‘வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து… நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி…’ எனும் பாடல் வரிகளுக்கேற்ற இனிய அனுபவத்தை, ஒரு முழு நிலவு நாளில் ரான் ஆஃப் கட்ச் நிலப்பரப்பு தனக்கும் தனது கணவர் சுனில் பாட்டீலுக்கும் தந்தது என்று ரசனையுடன் பேசத் தொடங்கினார் சந்தனா ராவ்.
கர்நாடகத்தைச் சேர்ந்த சந்தனா, அழகாகத் தமிழ் பேசுகிறார். 25 வயதுக்குள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவந்திருக்கும் சந்தனாவின் வார்த்தைகளை வசமாகப் பிடித்துக்கொண்டு, ரான் ஆஃப் கட்ச் பாலைவனப் பிரதேசத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
எங்கிருக்கிறது?
இந்தியாவின் மேற்குப் பகுதியில் குஜராத் மாநிலத்தின் புஜ் நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ரான் ஆஃப் கட்ச். ராஜஸ்தான், குஜராத் என இரு மாநிலங்களிலும் பரவியுள்ள தார் பாலைவனத்தில் இருக்கும் இந்தப் பகுதி பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய மாவட்டமான கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தப் பாலைவனம் உலகிலேயே மிகப் பெரிய உப்புப் பாலைவனம். இதன் வழியாக ‘ட்ராஃபிக் ஆஃப் கேன்சர்’ எனப்படும் கடக ரேகை கடந்துசெல்வது இதன் இன்னொரு பெருமை.
‘கட்ச்சைக் காணாவிட்டால் நீங்கள் எதையுமே காணாதவர்களாவீர்கள்’ (கட்ச் நஹி தேக்கா தோ குச் நஹி தேக்கா) - இதைத்தான் குஜராத் மாநில அரசு, கட்ச் சுற்றுலாவைப் பிரபலப்படுத்துவதற்கான வாசகமாகப் பயன்படுத்துகிறது.
வெள்ளைப் பாலைவனம்
ரான் ஆஃப் கட்ச் வெள்ளைப் பாலைவனம் என்றே அறியப்படுகிறது. அதற்குக் காரணம் அங்கிருக்கும் வெள்ளை மணல் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் அது மணல் அல்ல... உப்பு. முழுநிலவு நாளில் அங்கு பரந்து விரிந்து கிடக்கும் உப்புக்கற்களின் மீது ஊடுருவும் நிலவொளி அப்பகுதிக்கு பிரம்மாண்ட அழகைத் தருகிறது. அதனால்தான் அந்தப் பெயர்.
காதலின் ஊடே ஓர் அனுபவப் பகிர்வு
இனி இந்தப் பிரதேசம் பற்றி சந்தனா ராவின் நேரடி வர்ணனைகள்.
“நான் திருமணத்துக்கு முன்னர் தனிச் சுற்றுலாப் பயணி. ஒருமுறை கர்நாடகாவின் ஹம்பிக்குத் தனியாகச் சென்றிருந்தேன். அப்போது நான் சென்ற பேருந்தில் சுனில் பாட்டீல் பயணித்தார். இருவருக்கும் பக்கத்துப் பக்கத்து இருக்கைகள். பயணம் குறித்து நிறைய பேசினோம். தனித்தனியாகச் சென்ற நாங்கள் ஹம்பியை ஒன்றாகச் சுற்றிப் பார்த்தோம். சுற்றுலா, சூழல் மீதான காதல், பிளாஸ்டிக் ஒழிப்பு என நிறைய விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப்போயின. தொடர்ந்து சேர்ந்தே பயணித்தோம். ஒரு பயண நாளில் ஆர்ப்பரிக்கும் அருவியின் அருகே சுனில் தனது காதலைச் சொன்னார். ஆக, எங்களை இணைத்தது சுற்றுலாதான்.
ஒரு நாள் நானும் சுனிலும் பெங்களூருவில் ஓர் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, சுவரில் இருந்த ரான் ஆஃப் கட்ச் புகைப்படம் எங்கள் கவனத்தை ஈர்த்தது. அடுத்த இலக்கு அதுதான் என்று அப்போதே தீர்மானித்துக்கொண்டோம்.
சுற்றுலாவை எளிமையாக அதிக செலவில்லாமல் மேற்கொள்வது எங்கள் பாணி. அப்படித்தான் ரான் ஆஃப் கட்ச் பயணத்தையும் திட்டமிட்டோம். கர்நாடகத்திலிருந்து சூரத் வரை ரயிலில் சென்றோம். சூரத்திலிருந்து புஜ் வரை பேருந்துப் பயணம். பின்னர் வழியில் கிடைக்கும் ட்ரக்குகளில் எல்லாம் கைகாட்டி ஏறிப் பயணித்து கிரேட்டர் ரான் ஆஃப் கட்சை அடைந்தோம். கூடாரம் அமைத்து தங்குவது எனத் திட்டமிட்டிருந்ததால், அதற்கான எல்லாப் பொருட்களையும் எடுத்துச் சென்றோம். உள்ளூர் மக்களின் அனுமதியோடு அவர்கள் வசிப்பிடம் அருகேயே ஒரு கூடாரம் அமைத்தோம்.
