சாப்பிட்டுக்கொண்டிருந்த பஜ்ஜி தட்டை வெடுக்கென்று தள்ளிவைத்து முழங்கால்களைக் கட்டியபடி அடிக்கண்களால் உர்ரென்று பார்த்தான் பரணி.
“இப்ப எதுக்குடா தட்டைத் தள்ளி வெச்சே? என்ன இந்த வயசுல உனக்கு இவ்வளவு கோபம்? மொதல்ல சாப்புடு!”
“எனக்கு ஒண்ணும் வேணாம்.”
“வண்டில வர்றப்ப இன்னிக்கு பஜ்ஜி செஞ்சித் தர்றியான்னு நீதானடா கேட்டே?”
எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகத் தலையைக் கவிழ்த்துக்கொண்ட பரணியின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து நிமிர்த்தினாள் அஞ்சலி.
“பொறுமையா உன்ன மதிச்சி அன்பாப் பேசினா உனக்கு எளக்காரமாப் போச்சாடா? இத்தனை வருஷமா அம்மாவுக்கு அம்மாவா…
அப்பாவுக்கு அப்பாவா ஒண்டியாளா போராடி உன்னை வளர்த்துட்டிருக்கேன். உனக்கு நான் முக்கியமாப் படலையா? சும்மா டாடி டாடின்னுகிட்டு?”
“ஸ்கூல்ல எல்லாருக்கும் டாடி இருக்காங்க… எனக்கு மட்டும்ஏன் இல்ல? என்னைப் பொய்பேசக்கூடாதுன்னு சொல்வே.
எதுக்கு நீ பொய் சொன்னே? அகஸ்டின் அங்கிள் ஆஸ்திரேலியால இருக்கற மாதிரி உன் டாடி அமெரிக்கால வேலை பாக்கறாருன்னு எத்தனைதடவ சொல்லிருக்கே நீ?”
“தப்புதான். என் தப்புதான். உன் அப்பா செத்துப்போய்ட்டார்னு சொல்லிருந்தாபேசாம இருந்திருப்பே.”
“அதுவும் பொய்தான?”
“எங்க உறவுதான் செத்துப்போச்சி. அவர் சாகல. உயிரோட இருக்கற மனுஷனைச் செத்துப்போனதா சொல்ல மனசு வரல.”
“டாடி மேல உனக்குதான கோபம். எனக்கு என்ன கோபம்? நான் ஏன் ஃபாதர்ஸ் டேக்கு கிஃப்ட் அனுப்பக் கூடாதுன்னு சொல்றே?”
சுவற்றில் அடித்த பந்து மாதிரி உடனுக்குடன் பயமே இல்லாமல் சுருக் சுருக்கென்று அவன் கேள்வி கேட்பது அவளுக்கு எரிச்சலைத் தந்தாலும்… அந்தக் கேள்விக்கு அவளிடம் பொருத்தமான பதில் இல்லை.
அவன் கேள்வியில் என்ன தப்பிருக்கிறது? அவனுக்கும் ரகுவுக்கும் என்ன கோபம்? குழந்தையாக இருந்தபோதே பிரிந்திருந்தாலும்... ரகுவின் ஜீன் அவனுக்குள் இருக்கிறதே…
தூக்கி வைத்துக் கொஞ்சியிருக்கிறானே… விளையாடியிருக்கிறானே… உணவு ஊட்டியிருக்கிறானே… குளிப்பாட்டியிருக்கி
றானே… சமயத்தில் டயப்பர்கூட மாற்றியிருக்கிறானே… தடுப்பூசிகளுக்கும், உடல்நிலை பிரச்சினைகளுக்கும் மணிக்கணக்காக என்னோடு மருத்துவமனைகளுக்கு அலைந்திருக்கிறானே? கவலைப்பட்டிருக்கிறானே… கண்ணீர் சிந்தியிருக்கிறானே…
அந்தப் பாசத்தை அந்த வயதில் நேரடியாக உணர முடியாவிட்டாலும் குழந்தையின் ஆழ் மனதில் பதியாமலிருக்குமா?
அவன் அப்பாவின் மீது அவனுக்கு ஏற்படும் பாசத் துடிப்பும் இயற்கையானதுதானே? நியாயமான கேள்விதானே அவன் கேள்வி…
ஆனால் என் பயம் வேறு… அப்பாவின் மீதான புதிய பாசம் அம்மாவின் மீதான பாசத்தைச் சிதைத்துவிடுமோ? என் மீது ஒரு வெறுப்பு வந்துவிடுமோ?
ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டது அஞ்சலிக்கு.
