போர் விமானம் ஏறக்குறைய மணிக்கு 1,200 கிலோமீட்டர் வேகத்தில் (!) பறக்கும். விமான இன்ஜின் செயலிழந்தால், எதிரி ஏவுகணைகளால் தாக்கப்பட்டால் அல்லது விமானம் கட்டுப்பாட்டை இழந்தால் விமானி விமானத்தைக் கைவிட்டுவிட்டு உயிர் பிழைக்க வேண்டும். இவ்வளவு வேகத்தில் பறக்கும் விமானத்திலிருந்து வெளியேறுவது எப்படி? விமானப் படை விமானி அபிநந்தன் எப்படி தாக்கப்பட்ட விமானத்திலிருந்து தப்பித்துத் தரையிறங்கினார்?
விமானியா... விமானமா?
உசுப்பிவிட்டால் வெடிக்கக்கூடிய வெடிபொருள் குப்பிகள் பொருத்தப்பட்ட இருக்கையில் அமர்ந்துதான் போர் விமானி விமானத்தை இயக்குகிறார் என்பது தெரியுமா? நாட்டைக் காக்கும் போர் விமானிக்கு வெடிகுண்டா, ஏன்? அது அவருடைய உயிரைக் காப்பாற்றத்தான். எப்படி? விலாவாரியாகப் பார்ப்போம்.
போர் விமானத்தின் விலை மிக மிக அதிகம். இந்தியத் தயாரிப்பான ‘தேஜஸ்’ போர் விமானத்தின் தோராய விலை 275 கோடி ரூபாய் (ஒரு விமானத்தின் விலைதான்!). ஆபத்துக் காலத்தில் விமானத்தைக் காப்பதா, விமானியைக் காப்பாற்றுவதா? விமானத்தின் இமாலய விலையைவிட மனித உயிரின் மதிப்பு மிக மிக அதிகம். மேலும் பணம் கொடுத்தால் விமானத்தை உடனடியாக வாங்க முடியும். பல ஆண்டு விமான அனுபவமும், வான்வெளிப் போர்க் கலைகளில் தேர்ச்சியும் பெற்ற விமானியை உடனடியாக உருவாக்க இயலாது. பல ஆண்டுகள் பயிற்சி தேவைப்படும்.
‘காக்பிட்’ நெருக்கடி
அதிவேகத்தில் விரையும் விமானத்திலிருந்து ஆபத்து நேரத்தில் எப்படி விமானி வெளியேறித் தப்புவது? ஓடிக்கொண்டிருக்கிற பேருந்திலிருந்து இறங்குவதைப் போல எளிதல்ல என்றாலும், பாராசூட் உதவியுடன் குதிக்கலாமே என உங்களுக்குத் தோன்றும். பயணிகள் விமானத்தைப் போல, போர் விமானத்தில் விமானி கதவைத் திறந்து குதிக்க இயலாது. ரேடார்களின் பார்வையிலிருந்து தப்புவதற்காகப் போர் விமானம் மிகச் சிறிய வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும். போர் விமானியின் இருப்பிடம் ஒருவர் மட்டுமே அமரும் வகையில் மிக நெருக்கமாக இருக்கும்.
பேருந்திலோ, காரிலோ ஓட்டுநர் பக்கவாட்டிலிருந்து இருக்கையை அடைய முடியும். ஆனால், விமானி மேலிருந்து கீழாக இறங்கித்தான் இருக்கையை அடைய முடியும். விமானியின் அறையைக் ‘காக்பிட்’ என்பார்கள். ‘காக்பிட்’ என்பது சண்டை சேவல்களுக்கான போட்டி நடத்தப்படும் பள்ளத்தைக் குறிக்கும் சொல். இவ்வளவு இடநெருக்கடியில்தான் விமானி உட்கார்ந்திருப்பார். மேலும் விமானி இருக்கையோடு பெல்ட் மூலம் இணைக்கப்பட்டிருப்பார். அதோடு காற்றுக் குழாய்களும் அவரது உடையில் பொருத்தப்பட்டிருக்கும். எதற்குக் காற்றுக் குழாய்கள்?
