மஹா பெரியவா 42: அருளே ஆனந்தம்


பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

மவுனத்தைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
வாய்மூடி மவுனியாக இருந்தால், எத்தனையோ காரியங்களைச் சாதிக்கலாம்.
எப்போது எதைப் பேச வேண்டும்... எப்போது எதைப் பேசக் கூடாது என்று புரிந்து வைத்திருப்பதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது.
சாமர்த்தியமான பேச்சு மனிதனுக்கு எப்படிச் சில இடங்களில் வெற்றியைத் தருகிறதோ, அதுபோல் அடக்கமான மவுனம் பல இடங்களில் வெற்றியைத் தேடித் தரும்.
தன்னைத் தேடி வருகிற நண்பர் களிடம் ரொம்பவும் பெருமையாகச் சொல்வாராம் அறிஞர் பெர்னாட்ஷா, ‘‘எனக்கு இருபத்தைந்து மொழிகள் தெரியும்’’ என்று.
நண்பர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.
இன்றைக்கு எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டு விடலாம். ஆனால், அன்றைக்கு இது அவ்வளவாக சாத்தியம் இல்லை.
ஆர்வத்தை அடக்க முடியாமல் வந்த நண்பர் ஒருவர் பெர்னாட்ஷா விடம் கேட்டே விட்டாராம்... ‘‘எப்படி இது உங்களுக்கு சாத்தியமாயிற்று?’’
‘‘இதிலென்ன அதிசயம்... இருபத் தைந்து மொழிகளில் மவுனமாக இருக்க என்னால் முடியும்’’ என்றாராம் அந்த அறிஞர் ஒரு புன்னகையுடன்.
இன்னுமா புரியவில்லை?
மவுன பாஷை ஒருவருக்குத் தெரிந்துவிட்டால், உலகத்தில் இருக் கக் கூடிய அத்தனை மொழிகளிலும் அவரால் பேச முடியும். உலகத்தின் எந்த ஒரு மூலைக்கும் பயணிக்க முடியும்.
மவுனத்தைக் கடைப்பிடிக்க வேண் டியதன் அவசியம், ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தான்!
எங்கெல்லாம் மனிதனுக்கு ஆசைகள் மேலோங்குகிறதோ, அங்கெல்லாம் மவுனமாக இருந்து விட வேண்டும். தப்பித் தவறிக்கூட வாயைத் திறந்து விடக் கூடாது.
ஆசையின் காரணமாக ஆர்வம் மேலோங்கி வாயைத் திறந்து விட்டால், எதிர்கொள்வது ஆபத் தல்ல. பேராபத்து... வாழ்க்கையே நிர்மூலமாகி விடும்.
அதனால்தான் ‘காமம், க்ரோதம், லோபம்.. இவற்றை விலக்க வேண்டும்’ என்று கிருஷ்ண பரமாத்மா உள்ளிட்ட பலரும் நமக்கு அருளி இருக்கிறார்கள்.
‘காமம்’ என்றால் ஆசை.
சீதை மேல் ராவணன் கொண்டது காமம்.
‘க்ரோதம்’ என்றால் கோபம்.
மந் நாராயணன் மேல் இரண் யன் கொண்டது கோபம்.
‘லோபம்’ என்றால் பேராசை.
பஞ்சபாண்டவர்களுக்கு உண் டான பூமியையையும் தானே ஆள வேண்டும் என்று துரியோதனன் கொண்டது பேராசை.
காமம், க்ரோதம், லோபம் ...  இவை மனிதனுக்குள் மேலோங்குகிறபோது மவுனமாக இருந்து விட வேண்டும்.
ராவணன், இரண்யன், துரியோ தனன் போன்றோர் ஆர்ப்பாட்டம் பண்ணாமல் காமம் கொள்ளாமல், கோபம் கொள்ளாமல், பேராசைப் படாமல் இருந்திருந்தால், யோசித்துப் பாருங்கள்.
ராமாயணம், பிரகலாத சரித்திரம், மகாபாரதம் போன்றவை இன்று இருந்திருக்காது.
ஆக, மவுனத்தை விட உலகத்தில் சிறந்த பாஷை கிடையாது. அதை ஒருவர் கடைப்பிடித்தால், அது எல்லா வெற்றியையும் அவருக்குப் பெற்றுத் தரும்.
