என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
‘சூல்’ நாவலுக்காக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன் வரிசையில் கரிசல் மண்ணிலிருந்து சாகித்ய அகாடமியை அலங்கரிக்கும் ஐந்தாவது படைப்பாளி சோ.தர்மன். ‘காமதேனு’வுக்காகக் கோவில்பட்டி இல்லத்தில் அவரைச் சந்தித்தேன்.
படைப்புலகில் கரிசல் பூமி விருதுகளைக் குவிக்கும் மண்ணாக இருக்கிறதே, என்ன விசேஷம்?
கரிசல் நிலம் மழையை மட்டுமே நம்பியிருக்கிறது. மழை இல்லை என்றால் அவர்களுக்கு வாழ்க்கையே இல்லை. இது கலாச்
சாரம், பண்பாடு அனைத்திலும் தனித்துவமானது. இங்கே பயணிக்கும் இடங்களில் எல்லாம் கிராமத்து மக்களிடமிருந்து கிடைக்கக்கூடிய அற்புதமான சில விஷயங்களைப் புதையலாகத் தோண்டி எடுத்துப் பதிவுசெய்கிறோம். இந்தப் பொக்கிஷங்களையெல்லாம் காட்டிக்கொடுத்த முன்னோடி கி.ரா தான். நாகர்கோவிலில் சுந்தரராமசாமி, நெல்லையில் தி.க.சி வரிசையில் கோவில்பட்டியில் எங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் அவர்!