மொழி வளர்ச்சியில் பள்ளிகளின் பங்கு என்ன?


உமா
uma2015scert@gmail.com

பள்ளிக் கல்வியின் தேர்வுப் பிரிவில் இந்த வருடம் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய மாற்றங்களில் ஒன்று, மொழிப் பாடங்கள் குறித்த ஆணை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேர்வு முறையில் இருந்த நடைமுறை, இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் மொழிப் பாடங்களுக்கு முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தாள்கள் இருந்துவந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் இரு தாள்களும் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களிலும் இதுதான் நடைமுறை என்ற சூழல் வந்துள்ளது. இந்த வாரம் இதைப் பற்றி அலசுவதுடன், மொழிப் பாடங்கள் குறித்துப் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்திடம் எந்த அளவுக்குப் புரிதல் இருக்கிறது, நடைமுறையில் மொழியின் தேவை என்ன என்பதைப் பற்றியும் பேசலாம்!

பள்ளிகளில் மொழியின் தேவை

மொழி என்பது தகவல் பரிமாற்றத்துக்கான கருவி என்பதைக் கடந்து, மனித இனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. மனிதர்களின் ஆளுமையை வரையறை செய்யும்போது மொழியின் ஆளுமையும் அதில் முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. ஒரு மொழியைப் பேச்சுமொழியாக மட்டுமே வீடுகளில் கற்றுவரும் குழந்தைகளுக்கு, மொழிக்கான மற்ற பரிமாணங்களைத் தர வேண்டிய பொறுப்பு பள்ளிகளுக்குத்தான் உண்டு. கற்றல் தளங்களைப் பொறுத்தவரை, மொழி வளர்ச்சி குறித்துத்தான் அதிக விவாதம் தேவைப்படுகிறது. 12 வருட காலம் பள்ளிக் கல்வியை முடித்து வெளியேறும் குழந்தைகள் மனதில் மொழிக்கான ஈர்ப்பு என்னவாக இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

x