கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
இப்போதேல்லாம் வாரம் ஒரு ‘வைரல்’ பதிவு வராவிட்டால், சமூக ஊடகமே ஸ்தம்பித்துவிடுகிறது. சமீபத்திய வரவு, தலைகீழாகத் தமிழ் பேசும் மனோன்மணி. தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு மத்தியில், எல்லா வாசகங்களையும் அட்சரம் பிசகாமல் அப்படியே தலைகீழாகச் சொல்கிறார் இவர்.
23 வயதான மனோன்மணியின் தலைகீழ்த் தமிழ்ப் பேச்சு அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாக… செய்தி சேனல்கள், இணைய இதழ்கள் என்று எங்கு பார்த்தாலும் இவரது முகம்தான். கோவை வானொலி நிலையத்தில் நானும் அவரைச் சந்தித்தேன்.
எடுத்த எடுப்பில், “எங்கே இதைத் தலைகீழாச் சொல்லுங்க பார்ப்போம்” என்று, ‘கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’ என்ற குறளைச் சொன்னேன். “திரும்பச் சொல்லுங்க” என்று கூர்ந்து கேட்டுக்கொண்டவர், அடுத்த சில வினாடிகளில் அந்தக் குறளை அப்படியே தலைகீழாகச் சொல்கிறார். அதே வேகத்துடன் அதைத் தலைகீழாக எழுதியும் காட்டுகிறார். அடுத்ததாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிறேன். நாம் சரளமாக தமிழ் வாசிப்பதைவிடவும் படுவேகமாகத் தலைகீழாக வாசிக்கிறார். பாடல்களைத் தலைகீழாகப் பாடிக்காட்டியும் அசத்துகிறார்.
மனோன்மணியின் தலைகீழ் மொழியை, அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்மணி, “இது என்ன பாஷை?” என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார். “தமிழ்தான். ஆனா, தலைகீழ் பாஷை” என்று கலகலப்புடன் பதில் சொல்லும் மனோன்மணி, தன் கதையையும் அதே உற்சாகத்துடன் என்னிடம் விவரிக்கிறார்.