முழுநிலவு நாளில் அங்கிருப்பதுபோல் திட்டமிட்டுச் சென்றிருந்தோம். அன்று காலையில் உள்ளூர் உணவு உள்ளூர் மக்களுடன் பேச்சு, உள்ளூர் பொருட்களை வாங்குவது எனப் பொழுது கழிந்தது. அங்கு வாழும் மக்கள் கலாச்சாரப் பாரம்பரியம் நிறைந்தவர்கள். பல்வேறு கைவினைப் பொருட்களையும் பிரத்யேகமாகச் செய்வதில் தேர்ந்தவர்கள்.
இரவு நிலவு வர வர வெள்ளைப் பாலைவனம் சிலிர்ப்பூட்டத் தொடங்கியது. குஜராத் சுற்றுலாத் துறை அனுமதியுடன் தலா 120 ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு வெள்ளைப் பாலைவனத்தில் நடக்கத் தொடங்கினோம். உண்மையில் அது வேறோர் உலகம் என்றே சொல்ல வேண்டும்.
நிறைய பேர் ஒட்டகத்தில் ஏறி சவாரி செய்தனர். ஆனால், நாங்கள் எந்த ஒரு விலங்கின் மீதும் சவாரி செய்வதில்லை என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளோம். அதனால் கரம் கோத்து நீண்ட தூரம் நடந்தோம். நான் சேகரித்துவந்த உப்புக்கற்கள் இன்னும் என் அலமாரியில் கண்ணாடிப் பேழைக்குள் அலங்காரப் பொருட்களாக இருக்கின்றன.
கட்ச் சென்றால் அதன் மலைவாச ஸ்தலமான காலாடூங்கருக்கு (Kaladungor- கருப்பு மலை) செல்லாமல் வந்துவிடாதீர்கள். அங்கு செல்ல சுற்றுலா துறையே ஜீப் ஏற்பாடு செய்துதருகிறது. காலாடூங்கரின் உச்சியிலிருந்து அந்த வெள்ளைப் பாலைவனத்தைப் பார்ப்பது கொள்ளை அழகு” என்கிறார் சந்தனா.
இந்தத் தம்பதியர் இணைந்து www.instagram.com/travelories என்ற பக்கத்தில் தங்களின் பயணக் குறிப்புகளையும் ஆலோசனைகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
பயணத்துக்கு உகந்த சீஸன்
ரான் ஆஃப் கட்சில் அக்டோபர் தொடங்கி ஜனவரி வரை வெளிநாட்டுப் பறவைகள் இனப் பெருக்கத்துக்காகக் குவிகின்றன. குறிப்பாக ஃப்ளமிங்கோஸ் பறவைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. கிரேட் இந்தியன் பஸ்டர்ட், ரீஃப் எர்கெட், ஸ்பாட்டட் சேண்ட் கிரவுஸ், காமன் கிரேன், டால்மேஷன் பெலிக்கன் என 250 வகையான பறவையினங்களை இங்கே பார்க்கலாம்.
இதனாலேயே பறவை காணுதலில் விருப்பம் கொண்டவர்கள் அக்டோபர் தொடங்கிவிட்டால் ரான் ஆஃப் கட்சுக்குப் படையெடுக்கிறார்கள். ஹரப்பா நாகரிகத்தின் தோலாவிரா தொல்நகரமும் இங்குதான் உள்ளது. அதனால், தொல்லியல் அறிஞர்களும் ஆர்வலர்களும்கூட கட்சுக்கு வந்து செல்கின்றனர். கிரேட்டர் ரான் ஆஃப் கட்சில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.
ரான் உத்ஸவ்
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் தொடங்கி பிப்ரவரி வரை குஜராத் அரசு சார்பில் ‘ரான் உத்ஸவ்’ என்ற பெயரில் சுற்றுலா விழா ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்காக உப்புப் பாலைவனத்தில் ஒரு கூடார நகரம் உருவாக்கப்படுகிறது. இந்தக்கூடாரங்களில் தங்குவது அதிக செலவாகும். எனினும், கூட்டத்துக்குக் குறைவில்லை. இங்கு கட்ச் மக்களின் கைவினைப் பொருட்
கள் விற்பனை செய்யப்படுகின்றன. தினந்தோறும் கட்ச் மக்களின் கதைகளும், கலைகளும் அரங்குகளில் நிகழ்த்தப்
படுகின்றன. ‘பாரா க்ளைடிங்’ போன்ற சாகச விளையாட்டுகளுக்கும் பஞ்சமில்லை.
கட்ச் செல்ல குளிர் காலமே உகந்தது. கோடையில் வெயில் 49 டிகிரி செல்சியஸையும் தாண்டி கொதிக்குமாம். அதேபோல் பனிக் காலத்தில் பூஜ்யத்துக்குக் கீழேயும் வெப்பநிலை பதிவான வரலாறும் இருக்கிறதாம்.
பாலைவனத்தின் அழகு, அடர் வனங்களின் அழகுக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லை என்பதை ரான் ஆஃப் கட்ச் பயணம் உங்களை உணர வைத்திருக்கும்.
அந்த உணர்வோடு அடுத்த வாரம் ஓர் அடர் வனத்திற்குள் வலம் வருவோம்!
(பயணம் தொடரும்…)