போர்முனை டு தெருமுனை 17: தியாகி விமானங்கள்


விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் என்ற இந்திய விண்வெளித் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இன்னும் சில ஆண்டுகளில் மூன்று இந்திய விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் 7 நாட்கள் சுற்றுப்பாதையில் விண்கலனில் வலம் வருவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி வீரர்களை ஆஸ்ட்ரானாட் என்றும் ரஷ்ய வீரர்களை காஸ்மெனாட் என்றும் அழைக்கிறார்கள். இந்திய விண்வெளி வீரர்களுக்கு என்ன பெயர் தெரியுமா? வியோமனாட் (Vyomanaut). வியோமன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு வானம் என்று அர்த்தம்.

விண்கலனே தரையிறங்கு

ஜி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் சுற்றுப்பாதைக்கு விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவார்கள். ஜி.எஸ்.எல்.வி ஒரு வழி பயணத்துக்கு தான். வீரர்கள் எப்படித் தரையிறங்குவார்கள்? வீரர்கள் தரையில் இறங்காமல் கடலில் இறங்குவார்கள். அவர்களை பத்திரமாக கடலிறக்கப்போவது ராணுவ விஞ்ஞானிகளின் வான்குடை. கீழிறங்கும் விண்கலனை 15 கி.மீ உயரத்திலிருந்து மூன்று கட்டங்களாக வெவ்வேறு வான்குடைகள் சுமக்கும். வினாடிக்கு 278 மீட்டர் வேகத்தில் கீழிறங்கும் விண்கலனின் வேகத்தை வான்குடைகள் குறைத்து கடல்பரப்பை பாதுகாப்பான வேகத்தில் தொட உதவும்.

எந்தத் தொழில்நுட்பத்தையும் சரிபார்க்க சோதனைகள் செய்யப்பட வேண்டும். இந்தத் தொழில்நுட்பமும் சோதிக்கப்பட்டது. 2018-ல், வீரர்கள் இல்லாத மாதிரி விண்கலன் ஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டு திட்டமிட்டபடியே வான்குடைகளால் சுமக்கப்பட்டு வங்காள விரிகுடாவில் வெற்றிகரமாகக் கடலில் இறங்கியது. ராணுவ ஆராய்ச்சி போர்க்கருவிகளோடு முடிந்துவிடுவதில்லை... விண்வெளி ஆய்வுகளுக்கும் கைகொடுத்து நமது தேசத்தின் பெயரை சர்வதேச சரித்திரத்தில் நிறுவுகிறது.

ஏவுகணை சோதனை

அத்துமீறி நாட்டுக்குள் நுழையும் எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உண்டு. விமான எதிர்ப்பு ஏவுகணைகளைச் சோதனை செய்வதிலும், விமானிக்கு ஏவுகணையை செலுத்த பயிற்சி தருவதிலும் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு. ஏவுகணையைப் பறக்கும் இன்னொரு விமானத்தின் மீது செலுத்த முடியாது. அப்படிச் செய்தால் விமானத்தை இழக்க நேரிடும். விமானியும் தவறுதலாக தாக்கப்படலாம். பிறகு எப்படி விமான எதிர்ப்பு ஏவுகணையைச் சோதிப்பது? போர்க்காலம் வரை பொறுக்கவும் முடியாது. சோதிக்கப்படாத ஏவுகணையை நேரடியாக போரில் பயன்படுத்தவும் முடியாது. இதற்கு என்ன வழி?

ஆளில்லா விமானங்களை இயக்கி அவற்றின் மீது தாக்குதல் சோதனை நடத்தினால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்படும். சரிதான். ஆனால், எத்தனை விமானங்களை இப்படி இழப்பது? இதற்கும் தீர்வு உண்டு. விமானம் போன்ற இழுவை மாதிரியை (Tow Body) ஆளில்லா விமானத்திலிருந்து கயிறு கட்டிப் பறக்கவிட்டு ராணுவ விஞ்ஞானிகள் சோதனை நடத்துகிறார்கள். விலை குறைந்த விமான மாதிரியை இழப்பதில் பொருளாதார பாதிப்பு குறைவு. குறி தவறி ஏவுகணை ஆளில்லா விமானத்தைத் தாக்கினாலும் உயிர்பலியில்லை.