“நான் கேட்ட கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லு. ஒரு வேளை அவரு வந்து கூப்புட்டா என்னை விட்டுட்டு அவரோட போயிடுவியா?”
“இல்ல… உன்னையும் கூட்டிக்கிட்டுதான் போவேன்.”
“புரிஞ்சுக்கோ. என்னால வர முடியாது. இனிமே நாங்க சேர்ந்து வாழ முடியாது. நிரந்தரமா சட்டபூர்வமா பிரிஞ்சிட்டோம். நான் இல்லாம அவரோட போவியா? போக மாட்டியா? அதைச் சொல்லு!”
“தெரியல” என்றான் பரணி பரிதாபமாக.
அவன் சொன்ன அப்பாவித்தனமான அந்த பதில் அவன் மீது ஒரு அனுதாபத்தை எற்படுத்த, அவனை அப்படியே இழுத்து அணைத்துக்கொண்டாள் அஞ்சலி.
“சரி. பஜ்ஜி சாப்புடு” என்று அவளே எடுத்து ஊட்டிவிட, ஆர்வமாகச் சாப்பிட்டான் பரணி.
பரணியைப் பொம்மைக் குதிரை மீது உட்காரவைத்து அதை மெதுவாக ஆட்டியபடி ஸ்பூன் ஸ்பூனாக சாதம் புகட்டிக்கொண்டிருந்தாள் அஞ்சலி.
அலுவலகத்திலிருந்து திரும்பிய ரகு, பரணியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு மேஜை மீது எடுத்து வைத்திருந்த அன்று வந்த கடிதங்களைப் புரட்டினான்.
“நாளைக்கு லீவு சொல்லிட்டியா ரகு?” என்றாள்.
“எதுக்கு?”
“நான் லீவ் போடறேன்ப்பா.”
“எதுக்குன்னு சொல்லாம லீவு லீவுன்னா?”
“காலண்டரைப் பாருப்பா!”
சுவரில் மாட்டிய காலண்டரைத் திரும்பிப் பார்த்து, “ஓ… வெட்டிங் டேயா? மூணு ப்ராஜெக்ட்ஸ் போய்ட்டிருக்கு. எல்லாம் டெலிவரி டைம். கஸ்டமர்ஸ் போன் போட்டுக் கத்தறானுங்க. ஒருத்தன் கோர்ட்டுக்கே போய்ட்டான். லீவெல்லாம் போட முடியாது அஞ்சலி. நான் வந்ததும் டின்னருக்கு வேணா போலாம். நீயும் லீவைக் கேன்சல் பண்ணிடு.”
“வெளாடறியா? வருஷத்துக்கு ஒரு நாள். நம்ம எக்ஸ்க்ளூசிவ் பர்சனல் ஸ்பெஷல் டே. உடம்பு சரியில்லன்னா லீவு போடமாட்டியா? அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாளைக்கு நீ லீவு போடறே! ஏகப்பட்ட ப்ரோக்ராம்ஸ் போட்டு வெச்சிருக்கேன்.”
“இல்ல…தெரியாமதான் கேக்கறேன். ஒரு நாளாவது நீ சண்டை போடாம இருக்கியா? அதென்ன ஒரு நாள் மட்டும் கொஞ்சிட்டு மறுநாள் மறுபடியும் சண்டை போடறது? என்ன பெரிய ஸ்பெஷல் டே? ஜஸ்ட் ஒன் மோர் டே!” என்றவன் அறைக்குள் போனான்.
முகம் சிவந்த அஞ்சலி, “இங்க வந்து நின்னு பேசு ரகு. எனக்கு இப்பத் தெரிஞ்சாகணும். என்னை எப்படி நீ பிராண்ட் பண்ணலாம்? நான் மட்டும்தான் சண்டை போடறனா? நீ சண்டை போடறதில்லையா?” என்றாள் குரலை உயர்த்தி.
லுங்கிக்கு மாறியிருந்த ரகு கழற்றிய சட்டையை ஹேங்கரில் மாட்டிவிட்டு, டிசர்ட்டைக் கழுத்து வழியாக அணிந்தபடி ஹாலுக்கு வந்தான்.
டிவியின் ரிமோட்டை எடுத்து நியூஸ் சேனல் போட்டான்.
குழந்தையைப் படுக்கையில் போட்டுவிட்டு, சமையலைறைக்குச் சென்று கிண்ணத்தை வைத்துவிட்டு வந்த அஞ்சலி ரிமோட் எடுத்து டிவியை அணைத்தாள்.
“ஏய்… நியூஸ் பாக்கறேன்ல?”
