சந்தனார்
readers@kamadenu.in
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூச்சி, இனப்படுகொலை தொடர்பான சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானது சமகால வரலாற்றின் மிகப் பெரும் முரண்களில் ஒன்றாகப் பேசப்படுகிறது.
2017-ல், மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து, ஆப்பிரிக்க தேசமான காம்பியா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடந்த விசாரணை இது. 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமியக் கூட்டமைப்பின் சார்பில் காம்பியா இந்த வழக்கை முன்னெடுத்திருக்கிறது.
மியான்மர் மீதான புகார்களை எதிர்கொண்டு, தற்காப்பு வாதம் செய்யத்தான்வந்திருந்தார் ஆங் சான் சூச்சி. மததுவேஷத்தின் அடிப்படையில், ரோஹிங்யாக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட வன்முறை நடத்தப்படவில்லை என்று நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய உரையைஉலகம் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.