வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மின்னல் வேகத்தில் நிறைவேற்றி பதற்றத்தைப் பற்றவைத்திருக்கிறது பாஜக அரசு. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரும் அதே வேகத்தில் ஒப்புதலும் அளித்துவிட்டார். இந்தச் சட்டத்திருத்தம் இரு வேறு பிரச்சினைகளைக் கூர்மைப்படுத்தும் அம்சமாக இருப்பதுதான் நாடெங்கும் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது.
முதல் பிரச்சினை மதம். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து, 2014 டிசம்பர் 31-க்கு முன்னர் குடிபெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பார்ஸிக்கள், பவுத்தர்கள் ஆகிய மதத்தினர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்பது இந்தச் சட்டத் திருத்தத்தின் பிரதான அம்சம். இதில், முஸ்லிம்கள் விட்டுப்போயிருப்பதுதான் விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. ‘ஏன் பிற அண்டை நாடுகளில் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட மதத்தினரோ, இந்த மூன்று நாடுகளிலேயே அஹமதியாக்கள், ரோஹிங்யாக்கள் உள்ளிட்ட இஸ்லாமின் பிற பிரிவினரோ பாதிப்புக்குள்ளாகி இந்தியாவுக்கு வருவதில்லையா?’ என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
“மதத்தின் அடிப்படையில் காங்கிரஸ், தேசத்தை இரண்டாகப் பிரித்திருக்காவிட்டால் இந்தச் சட்டத் திருத்தத்துக்கே அவசியம்
இல்லை” என்று நாடாளுமன்றத்தில் அமித் ஷா முன்வைத்த வாதத்தை எதிர்க்கட்சிகளும், வரலாற்றறிஞர்களும் மறுத்திருக்கிறார்கள். 1920-களிலேயே சாவர்க்கர் முன்வைத்த வாதம் இது என்று அவர்கள் சொல்வது, பலமான பாஜகவின் முழக்கங்களுக்கு முன்னால் எடுபடவில்லை. இந்த மூன்று நாடுகளிலும் இருந்து, முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர், மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகித்தான் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்பது பாஜக முன்வைக்கும் முக்கிய வாதம்.