தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தவறு!


ரயில்வே துறையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்த நிலையில், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தந்திருக்கும் தகவல் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் எம்பி-யான மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு பியூஷ் கோயல் தந்திருக்கும் பதிலில், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வே தேர்வு ஆணையங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட 1.31 லட்சம் பேரில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 1,433 பேர்தான்’ என்று சொல்லியிருக்கிறார். ரயில்வே துறையில் வட மாநிலத்தவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த காலம் தொட்டே குரல் கொடுத்துவருகின்றன. அண்மையில், ரயில்வே துறையில் கேங்மேன் மற்றும் சிக்னல் பணியாளர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

எனினும், இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் சார்பில் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு எதிராக இப்படியான பாரபட்சம் காட்டப்படக் கூடாது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டார்கள். இப்பிரச்சினை குறித்து தமிழக எம்பி-க்களும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள்.
ஆனால், இவை அனைத்தும் அன்றாடச் செய்திகளாகக் கடந்துசெல்லும் அளவுக்குக் கவனம் பெறாமல் இருந்துவந்தன. தற்போது ரயில்வே அமைச்சரே இந்தத் தகவலைச் சொல்லியிருக்கும் நிலையில், இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் அவசியம். ஊழியர் நியமனங்களில் மாநில சமநிலை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டு. எனினும், அதைக் கண்காணிக்கவும், அதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் தமிழக அரசும் மனது வைக்க வேண்டும். இனியாவது தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களுக்குத் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

x