“மொதல்ல பொண்டாட்டியப் புரிஞ்சிக்கோ. அப்பறம் நாட்டப் புரிஞ்சிக்கலாம். என்னை லவ் பண்றப்ப உனக்கு
நான் சண்டைக்காரியா தெரியலை... இப்பதான் தெரியுதா?”
“அப்ப உனக்கிருந்த கோபம் இப்ப பல மடங்காயிடுச்சி.”
“அப்ப மட்டும் ஏன் ரசிச்சே? கோபம்தான் உன் ஸ்பெஷாலிட்டின்னு ஏன் என்கரேஜ் செஞ்சே?”
“அது லவ் பண்றப்ப எல்லாரும் செய்ற முட்டாள்தனம்தான? காதல் கண்ணு முன்னாடி வந்து கோபத்தை மறைச்சிடும்.”
“அப்டின்னா… இப்ப உனக்கு என் மேல லவ் போயிடுச்சி. அப்படித்தான?”
“இதாண்டி உன்னோட பிரச்சனை. ஏதாச்சும் ஒரு வார்த்தைய கெட்டியாப் பிடிச்சிக்கிறே… லவ் வேற… பாசம் வேற. பொண்டாட்டியானதும் வர்றது பாசம். அது லவ் இல்ல. ஆனா அதுக்கும் மேல. அந்தப் பாசத்துக்குள்ள லவ்வும் இருக்கும். அம்மா மேல அப்பா மேல இருக்கற அன்பைச் சொல்ற வார்த்தைடி பாசம். அதைச் சொல்றேன். ஆனா அது உனக்குப் புரியாது.”
“பாசம் வெச்சிருக்கற உன் அம்மா, அப்பா மேல வெறுப்பைக் காட்டுவியா? எங்கிட்ட காட்றியே?”
“வேற எங்க காட்றது? ஆபீஸ்ல பல பேருக்கு முன்னாடி நாகரிகமா இங்கிலீஷ்ல மட்டம் தட்ற மேனேஜர்ட்ட அதைக் காட்ட முடியுமா? நாம் சரியா வந்தாலும், தப்பா வந்துட்டு கெட்ட வார்த்தை சொல்லி திட்டிட்டுப் போற ஆட்டோக்காரன்ட்ட காட்ட முடியுமா? ஒருத்தன் வீட்டுக்கு அனுப்பிடுவான். ஒருத்தன் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடுவான்.”
“நான்தான் இளிச்சவாயி! இல்ல?”
“ஆமாம்… இந்த இளிச்சவாயிக்குப் பத்துப் பேருக்கு இருக்க வேண்டிய எல்லா ஆசையும் ஒட்டுமொத்தமா இருக்கும்னு எனக்குத் தெரியாமப் போச்சி.”
“என்ன அப்படி ஆசைப்பட்டுட்டேன்? நிலாவுக்குப் போகணும்னு சொன்னனா? வர்ல்ட் டூர் போகணும்னு சொன்னனா? சொந்த வீடும், காரும் இன்னிக்கு எல்லாரும் ஆசைப்படற சராசரி ஆசைதான் ரகு. உன் ஆபீஸ்ல வேல பார்க்கற ஒரு கிளார்க்கே சொந்த வீட்ல இருக்கான். ரெண்டு கார் வாங்கி உபர்ல டை அப் பண்ணிருக்கான். உனக்கு மட்டும்தான் அது ஒரு ஹிமாலயன் டாஸ்க்கா தெரியுது.”
“ஏய்… அவன் ட்யூ கட்டிட்டிருக்கான். ஒரு மாசம் கட்டலைன்னா சேட்டு ஆளுங்க வந்து காரைத் தூக்கிட்டுப் போயிடுவாங்க. ஊரு பூரா கடன் வாங்கிட்டு வட்டி கட்ட முடியாம அவன் முழி பிதுங்கறது எனக்குத்தான் தெரியும்.”
“நல்ல உதாரணம் என்னால நூறு காட்ட முடியும். நீ ரெண்டு சொத்தை உதாரணத்தைக் காட்டிட்டு கடன் வாங்கறது எனக்குப் பிடிக்காதும்பே. இயலாமைன்னு சொல்லாம அதை என் பாலிசின்னு சொல்லி சமாளிப்பே.”
“என்னடி சொன்னே?” என்று உச்சமான கோபத்துடன் எழுந்த ரகு அவளை நோக்கி கையை ஓங்கினான். ஆனால் அடிக்காமல் சட்டென்று இறக்கிக்கொண்டான்.
“அடிச்சிடு ரகு. அது ஒண்ணுதான் பாக்கி” என்று விலகிச் சென்ற அஞ்சலியை எரிச்சலுடன் பார்த்தான் ரகு.
(தொடரும்...)