முதுமை எனும் பூங்காற்று 10: அமைதி தரும் ஆன்மிகப் பயணம்


மனித வாழ்வில் பயணத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் அறிவோம். இளமையில் படிப்பு, வேலை என்று ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பயணப்படுவது இயல்பான விஷயம்தான். வேலை, மண வாழ்வு போன்ற காரணங்களால் வெளியூர்களில் வசிக்கும் பிள்ளைகளைப் பார்க்கச் செல்வது முதியோர் மேற்கொள்ளும் பயணங்களில் முக்கியமானது. அதேபோன்ற முக்கியத்துவம் இன்னொரு விஷயத்துக்கும் உண்டு. அது – ஆன்மிகப் பயணம்.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், தங்கள் பொருளாதாரச் சூழலுக்குத் தகுந்தாற்போல் ஆன்மிகத் திருத்தலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள். கடவுள்கள் உறைந்திருக்கும் திருத்தலங்களைத் தரிசிக்க, உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குச் செல்கிறார்கள். அதில் கிடைக்கும் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்குப் பாடமாக விட்டுச் செல்கிறார்கள்.

யாத்திரைகள்

முன்பெல்லாம் தன் வாழ்நாளின் கடமைகளை முடித்துவிட்டதாகக் கருதுபவர்கள் ஆன்மிகத் தலங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். முந்தைய காலங்களில் பயண வசதி, இன்றைக்கு இருக்கும் அளவுக்கு இருந்ததில்லை. எனவே, தங்கள் ஊரிலிருந்து காசி போன்ற புனிதத் தலங்களுக்குச் செல்பவர்களில் சிலர், திரும்பி வரும் எண்ணம் இன்றி அங்கேயே தங்கிவிடவே விரும்புவார்கள். அப்படிப் பயணத்துக்குத் தயாராகும் பெரியவர்களை வழியனுப்ப ஏராளமான உறவினர்கள் வருவார்கள். பெரியவர்கள் திரும்பி வந்தால் ஒரு விழாவே வீட்டில் நடக்கும்.

முன்பெல்லாம் பல நாட்களுக்குத் தேவையான உணவுகள், சில நாட்களுக்குப் பழங்கள், சில நாட்களுக்கு விரதங்கள் எனப் பயணத்தை மேற்கொள்வார்கள். பயணத்தின்போது சந்திக்கும் மக்களுடனான உரையாடல்கள், அவர்களுடைய இன்ப துன்பங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுதல் என அனைத்துமே பெரியவர்களை மேலும் பக்குவப்படுத்தும் அம்சமாக இருக்கும். ஆனால், இன்றைக்குப் பயணங்கள் ஓரளவு எளிதாகிவிட்ட சூழலில், கிட்டத்தட்ட சுற்றுலா போல எங்கு வேண்டுமானாலும் புனிதப் பயணம் சென்றுவர முடியும்.

ஏற்பாடுகள்

பெரியவர்கள் ஒரு புனிதத்தலத்துக்கு யாத்திரை செல்வது என்று முடிவெடுத்துவிட்டால், அந்த இடத்தைப் பற்றிய தகவல்கள், தரிசிக்க சரியான நேரம் போன்றவற்றை அறிந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து வசதிகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். பண வசதிக்குத் தகுந்தாற்போல் பயண முன்பதிவு, தங்குமிடம் அனைத்தையும் முடிவு செய்ய வேண்டும். பயண வழிகாட்டிப் புத்தகங்கள் முதல் செல்போன் செயலி வரை ஏராளமான விஷயங்களை இதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சூழ்நிலைக்குத் தகுந்த உடைகள் எடுத்துக்கொள்வதுடன், உடல் நிலைக்குத் தேவையான மருந்து மாத்திரைகளைச் சற்றுக் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பயணத்துக்கு முன்னர், மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து, உடல்நிலையைப் பற்றிய தகவல்களை அறிந்துகொண்டால், செல்லும் இடங்களில் அவஸ்தையுறுவதைத் தவிர்க்க முடியும்.
நம்மில் பலரால் பெரியவர்களின் ஆன்மிகப் பயணத்தில் அவர்களுக்குத் துணையாகச் சென்றுவர முடிவதில்லை. அதற்குப் பண வசதி முதல், வேலைப் பளு வரை பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். இன்று பெரியவர்களை யாத்திரைக்கு அனுப்பிவைக்கப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. மெக்காவோ, ஜெருசலமோ, காசியோ எதுவாக இருந்தாலும் அதற்கென்று உள்ள வழிமுறைகளில் அனைத்து வசதிகளோடும் அவர்களது பயணத்துக்கு ஏற்பாடு செய்ய முடியும். நம் தேவையை நிறைவு செய்ய ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.

