கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
காமதேனு பேட்டிக்காக நேரம் ஒதுக்கி இருந்த அமைச்சர் ஜெயக்குமார், “ரெண்டு மணிக்கு வீட்டாண்ட வந்துடுங்க” என்று சொல்லி இருந்தார். அவர் சொன்னபடியே நண்பகலிலேயே அவரது வீட்டில் ஆஜரானேன். நீண்ட காத்திருப்புக்கு இடையே அவ்வப்போது அழைத்து, “தம்பி கோவிச்சுக்காதீங்க. நிறைய விசிட்டர்ஸ் இருக்காங்க” என்று சொல்லிக்கொண்டிருந்த அமைச்சர், மாலை நாலரை மணிக்குத்தான் தரிசனம் தந்தார். மேஜைக்கு அந்தப் பக்கம், நீல நிற டீஷர்ட்டும் கைலியுமாக அமர்ந்திருந்தவர், “கைலி தெரியாம போட்டோ எடுங்க தம்பி” என்று போட்டோகிராபரிடம் சொல்லிவிட்டு, பேட்டிக்குத் தயாரானார்.
நீங்க சபாநாயகரா இருந்தப்போ, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தைச் சமாளிச்சதுக்கும், இன்னைக்கு ஒரு அமைச்சரா எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினைச் சமாளிக்கிறதுக்கும் என்ன வித்தியாசம்?
விஜயகாந்த் எங்களோட நல்லா ஒத்துழைச்ச தலைவர்தான். பொன்மனம் கொண்டவர். ஒரு உதாரணம் சொல்றேன். பொதுவா சட்டமன்றத்துல அம்மா குறிப்பிட்ட நேரத்துக்குள்ள பேச ஆரம்பிச்சி, குறிப்பிட்ட நேரத்துல முடிக்கணும்னு நினைப்பாங்க. நானும் அதுக்கேத்த மாதிரி எதிர்க்கட்சிக்காரங்ககிட்ட பேசி வெச்சிடுவேன். ஒருநாள் விஜயகாந்த் சட்டசபையில பேச ஆரம்பிச்சாரு. நான் சபாநாயகர் சீட்ல இருந்தபடி, ‘கொறடா எல்லாம் சொல்லிருக்காரா?’ன்னு சைகைல கேட்டேன். ‘சொல்லிட்டாரு. நான் கரெக்டா முடிச்சிடுறேன்’ என்று அவரும் சைகைல பதில் சொன்னார்.