத்தான் இந்த வனப்பகுதி வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. வனத்துக்கு அருகிலிருக்கும் ஃபாகியல் பழங்குடி இன மக்கள் இந்தச் சூழல் சுற்றுலாவால் ஆதாயம் பெறுகின்றனர்.

சர்வதேச கவனம்

2010-ல், வனவிலங்குப் புகைப்படக் கலைஞர் ஒருவர் இந்த அடர்வனத்தினுள் சென்று, புலி, சிறுத்தை, கிளவுடட் சிறுத்தை, லெப்பர்ட் கேட், கோல்டன் கேட், காட்டுப் பூனை, மார்பிள்ட் கேட் என 7 வகையான பூனை இனங்கள் அங்கிருப்பதைப் புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தினார். இது உலகம் முழுவதும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்களுக்குப் பேரானந்தச் செய்தியாக அமைந்தது. அதன் பின்னர் இந்த வனம் சர்வதேச கவனம் பெற்றது.

பூனை இனத்தைப் போலவே குரங்கினத்துக்கும் பெயர் போனது இந்த வனப்பகுதி. அருகிவரும் ரீசஸ் மக்காக், அசாமீஸ் மக்காக், ஸ்லோ லோரிஸ், கேப்ட் லங்கூர் போன்ற குரங்கினங்கள் இங்கு இருக்கின்றன. இவற்றில் அஸாமீஸ் மக்காக் மிக வேகமாக அழிந்துவரும் இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதவிர, இப்பகுதி யானைகளின் சரணாலயமாகவும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சைனீஸ் பாங்கோலின், காட்டுப் பன்றி, சாம்பார் மான், குரைக்கும் மான் எனப்படும் பார்க்கிங் டீர், ராட்சத அணில்கள், முள்ளம்பன்றி போன்ற விலங்குகளையும் இங்கே காண முடியும்.

ஸ்டோர்க், ஒயிட் விங்க்ட் உட் டக், ஒயிட் பேக்ட் வல்ச்சர், ஸ்லெண்டர் பில்ட் வல்ச்சர், க்ரே பீகாக், ரீத்ட் ஹார்ன்பில், கிரேட் பைட் ஹார்ன்பில்ட் உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் இங்கே இருக்கின்றன.

வனத்துக்குள் தொலைந்துபோனோம்...

மதுரையைச் சேர்ந்த விஜய் ஆதர்ஷ், தேஹிங் - பட்காய் சென்றுவந்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
"நான் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரி நாட்களிலேயே எனக்கு புகைப்படம் ஆர்வம் உண்டு. அப்படி ஒரு நாள் என் கேமராவுக்குள் பதிவான பறவை நான் அதுவரை பார்த்திராத பறவையாக இருந்தது. அது என்னவென்று தேடிப் படித்து அறிந்தேன். பின்னர், என் ஊரிலேயே விதவிதமான பறவைகளைத் தேடி புகைப்படம் எடுத்தேன். தொழிலில் வேகமெடுத்த பின்னர் ஓய்வு நாட்களில் வனப் பகுதிகளைத் தேடிப் பயணப்பட்டேன்.

நண்பர் ஒருவர் மூலம் வடகிழக்கு மாநிலங்களின் வனங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். தென்னகக் காடுகள் போல் அல்லாமல் அங்குள்ள காடுகள் இன்னும் மனிதர்களால் சேதப்படுத்தப்படாமல் இருப்பவை என்பதை அறிந்தேன். அக்டோபர் முதல் மார்ச் வரை தேஹிங் வனப் பகுதிக்குச் செல்ல உகந்த காலம் என்று நண்பர் கூறினார். நான், என் தோழர், தோழி ஆகியோர் பயணத்தைத் தொடங்கினோம். தோழியின் எட்டாம் வகுப்பு பயிலும் மகனும் எங்களோடு பயணத்தில் இருந்தார்.