மவுனத்தைப் பற்றி நடமாடும் தெய்வம் மகா பெரியவா என்ன சொல்கிறார்?
இதோ, தெரிந்து கொள்ளுங்கள்...
‘‘மவுனம் கஷ்டம்தான். எல்லாக் காரியத்தையும் எண்ண ஓட்டத்தை யும் விட்டு விட்டு மவுனமாக இருப் பது என்றால் ஆரம்பத்தில் முடியாது தான். ஆனாலும், மெள்ள மெள்ள மவுனத் தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வாயசைவு இல்லாமல் சைகை யிலேயே பரிமாறிக் கொள்வது, சின்ன சின்ன விஷயங்களை எழுதிக் காட்டுவது ... இப்படித்தான் மவுன விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
எத்தனை முறை ஜாடை காட்டி விளக்கினாலும், எத்தனை முறை எழுதி ஒரு விஷயத்தைப் பிறருக்கு உணர்த்தினாலும் பேசுகிற அளவுக்கு இவற்றில் வளவளப்பு இருக்காது. உடலில் இருக்கிற சக்தியையும் வீணாகச் செலவு செய்ய வேண்டாமே!
தொணதொணவென்று பேசிக் கொண்டிருக்க வேண்டும்... அடுத்தவர்களைக் காயப்படுத்த வேண்டும் என்று எப்போதும் அலைந்து கொண்டிருக்கிற நாக்கை மவுனமாக இருக்கின்ற அந்த சில நிமிடங்களில் கட்டிப் போடுகிறோம் அல்லவா? எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல், வாயைத் திறக்காமலே இருக்கிறோம் அல்லவா? அந்த வகையில்  இது நல்லதுதான்.
இப்படி மெள்ள ஆரம்பித்து, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்ட,  அட்டகாசங்களை விட்டு விட வேண் டும்.  மவுனம்தான் இந்த மனதுக்குப் பரம அமைதி என்று புரிந்து அதையே நிரந்தரம் ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்போது வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
அலையே இல்லாத சமுத்திரம் மாதிரி சலசலப்பும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆனந்தமாகக் காணப்படும்.
‘மவுனம் எனக்குப் பழக்கப்படவில்லை... என்னால் மவுனத்தை மேற்கொள்ள முடியவில்லை’ என்றெல்லாம் ஒதுங்கிவிடக் கூடாது. அரைகுறை மவுனம்தான் ஆரம்பத்தில் வாய்க்கும். அவசரத்தில் தப்பித் தவறி ஏதாவது வாய் திறந்து உளறி விடுவோம். பரவாயில்லை. குறைபாட்டுடனாவது ஏதோ ஓர் இடத்தில் ஆரம்பித்து விடவேண்டும். நாட்பட நாட்பட பழக்கத்தினாலும் பயிற்சியினாலும் குறைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே போகும். இறுதியில், ஒரு பூர்ண நிலை வரும். அப்போது நிஜ மவுனம் ஸித்திக்கும்.
இப்படி ஆரம்பிக்கிற இந்த மவுன நிலை, சர்வேஸ்வரன் வழிபாட்டுக்கு ஒரு சாதனம். மவுனத்திலேயே மகேஸ்வர வழிபாடு ஆரம்பமாகி விடும்!
பகவான் அருளால் நிரந்தர மவுனம் வாய்க்கின்றபோது, ‘ஈஸ்வரன் வேறேயாக இல்லை. அவனுக்குத் தனியாக ஆராதனை என்று பண்ண வேண்டியதில்லை’ என்ற சிந்தனையே உள்ளத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.
ஆரம்பத்தில் வாய் பேசாத மவுனம் மட்டும்தான் தேவை. நாளாக நாளாக வாய் பேசவில்லை என்பது மட்டுமன்றி, கண் பார்க்கவில்லை, காது கேட்கவில்லை, எல்லாவற்றுக்கும் மேலே மனசில் ஒரு எண்ணம்கூட எழும்பவில்லை என்று ஆகிவிடும். இந்த நிலைதான் லட்சியம். இதுவே நிஜ மவுனம்!
