நிழற்சாலை


நகரும் ஓவியம்

குறுக்கும் நெடுக்குமாக
கோடுகளை நீட்டி முடக்கி
செய்யப்பட்ட
அந்தப் புகைவண்டியிலிருந்த
ஒவ்வொரு பெட்டிக்கு இடையிலும்
வளர்ந்துகொண்டிருக்கின்றன
குலை தள்ளிய தென்னைமரமும்
கனி கொண்ட மாமரமும்.
கைக்கும் வாய்க்கும்
எட்டவில்லையாயினும்
கண்ணுக்குக் குளிர்ச்சிதான்
மகள் வரைந்த ஓவியத்தில்!
- கனகா பாலன்

பெருநகரம்

பட்டணத்துப் பாதைகளில்
தார்ப் பாம்புகள் வளர்ந்து
பாதைகளைத் தேடி ஊர்ந்தலைய
நடுவில் கிடந்து மறித்தன
எல்லைச் சாமிகள்.
தயங்காது ஆதிசேஷனாகி
வாலால் அடித்த வேகத்தில்
தங்கள் எல்லைக் கற்களை
கக்கத்தில் வைத்து
பின்னால் வந்து
கணக்குப் பிள்ளைகளாக
காட்டிய பவ்யத்தால்
அருள் பாலிக்கப்பட்டது.
ஐயனார்களும் அம்மன்களும்
நகரத்து நடுவே அமர்ந்து
புகை சூழ
மரியாதையைக் காப்பாற்றிக்கொண்டனர்.
விழித்துப் பார்த்த கிராமங்கள்
தங்களைச் சுற்றிவளைத்து
வாகனங்கள் மேய
புல்லரித்துப் போய்
பனைகளை வயல்களை
மனைகளாக கடைகளாக
ஆக்கி கால்கள் பரப்ப…
கால வரிசையில்
வயசாளிகள்
நிலத்தின் கருக்கலைப்புக்காக
பதிவு மேசைகளில்
விரல்கள் பதிக்க
உடன் கொம்புகளாக வாரிசுகள்
நெல் களங்கள் வாயில்
வாய்க்கரிசி
தோப்புகளில்
நெய் பந்தங்களின் சடசடப்பு.
நகரங்கள்
விழுங்கிய கிராமங்களை
எளிதாகக் குறிக்க
பெருநகரங்கள் எனப் பெயரிட்டோம்.
- இரா. மதிபாலா

x