தொப்புள் கொடிகள்
விமானத்தின் அதிவேக இயக்கத்தைப் பொறுத்து விமானியின் உடலில் ரத்தம் கால்களிலோ தலையிலோ அதிக அளவில் பாய்கிற போக்கு இருக்கும். தலையில் அதிக ரத்த ஓட்டம் இருந்தால் பார்ப்பதெல்லாம் சிவப்பாய் தோன்றும். கால்களில் அதிக ரத்த ஓட்டம் இருந்தால் கண்கள் இருட்டாகும். இரண்டு சூழ்நிலைகளும் விமானியின் உயிருக்கு ஆபத்துதான். எனவே, காற்றின் அழுத்தத்தைக் கால்களிலும் வயிற்றிலும் செலுத்தவல்ல ‘ஜி-உடை’யை (g-suit) விமானி அணிந்திருப்பார். இந்த உடைக்கு விமானத்திலிருந்து காற்றைச் செலுத்தும் குழாய்களும் பொருத்தப்பட்டிருக்கும். உயரங்களில் ஆக்ஸிஜன் குறைவு என்பதால் சுவாசிக்க ஆக்ஸிஜன் முகமூடியையும் அணிந்திருப்பார். விமானத்தில் உள்ள ஆக்ஸிஜன் குழாயுடன் முகமூடி இணைக்கப்பட்டிருக்கும். இப்படி பல தொப்புள் கொடிகளால் விமானத்தோடு இணைக்கப்பட்டிருப்பார் விமானி. அதுமட்டுமல்ல ‘காக்பிட்’டை மூடியுள்ள கண்ணாடி மூடி (Canopy) காற்று நுழையாதபடி இறுக்கமாக அடைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், வெளிக்காற்றின் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி(!). இவ்வளவு நெருக்கடிகளைத் தாண்டி விமானி வெளியேற வேண்டும்.
வெடிகுண்டு இருக்கை
போர் விமானத்தில் விமானியின் நேர் பின்னே, விமானத்தின் செங்குத்து வால் (Vertical Stabilizer) அமைந்திருக்கும். விமானி கண்ணிமைக்கும் நேரத்தில் தனது இருக்கையைவிட்டு மேலேறி வர வேண்டும். தவறினால், செங்குத்து வால் விமானியைத் தாக்கிச் சிதைக்கும். கண்ணிமைக்கும் பொழுதில் விமானியை வெளியேற்றவே வெடிகுண்டு பயன்படுத்தப்படுகிறது. வெடிகுண்டு வெடிக்கும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அருகிலிருக்கிற பொருட்களைத் தூக்கி வீசும். வெடிபொருள் நிரப்பிய குப்பிகளை (Pyro Cartridges) விமானியின் இருக்கைக்கு அடியில் பொருத்தியிருப்பார்கள்.
அவசரச் சூழ்நிலையில், கட்டுப்பாட்டு அறைக்குத்தகவல் தந்துவிட்டு வெளியேற்றக் கைப்பிடியை(Ejection Handle) விமானி இழுப்பார். அப்போது ஒரேநேரத்தில் வெடிபொருள் குப்பிகள் உசுப்பப்படும். குப்பிகள் வெடிக்கும்போது, விமானி இருக்கையோடு விமானத்திலிருந்து தூக்கி வீசப்படுவார். ரயில் பெட்டி எப்படி தண்டவாளத்தில் ஒரே திசையில் நகருகிறதோ அதைப் போல விமான இருக்கை திசை மாறாமல் மேல் நோக்கி நகரும் வகையில், தண்டவாள அமைப்பும் இருக்கையின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும். எனவே, விமானி இருக்கையோடு விமானத்தைவிட்டு சடுதியில் மேல் நோக்கி சீறிப்பாய்ந்து, வால் பகுதி மோதும் ஆபத்திலிருந்து தப்புவார். பெல்ட்டால் இருக்கையோடு இணைக்கப்பட்டிருப்பதால் விமானி கீழே விழாமல்
பாதுகாப்பாக இருப்பார். (தலைவர்கள் தங்கள் இருக்கையைக் காப்பாற்றிக்கொள்ளப் பாடுபடுகிறார்கள். இங்கே இருக்கைதான் விமானியைக் காப்பாற்றுகிறது!)
