முதுமை எனும் பூங்காற்று - 9:  பாதுகாப்பில் அக்கறை அவசியம்


முதுமையில் தனிமை என்பது வெறும் மனம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; அது பாதுகாப்புத் தொடர்பானதும்கூட. வேலை காரணமாக வெளியூர்களில் பிள்ளைகள் வசிக்க, முதியோர் மட்டும் சொந்த ஊரில் தனித்து வாழ நேர்வது என்பது இன்றைக்குப் பரவலான நிகழ்வாகிவிட்டது. வயதான தம்பதியர் ஒருவருக்கொருவர் ஒத்தாசையுடன் வாழ்ந்தாலும், பாதுகாப்புத் தொடர்பான விஷயங்களில் அவர்கள் பிறரது உதவியை நாட வேண்டிய சூழலில்தான் இருக்கிறார்கள். எனவே, முதியோரின் பாதுகாப்பு பற்றிப் பேசுவது அவசியம்.



இவ்விஷயத்தில் முதியோர் வசிக்கும் சூழல், அண்டை வீட்டாருடனான உறவு, காவல் துறை எனப் பல அம்சங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

சூழல்

இன்றைய அவசர உலகில் யாருக்கும் யாரையும் கவனிப்பதற்கு நேரமில்லை. அக்கறையும் இல்லை. தனித்தனியாக வாழ ஆரம்பித்து
விட்டோம். எனவே, தத்தமது பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அவரவர் செய்துகொள்ள வேண்டியது அவசியம். முதியோர் வசிக்கும் சூழல் தொடர்பான முழுமையான புரிதலும் அவசியம்தான்.

இன்றைக்குத் தனி வீடுகள் என்றாலும், ‘பெரியவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என அருகில் இருப்பவர்கள் யாரும் அவர்களை அதிகம் கவனிப்பதில்லை. அடுக்கு மாடிக் குடியிருப்புகள் என்றால் நிலைமை இன்னும் மோசம். வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்கவே நேரம் போதாது என்று வீட்டுக்குள்ளேயே பலரும் முடங்கிவிடுகிறார்கள். இதனால், அண்டை வீட்டில் வசிக்கும் பெரியவர்களைப் பற்றி அக்கறை செலுத்த பெரும்பாலானோரால் முடிவதில்லை. அந்த நிலை மாற வேண்டும்.

பெரியவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதல் அவர்களுடன் யாரேனும் பேசிக்கொண்டிருப்பதுதான். ஆனால், இங்கு யாருக்கும் பிறரிடம் பேசுவதற்கு நேரமில்லை. எனவேதான், பெரு நகரங்களில் மூத்த குடிமக்களுக்கு என அனைத்து வசதிகளுடன் கூடிய பிரத்யேகக் குடியிருப்புகள் உருவாகிவருகின்றன. அங்கு முதியோர் தங்கள் வயதை ஒத்த மனிதர்களுடன் உரையாடலாம். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். தனி இடங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இங்கு பெரியவர்களுக்குப் பாதுகாப்பு வசதிகள் திருப்திகரமானவையாகவே இருக்கின்றன. மருத்துவ வசதி, சாப்பாடு வசதி, கேளிக்கைகள், பக்தி சார்ந்த விஷயங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் தங்கள் பெற்றோர்கள் இங்கே வசிப்பது நல்லது என்று வெளிநாடுகளில் இருக்கும் பிள்ளைகள் விரும்புகின்றனர்.

நகரங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் பெரும்பாலும் பெரியவர்கள் தனியாக இருப்பதில்லை. எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருப்பதாலும், அருகில் தெரிந்தவர்களும் உறவினர்களும் இருப்பதாலும் ஓரளவு பாதுகாப்பும் கண்காணிப்பும் சாத்தியமாகிறது.

பாதுகாப்பற்ற சூழல்

இப்போதெல்லாம், ‘வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை’ எனும் கொடுமையான செய்திகள் அடிக்கடி கண்ணில் படுகின்றன. தனி வீடாக இருந்தாலும், அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும் முதியோருக்கு ஆபத்து அதிகமாக இருக்கிறது. வீடு புகுந்து திருட நினைப்பவர்களுக்கு எளிய இலக்காக இருப்பது முதியோர்தான். பணம், நகை என்றால் பரவாயில்லை. சில சமயம் இந்தச் சம்பவங்கள், வயதானவர்களின் உயிரையும் பலிவாங்கிவிடுவதுதான் பரிதாபம். தனியாக இருக்கும் முதியோரின் வீடுகளை நோட்டமிடுவது, அவர்களின் சம்பாஷணைகளிலிருந்து தகவல்களைத் தெரிந்துகொள்வது என்று கொள்ளையர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ஒரு மூதாட்டி தன் வீட்டில் தனியே வசித்துவந்தார். மகன்கள் வெளிநாட்டிலும் மகள் வெளியூரிலும் வசித்தனர். அந்த மூதாட்டி, தன்னுடைய மகளுக்காக நகை, வெள்ளிப் பாத்திரங்களை வாங்கி வைத்திருந்தார். அதைப் பற்றி பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார். அன்று இரவே, வீட்டின் மொட்டை மாடி வழியே திருடர்கள் உள்ளே நுழைந்துவிட்டார்கள். மூதாட்டி தைரியமானவர். திருடர்கள் வருகிறார்கள் என்பதை உணர்ந்து சத்தம் போட்டிருக்கிறார். உடனே, திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் போலீஸிடம் பிடிபட்ட திருடர்கள், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் மூதாட்டி பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்த பின்னர்தான், அவரது வீட்டில் திருடுவதற்குத் திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார்கள். ஆக, பெரியவர்கள் மட்டுமல்ல... எல்லாருமே பொது இடங்களில் குடும்ப விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கலாம். அதிகப் பணம், நகை உபயோகிப்பதைத் தவிர்க்கலாம்.