இலக்காகும் ‘இலக்கு’

ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஆளில்லா இலக்கு விமானம் (Pilotless Target Aircraft) ஏவுகணை தாக்கு பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொருத்தமாக ‘இலக்கு’ (Lakshya) என்று பெயரிடப்பட்ட இந்த ஆளில்லா விமானம் தனது இரு இறக்கைகளிலும் மாதிரிகளைச் சுமந்து செல்லும். தரையிலிருந்து சிறிய ஏவுகலன் கொண்டு ஏவப்படும் இந்த விமானத்தை பயிற்சி முடித்தவுடன் வான்குடை கொண்டு கடலில் இறக்குகிறார்கள். இதனால் சேதமில்லாமல் மீட்கப்படும் விமானத்தை பலமுறை பயன்படுத்தலாம். இந்த விமானம் பெங்களூருவிலுள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகமான விமானவியல் மேம்பாட்டு நிறுவன (Aeronautical Development Establishment) விஞ்ஞானிகளின் படைப்பு.

கடலில் மீட்கப்படுவதால் இந்த விமானத்தின் இன்ஜின் பாதிப்படையாத வகையில் இருக்க வடிவமைப்பு சவால்கள் உண்டு. கூடவே பல கட்ட சோதனைகளும் செய்யப்படுகின்றன. ஒரு தொட்டியில் கடல் நீரை நிரப்பி விமான இன்ஜினை மூழ்க வைக்கும் சுவாரசியமான சோதனையும் அதில் ஒன்று!

பயிற்சி (Abhyas) என்ற பெயரிடப்பட்ட அதிவேக இலக்கு விமானம் (High-speed Expendable Aerial Target -HEAT) இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் சோதனை வெற்றியடைந்ததை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற தியாகி விமானங்களால் தான் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டு தேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுகிறது.

காற்றில் கண்கள்

நாட்டில் எல்லைப்பகுதியை உயரத்திலிருந்து கண்காணிக்க பல வழிகள் உண்டு. கண்காணிப்பு கோபுரங்களைப் பயன்படுத்தலாம், விமானங்களைப் பயன்படுத்தலாம். ஏன், செயற்கைக்கோள்களைக் கூட பயன்படுத்தலாம். ஒரு பலூனைக் கட்டி பறக்கவிட்டு அதில் கண்காணிப்பு கருவிகளைப் பொருத்தி பயன்படுத்தினால் என்ன? இந்தச் சிந்தனையின் நீட்சி தான் வான் மிதவை (Aerostat).
விமான வடிவிலான ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பிரம்மாண்டமான பலூனே வான் மிதவை. வான் மிதவையின் பயன்பாட்டை பல மேடைகளில் வலியுறுத்தியவர் டாக்டர்.அப்துல் கலாம். வான் மிதவையை ஒரு கயிற்றில் கட்டி தொடர்ந்து பறக்கச் செய்யலாம். ஆளில்லா விமானம் தொடர்ந்து ஓரிடத்தில் பறக்க எரிபொருளோ மின்சக்தியோ தேவை. ஆனால் இந்த பலூன், உள்ளே நிரப்பப்பட்ட வாயுவினால் தொடர்ந்து பறந்தபடி இருக்கும்.

ராணுவ விஞ்ஞானிகள் ஆகாய தீபம், நட்சத்ரா உள்ளிட்ட வான் மிதவைகளை உருவாக்கியுள்ளனர். ஒரு கி.மீ உயரத்தில் தொடர்ந்து 14 நாட்கள் பறக்கும் இந்த வான் மிதவைகள் ஏறக்குறைய 300 கிலோ எடையுள்ள கண்காணிப்புக் கருவிகளைச் சுமக்கும் திறனுள்ளவை. படக்கருவிகள், ராடார், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை மிதவையில் இணைத்து அப்பகுதியின் பாதுகாப்பை அதிகரிக்கலாம்.