நாம் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட ஒரு எறும்பு மேலே ஊறினால் அதை அப்படியே தேய்த்து விடுகிறோம். கொஞ்சம் குளிர்க் காற்று அடித்தால் விலகி இருக்கிற போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறோம். சவுகரியம் வேண்டி உறங்கும்போதும் இடதும் வலதுமாக மாறி மாறிப் படுக்கிறோம்.
ஆனால், அதிகாலையில் எழுந்து கொள்ளும்போது முதல் நாள் இரவு தூக்கத்தில் நடந்த இவை எதுவும் நினைவில் இருப்பதில்லை.
அதாவது இந்த விஷயங்கள் அனைத்தும் நம் உணர்வுக்கு  எட்டாமலேயே, தூக்க நிலையிலேயே எல்லாவற்றையும்  பண்ணி இருப்போம். ஆக, அந்தத் தூக்க நிலையில்கூட சரீரத்தின் மீது இருக்கிற அபிமானம் போகாத காரணத்தால் உடலைப் பாதுகாக்க இந்தக் காரியங்களைப் பண்ணி இருக்கிறோம்.
மனித உடலில் நடக்கிற எந்தக் காரியமானாலும் அதை மூளையின் இயக்கத்தின் கீழுள்ள நரம்பு மண்டலம்தான் பண்ணுகிறது. அதுவே இத்தனை சரீர அபிமானத்தை நமக்குக் கொடுக்கிறது. இது உள்ளுக்குள் ஊறிய விஷயம்.
நம் இச்சையின் (விருப்பத்தின்) பேரில் உடலில் இருக்கிற எண்ணற்ற நரம்புகள் அநேக கார்யங்களைப் பண்ணுகின்றன. அதுவும், யார் தயவையும் எதிர்பார்க் காமல்! அவைதான் மேலே சொன்னவை.
கழுத்து, இடுப்புப் பக்கங்களில் ஏதாவது நிமிண்டுகிற மாதிரி பட்டால் குறுகுறு என்று பண்ணிச் சிரிப்பாக வருகிறது.
பயமாக இருந்தால் ஒரு வித தடுமாற்றம் வருகிறது.
பெரிய கஷ்டம் வந்தால் வயிற்றையே கலக்குகிறது.
ஒருத்தன் கொட்டாவி விட்டால் மற்ற பேரும் கொட்டாவி விடுகிறோம்.
இவை எல்லாம் உடலில் இருக்கிற இந்த நரம்புகளின் எதிர்பாராத செயல்பாடுகள்.
நிஜ மவுனத்தில் உடல் எப்படி இருக்கும்?
உடம்பின் மேலே மலைப்பாம்பு ஊர்ந்து போனாலும் தெரியாது. இயல்பாக இருக்கும்.
குளிரோ, வெயிலோ எதுவானாலும் தெரியாமல் கட்டை போல் நிஷ்டையில் இருக்கும்.
உடல் மீது இருக்கிற ஆசையும் கவனமும் அகன்று விட்டால், உள்ளூர இருக்கும் அபிமானம் சொல்லிக்காமல் கொள்ளாமல் போய்விடும். அத்தகையவனுக்கு உடலில் மலைப்பாம்பு ஊர்வது கூடத் தெரியாது.
இப்படி அனைத்தையும் வென்றவன்தான்,  எல்லாப் புலன்களையும் அடக்கியவன்தான் யோகி.
அவன்தான் ‘ஜிதேந்திரியன்’ எனப்படுகிறான்.’’
 மவுனத்தைப் பற்றி இப்படி விளக்கமாகச் சொல்கிறார் மகா பெரியவா!
பேசுவதால் எத்தனை பிரச்சினைகள் ஏற்படுகின்றன... அதே சமயம் பேசாமல் அமைதி காத்தால், எத்தனை நற்பலன்கள் ஏற்படுகின்றன என்பதெல்லாம் மனிதர்களான நமக்குப் புரியாமல் இல்லை.
எல்லாமே புரிகிறது.
மகா பெரியவா சொல்கிற ‘ஜிதேந்திரியனாக’ ஒவ்வொருவரும் மாறினால், எத்தகைய பிரச்சினையும் இல்லை; குழப்பமும் இல்லை!
(ஆனந்தம் தொடரும்...)

x