திப்ரூகரில் வசிக்கும் உள்ளூர்வாசி ஒருவரை ஏற்கெனவே ஏற்பாடு செய்துவைத்திருந்தோம். திப்ரூகர் விமான நிலையத்திலிருந்து காரில்தான் சென்றோம். காலை 5 மணிக்கெல்லாம் பளீர் வெளிச்சத்துடன் விடிந்திருந்தது. அங்கு 5 மணிக்கு விடிந்து, மாலை 5 மணிக்கெல்லாம் இருட்டிவிடுமாம். பாதை முழுவதும் இருபுறமும் தேயிலைத் தோட்டங்கள். ஓரிரண்டு இடங்களில் இறங்கி நின்று அந்த எழிலை ரசித்தோம். மூடுபனியைக் கார் முகப்பு விளக்குகளால் கிழித்துக்கொண்டு நிதானமான வேகத்தில் சென்றோம்.
அப்பகுதியில் நக்சல்களின் நடமாட்டம் இருக்குமென்பதால் வழக்கமாக நாங்கள் வனத்துக்குள் செல்லும்போது அணிந்துசெல்லும் ‘கேமோஃப்ளட்ஜ்’ உடை அணிய வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். அதனால் வெளிர் நிற உடை அணிந்து சென்றோம்.
வனத்துக்குள் செல்லச் செல்ல பிரம்மாண்டமாக இருந்தது. அப்படி ஒரு அடர்வனத்தை அதுவரை நான் தரிசித்ததில்லை. மரங்களும், அவற்றில் பின்னிப் பிணைந்திருந்த கொடிகளும், தரையெல்லாம் மண்டியிருந்த செடிகளும், பிரம்மாண்டமான காளான்களும் விழிகளை விரியச் செய்தன. அட்டைப் பூச்சிகள் அதிகம் என்பதால் ‘லீச் சாக்ஸ்’ அணிந்திருந்தோம்.

என் கண்கள் பறவைகளை மட்டுமே தேடிக்கொண்டிருந்தன. அரிய வகை பறவை ஒன்றைப் பார்த்துவிட்ட பரவசத்தில் கேமராவோடு அதை நோக்கிச் சென்றோம். எப்போதுமே வனத்திற்குள் செல்லும்போது குறியீடு வரைந்துவைப்பது வழக்கம். ஆனால், அன்று ஏனோ அதை மறந்துபோனோம். சற்று தூரம் கடந்த பிறகுதான் வந்த வழியை மறந்துவிட்டோம் என்று தெரிந்தது. ஒரு கணம் எல்லோருமே பதறிப்போனோம். உடன் வந்த உள்ளூர்வாசியேகூட குழம்பிப் போனார். 20 நிமிடங்கள் அலைந்து திரிந்தோம். ஒருவழியாகப் பாதை தெரிந்து மீண்டோம். கேப்ட் லங்கூரை விட்டு கண்களைத் திருப்ப மனம் வரவில்லை.

அடர்வனத்துக்குள் ஒரு சாகசப் பயணத்தை விரும்புபவர்களுக்கு தேஹிங் - பட்காய் சரியான தேர்வாக இருக்கும். பல்லுயிர்களையும் ஒரே இடத்தில் பார்க்கும்போதுதான் பூவுலகின் வளம் என்னவென்று புரிந்தது. தொழிற்சாலைகளுக்காக வனம் அழிக்கப்பட்டுவருவதாகவும் பல அரிய உயிரினங்கள் அருகிவருவதாகவும் உள்ளூர் நண்பர் சொன்னார். ஒரு பறவை இனம் அழிந்துபோகிறது என்றால் அதன் வசிப்பிடம் அழிக்கப்பட்டது என்றே அர்த்தம். இன்று பறவையின், விலங்கின் வசிப்பிடம் அழிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும்” என்று சொல்கிறார் விஜய் ஆதர்ஷ்.
தேஹிங் - பட்காய்க்குச் செல்ல முடிவெடுத்தால் முன்னரே வனத் துறையைத் தொடர்புகொண்டு முன் அனுமதி பெறுவது அவசியம். உள்ளூர் வழிகாட்டி ஒருவரையும் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். பயணம் இனிதாக இருக்கும். மற்றுமொரு வனத்திற்குள் அடுத்த வாரம் உலா வருவோம்.

படம் உதவி: மு.விஜய் ஆதர்ஷ்

x