எளிய வழிகள்

தைப்பூசத்திற்குப் பழனி செல்வார்கள். சென்னையில் இருப்பவர்கள் திருத்தணிக்குச் செல்வார்கள், ஆனால், காரைக்குடியிலிருந்து நகரத்தார் சமூகத்தினர் காசி வரை நடந்தே செல்கிறார்கள். அவர்கள் மூன்று மாத காலத்தில் காசியைச் சென்றடைகிறார்கள். அப்படிச் சென்று வருபவர்களுக்கு ‘காசி ஸ்ரீ’ என்ற பட்டமும் வழங்கப்படுகிறது. 25 வயதிலிருந்து 70 வயது வரை இருப்பவர்கள் இதில் பயணப்படுகிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் அவர்களுடைய சமூக உறவுகள் அவர்களை வரவேற்று அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தருகிறார்கள்.

மென்பொருள் துறையில் வேலைசெய்யும் ஒருவரின் பெற்றோர் 70 வயதைக் கடந்தவர்கள். மகன், மகள் என்று இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்வித்து, பேரப் பிள்ளைகளை ஐந்து வயது வரை வளர்த்துத் தந்தார்கள். இப்போது மகள் வீடு, மகன் வீடு என மாறி மாறி வசித்தாலும் வாரத்தில் ஒருநாள் அருகில் உள்ள ஊருக்குச் சென்று சாமி தரிசனம் செய்தல், மாதத்தில் ஒரு நாள் சொந்த ஊருக்குச் சென்று நண்பர்களை, உறவினர்களைப் பார்த்து வருதல், ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்தியாவின் ஏதாவது ஒரு இடத்திற்குச் சென்று வருதல், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அயல்நாடு செல்லுதல் என்று அந்த மூத்த தம்பதியினர் நிம்மதியாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை மகனும் மகளும் இணைந்தே செய்கிறார்கள்.

ஆனால், எல்லோருக்கும் இப்படியான வாய்ப்புகள் அமைந்துவிடுவதில்லை. வெகு தூரம் செல்ல வேண்டும் என்பதல்ல. தமிழ்நாட்டிலேயே நாம் பல இடங்களைப் பார்த்திருக்க மாட்டோம். நவ திருப்பதி, நவ கைலாசம், நவக்கிரக ஸ்தலம், அறுபடை வீடு, 108 திவ்ய தேசத்தில் தமிழகத்தில் இருக்கும் இடங்கள் எனப் பல யாத்திரை வசதிகளைத் தமிழ்நாடு சுற்றுலாத் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆரோக்கியமான உணவு, தங்குமிடம், தேவைப்பட்டால் மருத்துவ வசதி என அனைத்து வசதிகளையும் ரயில்வே மூலமும் பேருந்து மூலமும் ஏற்பாடு செய்ய வழிமுறைகள் உள்ளன.

பிள்ளைகளின் கடமை

நம் கனவுகளை நிறைவேற்றிய பெற்றோர்களின் கனவுகளை, ஆசைகளை, எண்ணங்களை நிறைவேற்றுவது நம் கடமை. அருகிலுள்ள குலதெய்வக் கோயிலுக்குப் பெற்றோர்களை அழைத்துச் செல்லலாம். அதற்குப் பெரிதாக பண வசதி தேவையில்லை. கொஞ்சம் வசதி இருப்பவர்கள் அந்தந்த மாநிலத்தில் உள்ள புனிதத் தலங்களுக்குப் பெற்றோர்களை அனுப்பிவைக்கலாம்.
இந்த ஆண்டு நடந்த அத்திவரதர் தரிசனத்தின்போது, 87 வயது நிரம்பிய ஒரு பெரியவரைச் சந்திக்க முடிந்தது. அத்திவரதரை மூன்றாவது முறையாகத் தரிசிப்பதாகக் கூறினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் மிக முக்கியமானவை - “நான் சிறுவயதில் அத்திவரதரைத் தரிசித்தபோது, நல்ல படிப்பு வர வேண்டும் என வேண்டினேன். அடுத்த முறை, என் பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என வேண்டினேன். ஆனால், இந்த முறை நாடெங்கும் நிலவும் தண்ணீர்ப் பஞ்சம் போக வேண்டும், மழை பெய்து விவசாயம் செழித்து நாடு நலம் பெற வேண்டும் என வேண்டினேன்” என்றார்.

அதுதான் எண்ணம், அதுதான் முதிர்வு, அதுதான் நிறைவு. தங்கள் வாழ்க்கையில் மிகச் சிறந்த மனிதர்களை உருவாக்கி, சூழலை மகிழ்வானதாக ஆக்கியிருக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கைப் பயணமே புனிதப் பயணம்தான். அவர்களது இறுதிக்கால ஆசையை இனிதாக நிறைவேற்றுவோம்!

(காற்று வீசும்...)

x