பலூன் விமானம்

வான் மிதவையில் இன்ஜினைப் பொருத்தி விமானம் போல அதை இயக்கவும் முடியும். இதற்கு காற்றுக்கப்பல் (Air Ship) என்று பெயர். இதனால் வானில் வட்டமடித்தபடியே பெரும் நிலப்பரப்பை கண்காணிக்க முடியும். இது தொடர்பான ஆராய்ச்சி முயற்சிகள் தொடர்கின்றன. சிறிய ரக காற்றுக்கப்பல் இளம் ராணுவ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு சோதனை முறையில் ஆக்ராவில் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவசாய விஞ்ஞானிகள்

குளிர் பாலைவனம் என வர்ணிக்கப்படும் லடாக் பகுதியில் நிலவும் காலநிலையால் மரங்கள் அதிகம் வளர்வதில்லை. ராணுவ அதிஉயர ஆராய்ச்சி நிறுவன (Defence Institute of High Altitude Research) விஞ்ஞானிகள், பனிப்பகுதியில் மரங்களை வளர்ப்பதற்கான ஒட்டுமுறை (Grafting) நுட்பங்களை ஆராய்ந்து அதை எளிமைப்படுத்தி லடாக் மக்களுக்கும் அப்பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்கிறார்கள். பனிபோர்த்திய லடாக் பகுதியில் பசுமை போர்த்தும் இந்த முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். போப்லர், வில்லோ, ரொபினியா, எல்ம், ஒலியெஸ்டர், ஸிபக்தான் உள்ளிட்ட காட்டு தாவரங்கள் லடாக் பகுதியில் கிளைத்திருக்கின்றன. மூன்றாண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் பனிப்பாலைவனங்களில் நடப்பட்டிருப்பது உணமையில் இமாலய (!) சாதனை தான். ராணுவ விஞ்ஞானிகளின் பசுமைப்பணியால் தற்போது 15,500 அடி உயர மலைப்பகுதிகளிலும் மரங்களைப் பார்க்கமுடிகிறது.

காய்கறி விஞ்ஞானிகள்

1960 களில் லடாக் பகுதியில் ஐந்து விதமான காய்கறிகள் மட்டுமே விளைந்தன. இது தொடர்பான ராணுவ விஞ்ஞானிகளின் தாவரவியல் ஆய்வின் பலனாக 2008 ஆம் ஆண்டு வாக்கில் 78 வகையான காய்கறிகள் வளர்க்கப்பட்டன. இவற்றின் வளர்ப்பு நுட்பங்கள் ஆவணப்படுத்தப்பட்டு அப்பகுதி மக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் விளைவாக 23 வகையான காய்கறிகளை லடாக் பகுதி மக்கள் தொழில்முறையாக வளர்த்து கூட்டுறவு சங்கங்களின் மூலமாக ராணுவத்தினரின் உணவுத் தேவைக்கு வழங்கி வருகின்றனர். இதனால் சூழலியல் முன்னேற்றத்தோடு மக்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டிருக்கிறது. ராணுவ விஞ்ஞானிகளின் 78 காய்கறிகள் வளர்ப்பு, லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது கூடுதல் செய்தி.

ஆப்பிள் மற்றும் வாதுமை (Apricot) பழங்கள் லடாக் பகுதிகளில் அதிகம் வளர்கின்றன. அதிக விளைச்சல் தரும் ஒட்டு வகை மரக்கன்றுகளை ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியதன் மூலமாக இப்பழங்களின் விளைச்சல் அதிகமாகியிருக்கிறது. ஆண்டுக்கு 40,000 ஒட்டு மரக்கன்றுகள் இப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு ராணுவ ஆய்வுக்கூடத்தால் வழங்கப்படுகின்றன. இப்பகுதிக்கு புதிய வரவுகளாக பேரிக்காய், குழிபேரி, பீச், பிளம்ஸ், செர்ரி பழங்களையும் அவைகளின் வளர்ப்பு முறைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள்.

தமது அறிவால் அழிவாயுதங்கள் தயாரிப்பதோடு நில்லாமல் மக்களின் உயிர் வளர்க்க பயிர் வளர்க்கும் நுட்பங்களில் பனிமலைகளில் விவசாயிகளோடு களமாடும் நமது விஞ்ஞானிகளின் முயற்சி வரவேற்கத்தக்கது.

மரம், காய்கறி, பழங்களோடு ஆராய்ச்சிகளை நிறுத்திக்கொள்ளாமல், கோழி வளர்ப்பிலும் இறங்கியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். பனிப்பகுதிகளில் நிலவும் குறைந்த வெப்பநிலையில், குளிருக்காக இறுகச்சாத்தப்பட்டிருக்கும் காற்றோட்டம் இல்லாத வீடுகளில் கோழிகள் சீக்கிரம் இறந்துவிடும். இங்கே எப்படி கோழி வளர்ப்பது?

(பேசுவோம்...)

x