இப்படி விமானி வெளியேறும் முன்பு, ‘காக்பிட்’டை மூடியுள்ள கண்ணாடி மூடி திறக்கப்பட வேண்டும். ஒரு பெட்டியைத் திறப்பது போல இதை மேல் நோக்கித் திறந்து மூட இயலும். மூடியைத் திறக்க தாமதமானால் விமானி அதில் மோதும் ஆபத்து உண்டு. இங்கும் வெடிபொருளே பயன்படுத்தப்படுகிறது (வெடிபொருட்கள் உயிர் காக்கவும் செய்கின்றன!). வெடிபொருள் நிரப்பிய குப்பிகளைக் கண்ணாடி மூடியைத் தாங்கும் சட்டத்தில் பொருத்தியிருப்பார்கள். உசுப்பினால் குப்பிகள் வெடித்து கண்ணாடி மூடி தூக்கி வீசப்படும்.
காக்கும் வான் குடை
இருக்கையோடு விமானத்தைவிட்டு வீசப்படும் விமானி எப்படித் தரையிறங்குகிறார்? இருக்கையின் தலைப் பகுதியில் பாராசூட் மடித்து வைக்கப்பட்டிருக்கும். சிறிய வான் குடை (Drogue Parachute) முதலில் விரியும். இது, முதன்மை வான் குடையை விரிக்க உதவும். இருக்கையோடு இருந்தால் விமானி வான் குடையைக் கட்டுப்படுத்தி தரையிறங்குவது இயலாது. எனவே, வான் குடை விரியும்போது இருக்கை விமானியிடமிருந்து பிரிந்து கீழே விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வான் குடை உதவியுடன் விமானி பாதுகாப்பாகத் தரையிறங்குவார்.
பாராசூட், இருக்கை, வெடிமருந்து குப்பிகள் மற்றும் இவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் மென்பொருள் போன்றவற்றை உருவாக்கும் விஞ்ஞானிகள், தமது கடின உழைப்பாலும், செறிந்த அறிவினாலும் தேசம் காக்கப் புறப்படும் விமானியின் உன்னதப் பணிக்கு உயிர்நாடியாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்பிழைப்புப் பெட்டி
இருக்கையில் விமானி அமரும் பகுதிக்குக் கீழே ஒரு பெட்டி இருக்கும். இருக்கை விமானியை விட்டுப் பிரியும்போது இப்பெட்டி விமானியோடு இணைக்கப்பட்ட கயிற்றோடுதரையிறங்கும். ஏன் இந்தப் பெட்டி? விமானி தரையிறங்கும் இடம் மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியாகவோ, மலைப் பகுதியாகவோ இருக்கலாம். கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் பெற்று மீட்புக் குழு விமானியைக் கண்டடைய கால அவகாசம் தேவை. இந்நிலையில் விமானி தன்னந்தனியாளாக சூழ்நிலைகளைச் சமாளித்தாக வேண்டும். இதற்காகவே இந்த உயிர்பிழைப்புப் பெட்டி (Survival Kit) விமானியோடு இணைக்கப்படுகிறது.
இந்தப் பெட்டியில் அதிக சக்தி தரும் சாக்லேட், வன விலங்குகள் அல்லது எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள கைத்துப்பாக்கி, இரவில் நடமாட கைவிளக்கு, தண்ணீர் புட்டி, மருந்துப் பொருட்கள், நீரைத் தூய்மையாக்கும் மாத்திரைகள், மீன் தூண்டில், மடித்து விரிக்கக்கூடிய அடுப்பு, சமிக்ஞை கொடுக்கும் கருவி, திசைகாட்டி, கத்தி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருக்கும். எதற்கு மீன் தூண்டில்? அருகில் உள்ள நீர்நிலைகளில் மீன் பிடிப்பதற்கு!
எல்லா நெருக்கடிகளையும் தாண்டி வெற்றிகரமாகத் தரையிறங்கினாலும், உதவி வரும்வரை துணிவுடனும், மன வலிமையுடனும் உடல் வருத்தும்சூழ்நிலைகளை விமானி சமாளிக்க வேண்டும். இதற்கும் போர் விமானிகள் விமானப்படையில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். தறையிறங்கும் இடம் எதிரி நாடாக இருந்தால் போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழக்கவும் நேரிடலாம். இப்படி எல்லா சோதனைகளையும் தாண்டி வெற்றி கண்டவர்தான் அபிநந்தன்!
போர் விமானிகளை மட்டுமல்ல இன்னும்சில ஆண்டுகளில் விண்வெளியில் வட்டமிடவுள்ள இந்திய விண்வெளி வீரர்களையும்
பத்திரமாகத் தரையிறக்கப்போவது ராணுவ விஞ்ஞானிகளின் வான் குடை. அப்படியா?
(பேசுவோம்...)