எச்சரிக்கை உணர்வு

எப்போதும் யாரையும் முழுமையாக நம்பிவிடக் கூடாது. நம்பகமான வேலையாட்களை வைத்துக்கொள்வது நல்லது. நம்பிக்கைக்குரிய ஆட்டோ அல்லது கார் ஓட்டுநரின் வாகனத்தில் வெளியே செல்வதையே வழக்கமாக்கிக்கொள்ளலாம். பாதுகாப்பு உணர்வு என்பதைத் தாண்டி பரிவுடன் கூடிய ஒரு பந்தத்தை இது உருவாக்கும்.

என் நட்பு வட்டத்தில் உள்ள ஒரு முதிய பெண்மணியின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். சமீபத்தில், இரவில் அந்த மூதாட்டிக்குக் காய்ச்சல் அதிகமாகவே, தனக்கு நன்கு அறிமுகமான ஆட்டோக்காரர் உதவியுடன் மருத்துவமனைக்குச் சென்றார். காய்ச்சலின் வீரியம் அதிகமாக இருக்கவே மருத்துவமனை
யில் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மகனைப் போல அனைத்து உதவிகளையும் செய்துவிட்டு அந்த ஆட்டோக்காரர் சென்றார். அதன் பின்னர்தான் பிள்ளைகள் வந்து சேர்ந்தார்கள்.

“அந்த ஆட்டோக்காரத் தம்பி இல்லைன்னா… நான் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன்” என அந்த மூதாட்டி கண்ணீருடன் சொன்னது மறக்க முடியாதது.

அரவணைப்பு அவசியம்

எவ்வளவு வசதிகள் இருந்தாலும் நாம் பாதுகாப்பில்லாமல் கவனிப்பாரற்று இருக்கிறோம் என்ற எண்ணமே முதியோருக்கு மேலும் அழுத்தத்தைத் தருகிறது. எனவே,
பிள்ளைகள் எங்கு வசித்தாலும் பெரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னர், நெல்லை மாவட்டத்தில் தனியாக இருந்த முதிய தம்பதியினர் மீது தாக்குதல் நடந்தது. அதைத் துணிச்சலுடன் அவர்கள் சமாளித்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அரசின் விருதும் அவர்களுக்குக் கிடைத்தது. அதுபோல் துணிச்சலுடனும் விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியம்.

தனியாக வசிக்கும் முதியோரைக் கணக்கில் எடுத்து அவர்களைக் கவனித்துக்கொள்ளுமாறு அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் துறையும் அக்கறையுடன் இவ்விஷயத்தில் முனைப்பு காட்டுகிறது. அவசர அழைப்பிற்கான எண்களையும் தருகிறது. நாம் தான் அதையெல்லாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு என்பது உணர்வு மற்றும் செயல். அந்த உணர்வை, பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் ஏற்படுத்த வேண்டும். கைக்கெட்டும் இடத்தில் அழைப்பு மணி, செல்போன், கண்காணிப்பு கேமரா போன்ற ஏற்பாடுகளைச் செய்தல் முதியோருக்குப் பாதுகாப்பு உணர்வையும், தவறு செய்ய நினைப்பவர்களுக்கு அச்ச உணர்வையும் ஏற்படுத்தும். இதனால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

குழந்தை தனது தாயிடம்தான் பாதுகாப்பு உணர்வைப் பெறும். கருவறையில் இருந்தது முதல் பருவ வயது வரும் வரையில் தாய் - தந்தையின் பாதுகாப்பில் இருப்பதையே குழந்தை விரும்பும். பெரியவர்கள் தங்கள் செயலைத் தாங்களே செய்து கொள்ளமுடியாத நிலைக்குச் செல்லும்போது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலை உருவாகும். குழந்தைப் பருவத்தில் எப்படி நம்மைப் பாதுகாப்பாக உணர வைத்தார்களோ, அதே உணர்வை அவர்களுக்குத் திருப்பித் தர வேண்டியது பிள்ளைகளாகிய நம்முடைய 
கடமை!

(காற்று வீசும்...)

x